Published:Updated:

`ஊரடங்கு நீடித்தால் கொரோனா இறப்பைவிட பசி இறப்பு அதிகமாகிவிடும்!’ - இன்ஃபோசிஸ் நிறுவனர் எச்சரிக்கை

இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி
இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி

``இந்தியாவில் 190 மில்லியன் மக்களுக்கும் மேற்பட்டோர் அமைப்பு சாரா தொழிலாளர்களாகவும் அல்லது சுய தொழில் செய்பவர்களாகவும் உள்ளனர். இந்த ஊரடங்கு நிலை நீடித்தால் இவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படையும்” - நாராயண மூர்த்தி.

கொரோனா வைரஸால் உலகின் பல நாடுகளும் தங்களது இயல்புநிலையை இழந்துள்ளன. உலகம் முழுவதும் 30 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர். இந்தியாவிலும் இந்த வைரஸ் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையை இழந்து உணவு உட்பட பல அத்தியாவசியத் தேவைகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இந்தநிலையில், இந்தியாவில் ஊரடங்கை மேலும் நீடித்தால் கொரோனாவால் ஏற்படும் இறப்பைவிட பசியால் ஏற்படும் இறப்பு அதிகமாகி விடும் என இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தி தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா
கொரோனா

கொரோனாவால் ஏற்பட்ட இந்த இக்கட்டான சூழ்நிலை குறித்து வணிகத் தலைவர்களிடம் (business leaders) வெபினார் மூலம் புதன்கிழமை அவர் பேசுகையில்,``தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இந்தியாவால் தொடர்ந்து இயங்க முடியாது என்பதை நாம் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில், ஒரு சமயத்தில் கொரோனாவால் ஏற்படும் இறப்பைவிட பசியால் ஏற்படும் இறப்பு அதிகமாகக் கூடும். பிற வளர்ந்த நாடுகளைவிட இந்தியாவில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட இறப்பு விகிதம் 0.25% - 0.5% என்ற குறைந்த அளவிலேயே உள்ளது. இதனால், இந்தியா கொரோனா தொற்றை புதிதாக ஏற்பட்டுள்ள இயல்பான நிலை என்று கருத்தில் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் இதனால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய மக்களைப் பாதுகாக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனா தொற்று 31,000-க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 1,008 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பிற நாடுகளைவிட இந்தியாவில் குறைந்த அளவிலான பாதிப்பு ஏற்பட முக்கியக் காரணமாக இங்கு கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கு கூறப்படுகிறது. இந்தியாவில் வருடத்துக்கு 9 மில்லியன் மக்கள் இறக்கிறார்கள். இதில் நான்கில் ஒரு பகுதி மக்கள் இந்தியாவில் ஏற்படும் மாசு காரணமாக உயிரிழக்கின்றனர். இதை கடந்த இரண்டு மாதங்களாக ஏற்பட்டுள்ள இறப்பு எண்ணிக்கையோடு ஒப்பிட்டால் ஒன்றுமே இல்லை. அதனால், இதற்குப் பெரிய அளவில் பீதி அடைய வேண்டாம் எனவும் நாராயண மூர்த்தி கூறியுள்ளார்.

வெளிச்சத்திற்கு வந்த இன்ஃபோஸிஸ் விவகாரம்... பங்குச் சந்தையில் நடந்தது என்ன?

மேலும், ``இந்தியாவில் 190 மில்லியன் மக்களுக்கும் மேற்பட்டோர் அமைப்பு சாரா தொழிலாளர்களாகவும் அல்லது சுய தொழில் செய்பவர்களாகவும் உள்ளனர். இந்த ஊரடங்கு நிலை நீடித்தால் இவர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிப்படையும். ஏற்கெனவே பல தொழில்கள் 15 சதவிகித லாபம் முதல் 20 சதவிகித லாபத்தை இழந்துள்ளன. இது அரசாங்கத்தின் வரி வசூலில் நிச்சயம் எதிரொலிக்கும்” என்று கூறியுள்ளார். இந்த வருடம் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கடந்த ஆண்டின் 4.5 சதவிகிதத்திலிருந்து 1.9 சதவிகிதத்துக்கு வந்துவிடும் என ஐஎம்எஃப் அமைப்பு கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நாராயணமூர்த்தி இதுதொடர்பாக மேலும் பேசும்போது, ``இந்தியாவில் கொரோனா தொற்றுக்கான சோதனை விகிதம் குறைவாகவே உள்ளது. இதனால் இந்தியாவில் உள்ள தொழில் முனைவோர் இதை விரைவுபடுத்த புதிய வழிமுறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். உலகம் முழுவதும் இந்த நோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், இவை இந்திய மரபணுவுக்கு ஏற்றதாக இருக்குமா என்பது சந்தேகமே. இதனால் கொரோனா வைரஸை புதிய இயல்பான ஒன்றாகவே இந்தியர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும்" என்றார்.

கொரோனா
கொரோனா
Representational image

நாஸ்காம் தொழில்நுட்ப நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான நாராயண மூர்த்தி அந்த அமைப்பை அலுவலகம் திரும்புவதற்கான சோதனை ஆய்வை மேற்கொள்ளுமாறு கூறியுள்ளார். இதில் ``அலுவலகத்துக்கு வரும் ஊழியர்களை பாதுகாப்பு விதிகளை சரியாக பின்பற்றுமாறு வலியுறுத்த வேண்டும் . பின்னர் அந்தத் தகவல்களை அரசுடன் பகிர்ந்துகொள்ளலாம். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க மூன்று ஷிப்ட்களாக தொழிலாளர்களைப் பிரிக்கலாம். இதன்மூலம் அதிகக் கூட்டத்தையும் நம்மால் கட்டுப்படுத்த முடியும். கொரோனா காரணமாக உலகளவில் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு வாய்ப்புகள் வரவுள்ளன. உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் செலவுகளைக் குறைத்துக்கொள்ள தொழில்நுட்பத்தில் முதலீடு செய்ய தொடங்குவார்கள். இதனால் இந்திய நிறுவனங்கள் சரியான சேவையை வழங்கினால் வளர்ச்சியைப் பெறலாம்" என்றார்.

நாஸ்காம் அமைப்பு ஏற்கெனவே தரவு உத்திகளைப் பயன்படுத்தி அதிக வேலையாட்களை அலுவலகத்துக்கு வர முயற்சி மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளது. இதுபற்றி நாஸ்காம் நிறுவனத்தின் தலைமை அதிகாரி சங்கீதா குப்தா கூறுகையில் ``எங்கள் அலுவலகத்தில் 10 சதவிகிதம் முதல் 15 சதவிகித வேலையாட்களுடன் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளோம். எல்லா ஊழியர்களையும் ஒரே நேரத்தில் அழைக்காமல் சிலரை மட்டும் அழைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதனால் தனிமனித இடைவெளியையும் பின்பற்ற முடியும். பின்னர் மெதுவாகப் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவுள்ளோம். அரசாங்கமும் மக்கள் வேலைக்கு திரும்புவதற்கான உத்தியை வகுக்க வேண்டும். இதனால் இந்தியாவின் தொழில்துறை பயனடையும்" என்றார்.

ஊரடங்கு நீடித்தால் விவசாயிகள், தொழிலாளிகள், கடை வைத்திருப்பவர்கள் நிலை என்ன? #WhatAfterMay3
அடுத்த கட்டுரைக்கு