Published:Updated:

`பொதுச் சொத்துகளை சேதப்படுத்தினால் சுட்டுவிடுங்கள்!’ -மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு

அமைச்சர் சுரேஷ் அங்காடி
அமைச்சர் சுரேஷ் அங்காடி

`போராட்டத்தின்போது பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்துபவர்களைக் கண்டதும் சுட்டுவிடுங்கள்’ என மத்திய ரயில்வே இணை அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையாகியுள்ளது.

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் மத்திய அரசின் சட்டத் திருத்தத்துக்குக் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

நாடு முழுவதும் நடைபெற்ற போராட்டத்தில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள், டெல்லி, மேற்கு வங்கம் போன்ற பல இடங்களில் வன்முறைகள் வெடித்தன. இவற்றில் பேருந்துகள், ரயில்கள் போன்றவை தீக்கிரையாக்கப்பட்டன.

போராட்டம்
போராட்டம்

இந்தநிலையில், போராட்டக்காரர்கள் பொதுச் சொத்துகளுக்கு குறிப்பாக, ரயில்களைச் சேதப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி. இதுதொடர்பாக அவர் ஏ.என்.ஐ ஊடகத்துக்கு அளித்துள்ள பேட்டியில், ``ரயில்வே நிர்வாகம், மேம்பாடு, தூய்மை போன்ற அனைத்திலும் சுமார் 13 லட்சம் தொழிலாளர்கள் பணி செய்து வருகிறார்கள். எதிர்க்கட்சிகளால் தூண்டப்படும் சில சமூகவிரோதிகள்தாம் நாட்டுக்குத் தீங்கு விளைவிக்கின்றனர்.

`நாட்டில் இருக்கவே பயமா இருக்கு!’ -நள்ளிரவில் நடந்ததைக் கண்ணீருடன் விவரிக்கும் மாணவி #JamiaProtest

தற்போது கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத் திருத்தம், இந்தியாவில் உள்ள எந்தக் குடிமக்களையும் பாதிக்காது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளைச் சேர்ந்த சிறுபான்மை மக்களுக்கே இந்தச் சட்டத்தில் இடம் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. அதைத் தவறாகப் புரிந்துகொண்டுள்ள நம் இந்தியாவில் உள்ள சிறுபான்மை மக்கள், தேவையில்லாமல் பிரச்னை செய்து நாட்டின் பொருளாதாரத்துக்குச் சேதம் விளைவிக்கிறார்கள். அவர்கள் காங்கிரஸ் போன்ற எதிர்க்கட்சிகளின் ஆதரவால் இதைச் செய்கின்றனர். நான் இதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வன்முறையால் பாதிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகம், ரயில்வே அதிகாரிகளுக்கு நான் அறிவிப்பு வெளியிடுகிறேன். ஒருவேளை, தேவையில்லாமல் யாரேனும் பொதுச் சொத்துகள் மற்றும் ரயில்வே சொத்துகளை அடித்து நொறுக்கினால், அவர்களைப் பார்த்ததும் சுட்டுவிடுங்கள். இதை ஒரு அமைச்சராக நான் அறிவுறுத்துகிறேன். ஏனெனில், அவை அனைத்தும் மக்கள் வரிப்பணத்தில் இயங்குகிறது. ஒரு ரயிலை உருவாக்க வேண்டும் என்றால் வருடங்கள் தேவைப்படும்.

ரத்தம் சிந்தி தொழிலாளர்கள் உருவாக்கும் பொருளை சில விநாடிகளில் கொளுத்திவிடுகிறார்கள். அதனால்தான் கூறுகிறேன், ரயில் மீது யாரேனும் கல்லெறிந்தாலோ பொருள்களைச் சேதப்படுத்தினாலோ வல்லபாய் படேல் செய்ததுபோல கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேசியுள்ளார்.

இவரது கருத்து தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு