Published:Updated:

`குடித்துவிட்டுச் சிக்கினால் ஊருக்கே கறி விருந்து வைக்கணும்!‍'- விநோத தண்டனை விதிக்கும் கிராமம்

தங்கள் ஊரில் குடிபோதைக்கு அடிமையான ஆண்களைக் கட்டுப்படுத்த விசித்திர தண்டனை விதித்துள்ளது குஜராத்தில் உள்ள கிராமம் ஒன்று.

கறி விருந்து
கறி விருந்து

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு தனிப்பட்ட, விநோதமான நடவடிக்கைகள் கடைப்பிடிக்கப்படும். அப்படி குஜராத்தில் உள்ள ஒரு கிராமத்திலும் மது அருந்துபவர்களுக்கு விநோத தண்டனை விதிக்கப்படுகிறது. நீண்ட வருட நடைமுறையான இது தற்போது பிரபலமாகியுள்ளதால் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மது பழக்கம்
மது பழக்கம்

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா (Banaskantha) மாவட்டத்தில் உள்ளது கட்டிசிதாரா (Khatisitara) என்ற பழங்குடி மக்கள் வாழும் கிராமம். இந்த கிராமத்தில் உள்ள பெரும்பாலான ஆண்கள் மதுப் பழக்கத்துக்கு அடிமையானவர்கள். இவர்கள் தினமும் குடித்துவிட்டு, தங்கள் வீடுகளில் சண்டை போடுவது, மக்களைத் தொந்தரவு செய்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

ஆண்களின் குடிப்பழக்கத்தினால் சில நேரங்களில் கொடூரமான கொலைகளும் பக்கத்துக் கிராமத்துடன் சண்டைகளும் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ஆண்களின் இந்த மதுப் பழக்கத்தை ஒழிக்க நினைத்த கிராமப் பெரியவர்கள், ஒரு பஞ்சாயத்துக் கூட்டத்தைக் கூட்டி, ‘இனி மது அருந்திவிட்டு ஊருக்குள் வருபவர்களுக்கு 2000 ரூபாய் அபராதமும் தகராறு செய்தால் 5000 ரூபாய் அபராதமும் கட்டவேண்டும்’ என உத்தரவிட்டுள்ளனர்.

கறி விருந்து தண்டனை
கறி விருந்து தண்டனை

இதில் என்ன விநோதம் உள்ளது எனப் பலரும் நினைக்கலாம். ஆனால், புத்திசாலித்தனமாக யோசித்த பெரியவர்கள், அபராதத்தோடு நிறுத்தாமல் குடித்துவிட்டு மக்களிடம் சிக்கினால், அந்த நபர் ஊருக்கே கறி விருந்து வைக்க வேண்டும் என்ற கட்டளையையும் பிறப்பித்துள்ளனர். அந்த கிராமத்தில் உள்ள மொத்த நபர்களுக்கும் ஒரு வேளை கறி விருந்து அளிக்க ரூ.20,000 முதல் ரூ.25,000 வரை செலவாகும்.

நாட்டுக்கோழிகள் அத்தனையும் நாட்டுக்கோழிகள் அல்ல... ஏன்?

இவ்வளவு செலவு செய்யப் பயந்து பல ஆண்கள் குடிப்பதில்லை எனக் கூறப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு இந்த விநோத தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. “எங்கள் ஊரில் குடிக்கு அடிமையான ஆண்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களின் குடிப் பழக்கத்தைக் குறைக்கவே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குடி போதை
குடி போதை

எங்கள் கிராமத்தில் மொத்தம் 800 பேர் உள்ளோம். குடிபோதையில் சிக்கினால், அவர் மொத்தப் பேருக்கும் கறி விருந்து வைக்க வேண்டும். விருந்து வைக்க நிறைய செலவாகும் என்பதால் பலர் மதுப் பழக்கத்தைத் தவிர்த்துள்ளனர். தண்டனை விதிக்கப்பட்ட ஆண்டு நான்கு பேர் குடித்துவிட்டு மாட்டிக்கொண்டனர். 2018-ம் ஆண்டு பக்கத்துக் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் மாட்டிக்கொண்டு ஊருக்கே விருந்து வைத்தார். இந்த வருடம் ஒருவர்கூட குடியால் சிக்கவில்லை” என கட்டிசிதாரா கிராமத்தைச் சேர்ந்த சர்பாஞ்ச் கிம்ஜி, டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்குப் பேட்டியளித்துள்ளார்.