Published:Updated:

'மத்திய அரசு அனுமதித்தால் முதியவர்களுக்கு வீட்டிலேயே தடுப்பூசி' -மும்பை மாநகராட்சி

தடுப்பூசிக்கு காத்திருப்பவர்கள்
தடுப்பூசிக்கு காத்திருப்பவர்கள்

`மத்திய அரசு அனுமதி கொடுத்த பிறகே முதியவர்களுக்கு வீட்டில் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த முடியும்’ என்று மும்பை மாநகராட்சி தெரிவித்துவிட்டது.

மும்பையில் வயதானவர்கள், நடக்க முடியாத நிலையில் படுக்கையில் இருப்பவர்கள், ஊனமுற்றோருக்கு அவர்களுடைய வீட்டுக்கே சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த மும்பை மாநகராட்சிக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், `மத்திய அரசு முதியவர்களுக்கு வீட்டில் சென்று தடுப்பூசி செலுத்துவது குறித்து ஆய்வு செய்ய கமிட்டி அமைத்துள்ளது. அந்த கமிட்டி இதற்கான வழிமுறைகளை வகுத்து, மத்திய அரசு வெளியிட்ட பிறகுதான் முதியவர்களுக்கு வீட்டில் சென்று தடுப்பூசி செலுத்த முடியும்’ என்று தெரிவித்துவிட்டார்.

மாநகராட்சி கமிஷனர் இக்பால்
மாநகராட்சி கமிஷனர் இக்பால்

இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள், `மும்பை மாநகராட்சியால் முதியவர்களுக்கு வீட்டில் சென்று தடுப்பூசி செலுத்த முடியுமா?’ என்று கேட்டிருந்தனர். `அப்படி முடியுமென்றால் வீட்டுக்குச் சென்று தடுப்பூசி செலுத்த மத்திய அரசு அனுமதி கொடுக்காவிட்டாலும், நாங்கள் அனுமதி கொடுக்கிறோம்’ என்று நீதிபதிகள் தெரிவித்தனர். இது குறித்து பதிலளிக்க மும்பை மாநகராட்சி கமிஷனருக்கும் தலைமை நீதிபதி திபன்கர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மும்பை மாநகராட்சி தரப்பில் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் `மத்திய அரசு ஊனமுற்றோர், முதியோர், படுத்த படுக்கையாக இருப்பவர்களுக்கு வீட்டில் சென்று தடுப்பூசி செலுத்துவதற்கான நடைமுறைகளை வகுத்த பிறகுதான் வீட்டில் சென்று தடுப்பூசி செலுத்த முடியும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சி நிர்வாகம் மத்திய அரசு அனுமதி கொடுத்த பிறகுதான் முதியவர்களுக்கு வீட்டுக்குச் சென்று தடுப்பூசி செலுத்த முடியும் என்று இதன் மூலம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதனால் முதியவர்ர்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர். எண்ணற்ற முதியோர் தடுப்பூசிக்காக பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இதனால் மயக்கம் போன்ற பிரச்னைகள் அவர்களுக்கு வருகின்றன. எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசு விரைந்து முடிவெடுக்க வேண்டும் என்று முதியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு