Published:Updated:

டெல்லி: விழிச்சவால் கொண்ட தம்பதியின் மகன் கோவிட்டுக்கு பலி... அடக்கம் செய்த முன்னாள் எம்.எல்.ஏ!

Child - Representational Image
Child - Representational Image ( Photo by Luma Pimentel on Unsplash )

``எங்கள் மகன் இறந்தது என் கணவருக்குத் தெரியாது. தற்போது சொல்லப் போவதுமில்லை. அவரிடம் சொல்லி அவரையும் இழக்க விரும்பவில்லை."

டெல்லியில் கொரோனாவின் வீரியம் குறைந்திருந்தாலும், உயிரிழப்புகள் இன்னும் அதிக அளவில் இருக்கிறது. கிழக்கு டெல்லியில் உள்ள தில்ஷெட் கார்டனில் வசிப்பவர் சஷாங்க் சேகர் (28). இவரின் மனைவி ஜோதி. இருவரும் விழிச்சவால் கொண்டவர்கள். இவர்களுக்கு 9 மாதத்தில் கிருஷ்சு என்ற மகன் இருந்தான். இந்தக் குடும்பத்தில் அனைவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. ஜோதிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் குணமடைந்துவிட்டார்.

Child - Representational Image
Child - Representational Image

ஜோதியின் கணவர் சேகர் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர்களின் 9 மாத மகன் குரு தேஜ்பகதூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான். ஆனால், கிருஷ்சு சிகிச்சை பயனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்துவிட்டான். குழந்தைக்கு அவன் தாயிடமிருந்து நோய்த் தொற்று ஏற்பட்டிருக்க வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். குழந்தை கிருஷ்சுவின் உடல் பழைய சீமாபுரி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இப்பணியை பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ ஜிதேந்திர சிங் மேற்கொண்டார். இச்சம்பவத்துக்கு முந்தைய தினத்தில்தான் குருதேஜ்பகதூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரி என்ற குழந்தை இறந்தது. அந்தக் குழந்தையின் உடலையும் ஜிதேந்திர சிங்தான் அடக்கம் செய்தார்.

கிருஷ்சுவின் உறவினர் ஒருவர் இது குறித்து கூறுகையில், `18 நாள்களுக்கு முன்பு குழந்தையின் தாய்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதில் இருந்து சில நாள்களில் குழந்தைக்கும் தொற்று ஏற்பட்டுவிட்டது' என்று தெரிவித்தார்.

குழந்தையின் தாய் ஜோதி இது குறித்து கூறுகையில், `எங்கள் மகன் இறந்தது என் கணவருக்குத் தெரியாது. தற்போது சொல்லப் போவதுமில்லை. அவரிடம் சொல்லி அவரையும் இழக்க விரும்பவில்லை' என்று கண்ணீர் மல்கத் தெரிவித்தார்.

பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ ஜிதேந்திர சிங்
பா.ஜ.க முன்னாள் எம்.எல்.ஏ ஜிதேந்திர சிங்
Twitter Image

இதே போன்ற மற்றொரு சம்பவம் வடகிழக்கு டெல்லியில் நடந்துள்ளது. வடகிழக்கு டெல்லியில் உள்ள நந்த்நகரில் வசிக்கும் பிரஹல்டு-ரீமா தம்பதியின் 5 மாத மகள் பரிக்கு அதிகப்படியான காய்ச்சல் இருந்தது. குழந்தையை அங்குள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பின்னர், அங்கிருந்து குருதேஜ்பகதூர் மருத்துவனைக்குக் கொண்டு சென்றனர். குழந்தைக்குச் செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டது. அதன் தாயார் ரீமா நாள் மருத்துவமனையில் அழுதுகொண்டே பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். சிகிச்சை பலனளிக்காமல் அக்குழந்தை இறந்துவிட்டது.

இப்போது பரி மற்றும் கிருஷ்சு ஆகிய இருவரும் அருகருகே அடக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஜிதேந்திரா அடையாளம் தெரியாத பல உடல்களைத் தனது சொந்த செலவில் இறுதி சடங்குகளைச் செய்திருக்கிறார். கொரோனாவுக்கு தினமும் நாட்டில் 4,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு