Published:Updated:

`ராஜினாமாதான் முடிவு என்றால் அதையும் செய்வேன்!' -குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக பா.ஜ.க எம்.எல்.ஏ.

அஸ்ஸாம் மாநிலத்தில் நடக்கும் போராட்டத்தை நிறுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அம்மாநில எம்.எல்.ஏ-க்கள் முதல்வரிடம் வலியுறுத்தியுள்ளனர்.

அஸ்ஸாம் போராட்டம்
அஸ்ஸாம் போராட்டம்

குடியுரிமைச் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல மூலைகளிலும் போராட்டம் நடந்துவருகிறது. குறிப்பாக இந்த போராட்டத்தை எதிர்க்கும் மாநிலங்களில் அஸ்ஸாம்தான் முதன்மையாக உள்ளது. காரணம், குடியுரிமைச் சட்டத்தால் தங்களின் கலாசாரத்தை இழக்க நேரிடும் என அங்குள்ள பழங்குடியின மக்கள் அச்சப்படுவதுதான்.

அஸ்ஸாம் போராட்டம்
அஸ்ஸாம் போராட்டம்

இதனால் மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள மக்கள் தொடர்ந்து ஒரு வாரமாகப் போராட்டம் நடத்திவருகின்றனர். அஸ்ஸாம் மாநிலம் கௌஹாத்தியில் கடந்த வாரம் நடந்த போராட்டமும் கலவரமும் தேசிய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. இந்தப் போராட்டத்துக்குப் பின்னரே குடியுரிமைச் சட்டத் திருத்த எதிர்ப்பு போராட்டம் நாடு முழுவதும் பரவத் தொடங்கியது.

அஸ்ஸாமை பொறுத்தவரை அங்கு சர்பானந்தா சோனாவால் தலையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. அஸ்ஸாம் போராட்டத்தின்போது பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் அலுவலகங்கள் போராட்டக்காரர்களால் சூறையாடப்பட்டன. திப்ரூகர் தொகுதி எம்.எல்.ஏ பிரசாந்த் புகனின் வீடும் முற்றிலும் அடித்து நொறுக்கப்பட்டது. இந்தநிலையில், தங்கள் மாநிலத்தில் நடக்கும் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும்படி ஆளும் பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் 12 பேர் முதல்வருக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர்.

அஸ்ஸாம் போராட்டம்
அஸ்ஸாம் போராட்டம்

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முதல்வரை நேரில் சந்தித்த 12 எம்.எல்.ஏ-க்களும், மக்களின் கடும் கோபத்துக்கு தாங்கள் ஆளாவதாகவும் அதனால் இந்த விவகாரத்தில் பிரதமரைத் தலையிட வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எம்.எல்.ஏ பத்மா ஹஸாரிகா, ``குடியுரிமைச் சட்டத் திருத்தத்தால் தங்களின் மொழி, கலாசாரம் போன்றவை பாதிக்கப்படும் என மக்கள் அஞ்சுகிறார்கள். எனவே, மக்களின் பாதுகாப்பு தொடர்பாக வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்தப் போராட்டத்தின் மூலம் அரசியலமைப்பின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் முதல்வரிடம் நாங்கள் கேட்டுக்கொண்டோம்.

`குடியுரிமை பற்றிக்கூடத் தெரியாது; ஆனால்?’ - அஸ்ஸாம் துப்பாக்கிச்சூடு கோரத்தை விவரிக்கும் நண்பர்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமைச் சட்டத் திருத்தம் தொடர்பான கொள்கை எங்களுக்குப் புரிகிறது. ஆனால், அதைவிட அஸ்ஸாம் மாநில மக்களின் நலமும் பாரம்பர்யமும் எங்களுக்கு மிக முக்கியமானது. இங்குள்ள மக்களின் கலாசாரத்தைக் காக்க மத்திய - மாநில அரசுகள் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதே எங்களின் ஒரே விருப்பம். கடந்த ஒரு வாரமாக மக்கள் வீட்டைவிட்டு வெளியில் வர அஞ்சுகிறார்கள். நாங்களும் அதே பயத்தில்தான் உள்ளோம்.

எம்.எல்.ஏ பத்மா ஹஸாரிகா
எம்.எல்.ஏ பத்மா ஹஸாரிகா

இன்னும் எத்தனை நாள்களுக்குத்தான் வீட்டிலேயே முடங்கிக் கிடப்பது என்று யோசித்துதான் தற்போது முதல்வரைச் சந்தித்தோம். மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். நாங்கள் அதைக் காப்பாற்ற வேண்டும் என நினைக்கிறோம். குடியுரிமைச் சட்டத்தை ரத்து செய்ய எனது ராஜினாமா வழிவகுக்கும் என்றால் அதற்கும் நான் தயாராக உள்ளேன். என் தொகுதி மக்கள் அனைவரும் ஒருமனதாக என்னை ராஜினாமா செய்யச் சொன்னால் நிச்சயம் என் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்வேன்” என்று தெரிவித்துள்ளார்.