Published:Updated:

`யார் உதவியும் தேவையில்லை; மாற்றுத்திறனாளிகளுக்கான புதிய வீல் சேர்!' - அசத்திய சென்னை ஐ.ஐ.டி

சென்னை ஐ.ஐ.டி, ஃபீனிக்ஸ் வீல் சிஸ்டம் என்னும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து,`மாற்றுத்திறனாளிகளை யார் உதவியுமின்றி நிற்க வைக்கும் புதுமையான சக்கர நாற்காலி' ஒன்றை அறிமுகப்படுத்தவிருக்கிறது.

சென்னை வீல் சேர்
சென்னை வீல் சேர்

ஹாலிவுட் திரைப்படமான `எக்ஸ் மென்' பட ரசிகர்களுக்கு புரொஃபசர் எக்ஸ் உபயோகிக்கும் சக்கர நாற்காலியை நினைவிருக்கலாம். மாற்றுத்திறனாளியான அவரைப் படத்தின் சில காட்சிகளில் அந்தச் சக்கர நாற்காலி நிற்கச் செய்யும். இனி அந்த ரக சக்கர நாற்காலிகள் இந்தியாவிலும் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன.

சென்னை ஐ ஐ டி
சென்னை ஐ ஐ டி

பீனிக்ஸ் வீல் சிஸ்டம் என்னும் தனியார் நிறுவனத்துடன் இணைந்து சென்னை ஐ.ஐ.டி, உள்நாட்டிலேயே தயாரித்த  புதுமையான சக்கர நாற்காலி இன்று ஐஐடி வளாகத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறது. மாற்றுத்திறனாளிகளை யார் உதவியுமின்றி நிற்க வைக்கும் நாற்காலி இது.

ஐ.ஐ.டி வளாகத்தில் இருக்கும் டி.டி.கே கருவிகள் உற்பத்தி மையம் இதைத் தயாரித்திருக்கிறது. சமூகநீதி மற்றும் பெண்கள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெஹ்லாட் இதை அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

"அமர்ந்தபடியே இருப்பதால் ரத்த ஓட்டம் குறையும், உடல் மரத்துப் போகும், உடலில் அழுத்தம் அதிகரிக்கும். அதனால் வாரத்தில் மூன்று முறையாவது எழுந்து நிற்க வேண்டும். துர்திர்ஷடவசமாக சக்கர நாற்காலியில் அமர்ந்திருப்பவர்களால் அப்படி எழுந்து நிற்க முடியாது.

சென்னை ஐ.ஐ.டி
சென்னை ஐ.ஐ.டி

இதற்குத் தீர்வு காணும் வகையில் இந்த ரக நாற்காலிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நிற்க வைக்கக்கூடிய செயல்பாடுகள் இந்த நாற்காலியில் தற்போது ஒருங்கிணைக்கப்பட்டிருக்கின்றன. சாதாரண சக்கர நாற்காலிகளின் விலைக்கே இது சந்தையில் அறிமுகப்படுத்தப்படும்" என்கிறார் ஐ.ஐ.டி மெக்கானிக்கல் துறை பேராசிரியர் சுஜாதா.