Published:Updated:

India-China Face-Off: `DSDBO சாலை... கிளாஸ் 70; அக்டோபர் 15 டார்கெட்!’ - என்ன நடக்கிறது எல்லையில்?

எல்லையில் இந்திய ராணுவம்
எல்லையில் இந்திய ராணுவம் ( AP | Dar Yasin )

எல்லையில் சீனா படைகளைக் குவித்துவரும் சூழலில், கிழக்கு லடாக்கில் இருக்கும் எல்லைப் பகுதிக்கு எந்த நேரமும் சென்றுவரக்கூடிய வகையில் சாலைகளைத் தயார்படுத்திவருகிறது இந்திய பாதுகாப்புத்துறை.

லடாக்கின் பாங்கோங் சோ ஏரியின் வடக்குக்கரைப் பகுதியில் சீன வீரர்கள் கடந்த ஆகஸ்ட் 29-ல் அத்துமீற முயன்றனர். ஆனால், சீனாவின் இந்த நடவடிக்கையை முன்கூட்டியே கணித்த இந்திய ராணுவம், முன்னேற்பாட்டால் அந்த முயற்சியை முறியடித்தது. கடந்த ஜூனில் நிகழ்ந்த கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்குப் பின்னர் நடைபெற்ற இந்தச் சம்பவம் இரு நாட்டு எல்லையில் பதற்றத்தை அதிகரித்தது. அதன் பிறகு இரு நாடுகள் தரப்பில் ராணுவம், பாதுகாப்புத்துறை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்தில் நடந்த பேச்சுவார்த்தைகளில் தங்களது ராணுவத்தை எல்லையிலிருந்து பின்வாங்கிக்கொள்வதாக சீனா தெரிவித்தது. ஆனால், உண்மையில் நடப்பதோ வேறு.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

சீன ராணுவம்!

இரு நாட்டு எல்லை உடன்படிக்கைகளை மீறி சீனா கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் படைகளைக் குவித்துவருகிறது. பாங்கோங் சோ ஏரியின் தெற்குக் கரைப் பகுதியில் மட்டும் 10,000 துருப்புகளை சீனா குவித்திருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. கிழக்கு லடாக்கை ஒட்டிய எல்லைப் பகுதியில் மட்டும் சீனாவின் பீப்பிள்ஸ் லிபரேஷன் ஆர்மியைச் சேர்ந்த 52,000 வீரர்கள் குவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆகஸ்ட் 29-30 சம்பவத்துக்குப் பின்னர் எல்லையில் இரு நாடுகளுமே படைகளைக் குவித்துவருகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் 35 பட்டாலியன்களை லடாக்கில் நிறுத்தியிருந்த சீன ராணுவம், செப்டம்பரில் அந்த எண்ணிக்கையை 50 பட்டாலியன்களாக அதிகரித்திருக்கிறது. ஒவ்வொரு பட்டாலியனும் 1,000 முதல் 1,200 வீரர்களை உள்ளடக்கியது. `இந்திய ராணுவம் எல்லையில் படைகளைக் குவித்ததைத் தொடர்ந்தே அதே எண்ணிக்கையிலான வீரர்களை நாங்களும் குவித்திருக்கிறோம்’ என்கிறார்கள் சீனா தரப்பில்.

Pangong Tso: `பாங்கோங் சோ ஏரி இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?' - சீன ஊடுருவல் முறியடிக்கப்பட்ட பின்னணி!

எல்லையில் நிலவும் அமைதியைக் குலைக்கும் வகையில் சீனா தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்டுவரும் நிலையில், அதை இந்திய ராணுவம் இதுவரை வெற்றிகரமாக முறியடித்துவருகிறது. பாங்கோங் சோ ஏரியைச் சுற்றியிருக்கும், புவியியல்ரீதியாக முக்கியத்துவம் பெற்ற நான்கு பகுதிகள் தற்போது இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்துவருகின்றன. இது தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுவரும் நிலையில், எல்லையிலிருந்து படைகளைத் திரும்பப் பெற இந்திய ராணுவம் யோசித்துவருகிறது.

அருணாச்சலப்பிரதேச எல்லை
அருணாச்சலப்பிரதேச எல்லை
AP| Anupam Nath

பேச்சுவார்த்தையின் சுமூகமான உடன்பாடு எட்டும் வரையில் எல்லையில் கண்காணிப்பை பலப்படுத்துமாறு பாதுகாப்புத்துறை அறிவுறுத்தியிருக்கிறது. அதேபோல், அருணாச்சலப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர் பகுதி மட்டுமல்லாமல், நேபாளம், பாகிஸ்தான் எல்லைகளிலும் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு முன்னெப்போதையும்விட பலப்படுத்தப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஐந்து அம்ச உடன்படிக்கை!

பாங்கோங் சோ ஏரி அத்துமீறல் சம்பவத்துக்குப் பின்னர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெனரல் வாங் யி (Wang Yi) இடையிலான சந்திப்பு ரஷ்யாவின் மாஸ்கோ நகரில் கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. எல்லைப் பிரச்னைகளுக்கான சீனாவின் சிறப்புப் பிரதிநிதியாகவும் வாங் யி அறிவிக்கப்பட்டிருக்கும் சூழலில் மாஸ்கோ சந்திப்பின்போது இரு தரப்பிலும் எல்லையில் அமைதி திரும்ப ஐந்து அம்ச உடன்படிக்கைக்கு ஒப்புக்கொண்டனர்.

ஜெய்சங்கர் - வாங் யி
ஜெய்சங்கர் - வாங் யி
Bai Xueqi

இதன் மூலம் படிப்படியாக எல்லையிலிருந்து படைகளைத் திரும்பப் பெற ஒப்புக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இரு தரப்பில் மூத்த ராணுவ அதிகாரிகள் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவிருக்கிறார்கள். இந்தப் பேச்சுவார்த்தை இந்த வாரமே தொடங்கும் என்றும் தெரிகிறது.

India-China Face-off: `38,000 ச.கி.மீ ஆக்கிரமிப்பு; எந்தச் சூழலுக்கும் தயார்!’ - ராஜ்நாத் சிங்
யூனியன் பிரதேசமான லடாக்கில் 38,000 சதுர கி.மீ பகுதியை சீனா ஆக்கிரமித்திருக்கிறது. அதேபோல், அருணாச்சலப்பிரதேசத்தில் இந்திய - சீன எல்லைப்பகுதியின் கிழக்குப் பகுதியிலுள்ள 90,000 சதுர கி.மீ பகுதியை சொந்தம் கொண்டாடிவருகிறது.
பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

தயாராகும் இந்திய ராணுவம்!

சீனாவைப் பொறுத்தவரையில் கிழக்கு லடாக் மட்டுமல்லாமல் அருணாச்சலப்பிரதேசத்திலுள்ள எல்லை, அத்துமீறி ஆக்கிரமித்துள்ள அக்‌ஷய் சின் ஆகிய பகுதிகளில் படைகள் மற்றும் அதற்கான தளவாடங்களைக் கொண்டுவர சாலைகளைத் தயார்நிலையில் வைத்திருக்கிறது. அதேநேரம், இந்தியா தரப்பில் இந்தப் பகுதிகளை நெருங்கும் சாலைகள் குளிர்காலத்தில் பனி மூடி போக்குவரத்துக்குப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும்.

லடாக்
லடாக்

லடாக், ஜம்மு காஷ்மீரைப் பொறுத்தவரை குளிர்காலம் என்பது கடுமையான பனிப்பொழிவைக்கொண்டிருப்பதுடன், பல்வேறு சிக்கல்களையும் ராணுவத் தளவாடங்கள் போக்குவரத்தின்போது ஏற்படுத்தக்கூடியது. சீன எல்லையில் பதற்றம் நீடித்துக்கொண்டிருக்கும் இந்தச் சூழலில் லடாக் பகுதியில் இருக்கும் சாலைகளை எந்த நேரமும் பயன்படுத்தும் வகையில் தயார் செய்ய எல்லைப்பகுதி சாலைகளைப் பராமரிக்கும் பாதுகாப்புத்துறையின் பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன் (Border Roads Organisation) முடிவு செய்திருக்கிறது.

அதற்கேற்ப லடாக் பிராந்தியத்தில் பணிகளையும் பி.ஆர்.ஓ முடுக்கிவிட்டுள்ளது. தற்போதுள்ள சூழலில் லடாக் செல்ல இரண்டு சாலைகள் முக்கியமாகப் பயன்பாட்டில் இருக்கின்றன. முதலாவது சாலை ஜம்மு காஷ்மீரின் ஜோஜி லா (Zoji La) வழியாகச் செல்லக்கூடியது. இரண்டாவது சாலை ஹிமாச்சலப்பிரதேசத்தின் மணாலி - உப்ஷி (Upshi)- லே சாலை. இதற்கு அடுத்தபடியாக அனைத்துவிதமான காலநிலைகளிலும் பயன்படுத்தும் வகையிலான மூன்றாவது சாலையும் பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.

டி.எஸ்.டி.பி.ஓ சாலை
டி.எஸ்.டி.பி.ஓ சாலை

ஹிமாச்சலப்பிரதேசத்தின் தார்ச்சா பகுதியிலிருந்து லடாக்கின் நிமு (Nimu) பகுதிக்கு கார்கிலின் ஜான்ஸ்கர் பள்ளத்தாக்கில் இருக்கும் படூம் (Padum) பகுதி வழியாக இந்தப் புதிய சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. லடாக் பிராந்தியத்தில் புவியியல்ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக இது இருக்கும் என்கிறார்கள். டிசம்பர் 2021, ஜனவரி வரையில் இந்தச் சாலையைப் பயன்படுத்தும் வகையில் இருக்குமாறு பார்த்துக்கொள்ள பி.ஆர்.ஓ-வுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.

இந்தச் சாலையில் ஷிங்கு லா (Shinku La) பகுதியில் குறுகியதூர சுரங்கப்பாதை ஒன்றை ஏற்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுவருகிறது. சுரங்கப்பாதை அமைக்கப்படும்பட்சத்தில், எந்தக் காலநிலையிலும் இந்தச் சாலையை ராணுவம் பயன்படுத்திக்கொள்ளலாம். அதேபோல், மணாலி - லே இடையிலான தூரத்தை 46 கி.மீ-ஆகக் குறைக்கும் வகையில் ரோஹ்டங் லா (Rohtang La) பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் 9.02 கி.மீ நீள அடல் சுரங்கப்பாதை இந்த மாத இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரவிருக்கிறது.

அடல் சுரங்கப்பாதை
அடல் சுரங்கப்பாதை

இது இந்திய ராணுவத்துக்கு தளவாடங்களை எடுத்துச் செல்ல பெரிய அளவில் உதவி புரியும். ஸ்ரீநகர் - ஜோஜி லா - கார்கில் லே சாலை ஆண்டுதோறும் பனிக்காலத்தில் 95 நாள்கள் மூடப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அந்தச் சாலை மூடப்படும் காலத்தை 45 நாள்களாகக் குறைக்க பி.ஆர்.ஓ முடிவு செய்திருக்கிறது. அசாதாரண சூழல்களில் ராணுவ தளவாடங்கள் போக்குவரத்துக்கு இந்தச் சாலை முக்கியமானது எனக் கருதப்படுகிறது.

தௌலத் பெக் ஒல்டி ராணுவ தளம் (Daulat Beg Oldi)!

சீன எல்லையில் இந்திய ராணுவத்துக்கு முக்கியவத்தும் வாய்ந்த சாலையாக தர்புக் - ஷியாக் - தௌலத் பெக் ஒல்டி (Darbuk-Shyok-Daulat Beg Oldi (DSDBO) road) கருதப்படுகிறது. லடாக்கில் சீன எல்லையை ஒட்டியிருக்கும் இந்திய ராணுவத் தளமே தௌலத் பெக் ஒல்டி. கடல் மட்டத்திலிருந்து 5,065 மீட்டர் (16,614 அடி) உயரத்திலிருக்கும் விமான ஓடுதளம், உலக அளவில் அதிக உயரத்திலிருக்கும் விமான ஓடுதளமாகக் கருதப்படுகிறது. சீன எல்லைக்கு மிக அருகில் இருக்கும் இந்திய ராணுவப் படைத்தளம் என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. சீனாவின் தெற்கு எல்லையிலிருந்து 8 கி.மீ தொலைவிலும் சீனா ஆக்கிரமித்துள்ள அக்‌ஷய் சின் (Akshay Chin) பகுதி எல்லைக்கட்டுப்பாட்டுக் கோட்டின் வடமேற்குப் பகுதியில் 9 கி.மீ தூரத்திலும் இது அமைந்திருக்கிறது.

தௌலத் பெக் ஒல்டி
தௌலத் பெக் ஒல்டி

விமானப்படை விமானங்கள் மூலம் ராணுவத் தளவாடங்கள் இந்த தளத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டு, அங்கிருந்து அவற்றைச் சாலைவழியாக எல்லைப்பகுதிக்கு அனுப்புவது எளிது. லடாக் தலைநகர் லே-வில் இருந்து தௌலத் பெக் ஒல்டி தளத்தை இணைக்கக்கூடிய 255 கி.மீ சாலை அமைக்கும் பணிகளுக்கான அறிவிப்பு 2001-ல் வெளியானது. இந்தச் சாலைப் பணிகள், 2019-ம் ஆண்டுதான் நிறைவுபெற்றன. இந்தச் சாலைகள் மூலம் நாள்கணக்கில் இருந்த லே - தௌலத் பெக் ஒல்டி இடையிலான பயணம் 6 மணி நேரமாகக் குறைந்தது.

தற்போது இந்தச் சாலையில் இருக்கும் பாலங்கள் அனைத்தையும் கிளாஸ் 70 (Class 70) தரத்துக்கு வரும் அக்டோபர் 15-ம் தேதிக்கு உயர்த்த பி.ஆர்.ஓ முடிவெடுத்திருக்கிறது. கிளாஸ் 70 என்பது 70 டன் அளவு எடை தாங்குவதைக் குறிக்கும். இதன் மூலம் முழுமையாக லோட் செய்யப்பட்ட ராணுவ பீரங்கிகளும் அந்தப் பாதையில் பயணிக்க முடியும்.

`Establishment 22' :  சீனாவுக்குப் பதிலடி தந்த இந்திய ரகசியப் படை பற்றித் தெரியுமா?

அதேபோல், அசாதாரண சூழல் ஏற்பட்டால் DSDBO சாலை வழியாக இந்திய ராணுவத்தால் அதன் டி-90 பீரங்கிகளையும் எல்லைக்கு மிக அருகிலேயே கொண்டுபோய் நிறுத்த முடியும். மேலும், திபெத்தை ஒட்டிய எல்லைப் பகுதிக்கு தரையிலிருந்து ஏவுகணைகளை ஏவும் வாகனங்களையும் கொண்டு செல்ல முடியும் என்பதே இதன் உட்பொருள்.

அடுத்த கட்டுரைக்கு