Published:Updated:

`தொழிலாளர்களை அனுப்பிவிட்டு ஊரடங்கு அறிவித்திருக்கலாம்!’ - பிரதமருக்கு மருத்துவ வல்லுநர்கள் கடிதம்

புலம்பெயர் தொழிலாளர்கள்
புலம்பெயர் தொழிலாளர்கள் ( AP )

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை முன்னரே தங்கள் ஊர்களுக்கு அனுப்பியிருந்தால் வைரஸ் பரவலைத் தடுத்திருக்கலாம் என மருத்துவ வல்லுநர்கள் பிரதமருக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போது வரை இங்கு வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,82,143 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5,164 ஆகவும் உள்ளது. இந்தியாவில் 4-ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.

மருத்துவர்கள்
மருத்துவர்கள்

இந்நிலையில் இந்தியாவில் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு தொடர்பாகவும், வைரஸ் பரவல் குறித்தும் எய்ம்ஸ், ஜே.என்.யு, பிஹெச்யு, இந்திய பொதுச் சுகாதார அமைப்பு, இந்திய சமூக நோய்த்தடுப்பு, இந்தியத் தொற்றுநோய் தடுப்பு அமைப்பு ஆகிய அமைப்பைச் சேர்ந்த பல மருத்துவ வல்லுநர்கள் இணைந்து பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல் தெளியாகியுள்ளது.

அந்தக் கடிதத்தில், `இந்தியாவில் முதன்முதலாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டபோது இங்கு 606 பேருக்கு மட்டுமே. ஆனால் தற்போது ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு வைரஸ் பரவிவிட்டது. புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில்கள், சாலை மார்கமாக நடந்து, சைக்கிள் எனப் பல வழிகளில் நகரங்களிலிருந்து தங்கள் சொந்த ஊருக்குப் பயணப்பட்டனர். அவர்கள் கொரோனா தொற்றுக்குள்ளாகி நாட்டின் மூலை முடுக்கெல்லாம் குறிப்பாக, கிராமப்புறங்களுக்கு தங்களுக்குத் தெரியாமலே வைரஸை கடத்திச் சென்றுள்ளனர்.

தொழிலாளர்கள்
தொழிலாளர்கள்
Representational image \ AP

இந்தியாவில் பாதிப்பு குறைவாக இருந்தபோதே, புலம் பெயர்ந்தவர்களைத் தங்கள் சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டு பிறகு, ஊரடங்கை அறிவித்திருந்திருந்தால் கொரோனா பரவல் உச்சத்தை எட்டாமல் தடுத்து அதன் வேகத்தையும் குறைத்திருக்கலாம். சிறந்த ஊரடங்கு, நோய் பரவுதல், நோயைக் கட்டுப்படுத்தும் திறன் ஆகியவற்றை நன்கு புரிந்துகொண்ட தொற்றுநோய் நிபுணர்களிடம் மத்திய அரசு கலந்தாலோசித்திருந்தால் சிறப்பான ஊரடங்கை அமல்படுத்தியிருக்கலாம்.

மத்திய ஆட்சியாளர்கள் தங்கள் நிர்வாகத்தில் இருக்கும் உயர் அதிகாரியை மட்டுமே நம்பி இதைச் செயல்படுத்தியுள்ளனர் என்றே நாங்கள் கருதுகிறோம். தொற்றுநோய், பொதுச் சுகாதாரம், தடுப்பு மருத்துவம், விஞ்ஞானம் ஆகிய துறைகளில் இருக்கும் வல்லுநர்களுடனான அரசின் ஆலோசனை மிகவும் குறைவாகவே இருந்தது.

ஊரடங்கு
ஊரடங்கு

இந்தியாவில் கொரோனா சோதனை முடிவுகள் மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டும் அப்போதுதான் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் எளிதாக மருந்தை அணுக முடியும். அதேபோல் மக்களிடையே தீவிரமான சமூக விலகல் கடைப்பிடிப்பதை வலியுறுத்த வேண்டும். மேலும் வைரஸில் இருந்து மீண்டவர்கள் சமூகத்தில் இருந்து விலக்கி வைக்கப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சளி, இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளவர்களைத் தொடர்ந்து கண்காணித்துத் தனிமைப்படுத்த வேண்டும்” போன்ற பல விஷயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு