Published:Updated:

`அவர்கள் மீது அன்பு இருந்தால் இத்தாலி அழைத்துச் செல்லுங்கள்!’ - ராகுலை விமர்சித்த மத்திய அமைச்சர்

ராகுல் காந்தி பா.ஜ.கவை விமர்சித்ததுக்குக் கடும் கண்டனம் தெரிவித்து ராகுலையும் கடுமையாக விமர்சித்துள்ளார் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்.

ராகுல் - கிரிராஜ்
ராகுல் - கிரிராஜ்

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதனால் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ஆளும் பா.ஜ.கவை கடுமையாக விமர்சித்து வருகிறது. அஸ்ஸாமில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``2016-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டுவந்த பணமதிப்பிழப்பை விடக் குடியுரிமைச் சட்டமும் என்.ஆர்.சியும் மோசமானவை.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

மக்களின் குரலைக் கேட்க பா.ஜ.க அரசு தயாராக இல்லை. அனைத்து மாநிலங்களிலும் இளைஞர்கள் போராடுகிறார்கள். அரசு அவர்களைப் பாதுகாக்காமல் துப்பாக்கிச்சூடு நடத்துகிறது. பா.ஜ.க எங்கெல்லாம் செல்கிறதோ அங்கெல்லாம் வெறுப்பு ஏற்படுகிறது. அஸ்ஸாமின் வரலாறு , மொழி கலாசாரத்தைச் சிதைக்க நாங்கள் அனுமதிக்கமாட்டோம்” என பா.ஜ.கவுக்கு எதிராக மிகவும் கடுமையாகப் பேசியிருந்தார்.

`பேச்சை மீறிச் சென்றான், இறுதியில்...! - அஸ்ஸாம் துப்பாக்கிச் சூட்டில் மகனை இழந்த தாய் கதறல்

இந்நிலையில் ராகுல் காந்தியின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார் மத்திய கால்நடைத்துறை மற்றும் பால்வள அமைச்சர் கிரிராஜ் சிங். “காங்கிரஸ் கட்சி, குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாகப் பொய்களைக் கூறி நாட்டைப் பிளவுபடுத்துகிறது. முன்னதாக யு.பி.ஏ அரசு குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாகப் பேசியது. ஆனால், அதையே இன்று நாங்கள் கொண்டுவந்தால் எதிர்க்கிறது. ராகுல் காந்திக்கு ஊடுருவல் காரர்கள் (அகதிகள்) மீது அன்பு இருந்தால் அவர்களை இத்தாலி அழைத்துச் செல்லட்டும்.

அமைச்சர் கிரிராஜ் சிங்
அமைச்சர் கிரிராஜ் சிங்

பாகிஸ்தானில் துன்புறுத்தப்படும் இந்துக்கள் மற்றும் பிற சிறுபான்மைக் குழுக்கள் முன்னதாக இந்தியாவில் குடிமக்களாக இருந்ததாகவும் அவர்கள் மீண்டும் இங்கு வந்தால் அதே கண்ணியத்துடன் அவர்கள் நடத்தப்பட வேண்டும் என்றும் மகாத்மா காந்தி கூறியுள்ளார். மத அடிப்படையிலான பிரிவினைவாதத்தைக் காங்கிரஸ் ஏற்றுக்கொண்டது. அதன் பின்னர் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தவர்கள், கிறிஸ்துவர்கள் போன்ற பலர் மத ரீதியிலான துன்புறுத்தலை எதிர்கொண்டனர். எங்கள் சகோதரிகள், பெண் குழந்தைகளின் மரியாதை கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்யும் சம்பவங்களும் நிகழ்ந்தன” என்று விமர்சித்துள்ளார்.