Published:Updated:

`5-ம் தலைமுறை வாரிசால் சுயமாக வளர்ந்த மோடியை வீழ்த்த முடியாது!’- ராகுலை விமர்சித்த ராமச்சந்திர குஹா

ராகுல் - மோடி
ராகுல் - மோடி

ஐந்தாம் தலைமுறை வாரிசான ராகுல் காந்தியால், இந்திய அரசியலில் 'கடின உழைப்பாளி மற்றும் சுயமாக உருவான பிரதமர் மோடியை எதிர்க்க முடியாது' என்று வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில், கடந்த இரண்டு நாள்களாக கேரள இலக்கிய விழா நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு, நாடு மற்றும் இலக்கியம் தொடர்பாகப் பேசிவருகின்றனர். இரண்டாம் நாளான நேற்று நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, ‘தேசபக்தி vs மூர்க்க குணம்’ என்ற தலைப்பில் பேசினார். அவர் பேசும்போது, ராகுல் காந்தியையும் காங்கிரஸையும் விமர்சித்துள்ளார்.

ராமச்சந்திர குஹா
ராமச்சந்திர குஹா

``இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது காங்கிரஸ் மிகப்பெரும் கட்சியாக இருந்து நம் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டது. ஆனால், அதுவே பின்னாளில் பரிதாபகரமான குடும்பக் கட்சியாக மாறிவிட்டது. இந்தியாவில் இந்துத்துவா மற்றும் மூர்க்க குணம் வளர்ந்ததற்கு காங்கிரஸும் ஒரு காரணமாக இருந்துள்ளது. எனக்கும் ராகுல் காந்திக்கும் தனிப்பட்ட முறையில் எந்தப் பகையும் கிடையாது. அவர் ஒழுக்கமான நல்ல பண்பாளர். ஆனால், இளம் இந்தியாவுக்கு ஒரு குடும்பத்தின் ஐந்தாம் தலைமுறையைச் சேர்ந்த வாரிசு தேவையில்லை. கேரள மக்களான நீங்கள், இந்தியாவுக்காகப் பல அற்புதமான காரியங்களைச் செய்துள்ளீர்கள். ஆனால் நீங்கள் செய்த பேரழிவுகளில் ஒன்று, இங்கிருந்து ராகுல் காந்தியை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியதுதான்.

Vikatan

2024-ம் ஆண்டு நடக்கும் தேர்தலில், நீங்கள் மீண்டும் ராகுல் காந்தியைத் தலைவராகத் தேர்ந்தெடுத்தால், அது மோடிக்கும் பெரும் நன்மையாகிவிடும். நரேந்திர மோடி , ராகுல் காந்தியைப் போல இல்லாமல் இருப்பதுதான் அவருக்கு மிகப் பெரும் நன்மை. மோடி சுயமாக உருவானவர். அவர், 15 ஆண்டுகளாக ஒரு மாநிலத்தை ஆட்சிசெய்துள்ளார். அதனால் அவருக்கு நிர்வாகம் தொடர்பான அனுபவம் அதிகமாக உள்ளது. அவர் சிறந்த உழைப்பாளி, தன் விடுமுறை நாள்களை ஐரோப்பாவில் கழிப்பதில்லை. இவரைப் போல் ராகுல் காந்தியும் சிறந்த மனிதர், புத்திசாலி , கடின உழைப்பாளிதான். ஆனால், அவரின் ஐந்தாம் தலைமுறைதான் அவருக்கு மிகப்பெரும் பலவீனம்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

இந்தியா இன்னும் ஜனநாயகமாக மாறிவருவதை காந்திகள் (சோனியா காந்தி) உணரவில்லை. நீங்கள் டெல்லியில் உள்ளீர்கள், உங்கள் ராஜ்ஜியம் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கிக்கொண்டே வருகிறது. இருந்தும் நீங்கள் உங்களை ராஜா என அழைத்துக் கொள்கிறீர்கள். நேரு ஏன் ஒவ்வொரு தேர்தலின்போதும் தூண்டப்படுகிறார். மோடி ஏன் எப்போதும் நேரு செய்யாத விஷயங்களை விமர்சிக்கிறார். ஏனெனில், நேரு குடும்பத்தைச் சேர்ந்த ராகுல் இருப்பதால் அவருடன் சேர்ந்து நேருவும் விமர்சிக்கப்படுகிறார். ஒருவேளை, தற்போது ராகுல் காந்தி மட்டும் அரசியலில் இல்லை என்றால், மோடி தன் சொந்தக் கொள்கைகள், திட்டங்கள் அவற்றின் வெற்றி, தோல்வி ஆகியவற்றைப் பற்றிப் பேசுவார். ராகுல் காந்தி இருப்பதால்தான் அவரை விமர்சிக்கவே அதிக நேரம் செலவிடுகிறார்” என்று கடுமையாகப் பேசியுள்ளார். குஹாவின் பேச்சு, தேசிய அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு