Published:Updated:

India-China FaceOff:`இந்திய-சீன எல்லை விவகாரத்தில் ரஷ்யா!’ -தீர்வு கிடைக்குமா?

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

ரஷ்யா சீனாவுக்கு இடையே நீண்ட காலமாக நல்ல உறவு இருந்து வருகிறது. இந்தியா பல்வேறு நாடுகளில் இருந்து ராணுவ உபகரணங்களை வாங்கினாலும் பெரும்பாலான ராணுவ பொருள்களை ரஷ்யாவிடம் இருந்துதான் வாங்குகிறது.

இந்தியா - சீனா இடையேயான எல்லைப் பிரச்னை குறித்து தற்போது பல்வேறு கட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. ராணுவ மட்டத்தில் இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் தொடர்ந்து சந்தித்துப் பேசிவருகிறார்கள். வெளியுறவுத்துறை செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுகளும் நடைபெற்று வருகிறது. இவை எல்லாம் எல்லையில் பதற்றத்தைக் குறைக்க எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

ரஷ்யாவைத் தேர்ந்தெடுத்த இந்தியா, சீனா!

இந்தியா - சீனா இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரிப்பதை பல உலக நாடுகள் விரும்பவில்லை. இந்தப் பிரச்னையைப் பேசி தீர்வு காண சர்வதேச அமைப்பான ஐ.நா-வும் பல்வேறு நாடுகளும் இரு நாட்டுக்கும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இரு நாடுகளும் விரும்பினால் பதற்றத்தைக் குறைக்கும் விதமாக தான் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக தெரிவித்தார். எனினும் இந்த விவகாரத்தை நாங்கள் எங்களுக்குள் பேசி தீர்த்துக்கொள்கிறோம் என இந்தியா - சீனா ஆகிய நாடுகள் தெரிவித்தன.

சீனாவுக்கும் ரஷ்யாவுக்கும் நீண்டகாலாமாகவே நல்ல உறவு இருந்து வருகிறது. அதன் அடிப்படையில் இந்த விவகாரத்தில் ரஷ்யா தலையிட்டு தீர்வு காண விரும்பியது. அதன்படி வெளியுறவுத்துறை அமைச்சக மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தது ரஷ்யா. ஆரம்பத்தில் ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்க மறுத்த இந்திய வெளியுறவுத்துறை, ரஷ்யாவின் தொடர் வலியுறுத்தலால், பேச்சுவார்த்தைக்கு சம்மதம் தெரிவித்தது. இதனால் காணொலி மூலம் மூன்று நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்களும் பேசுவது என்று முடிவானது. முடிவு செய்யப்பட்டது போலவே இன்று அந்தச் சந்திப்பு நடைபெற்று வருகிறது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜீ லாவ்ரோவ் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்

முன்னதாக, 15-ம் தேதி எல்லையில் நடைபெற்ற தாக்குதலைத் தொடர்ந்து 17-ம் தேதி இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தொலைபேசி வாயிலாகப் பேசினர். அப்போது அவர்கள் எல்லையில் பதற்றத்தைக் குறைப்பது தொடர்பாகவும் எல்லையில் நடைபெற்ற மோதலுக்கு யார் காரணம் என்பது தொடர்பாக மட்டுமே பேசினர். எல்லைப் பிரச்னை குறித்து எதுவும் பேசவில்லை என்ற கருத்து வெளியானது. அந்தப் பேச்சுவார்த்தையின்போது இரு தரப்பிலும் கடும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இருநாட்டு தரப்பில் கோபம் கலந்து உரையாடல்தான் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாயின. இதனால் இன்று நடைபெறும் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு, சர்வதேச பாதுகாப்பு, பொருளாதார மந்தநிலை ஆகியவை குறித்து பேசுவதற்காக இந்த ஆலோசனை நடைபெறுவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் இந்திய - சீன எல்லை விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதற்கான அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் இல்லை. என்றாலும் தற்போது நிலவும் சூழலை அடிப்படையாக வைத்து, எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே, இன்றைய கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்ற கருத்தும் நிலவுகிறது.

ரஷ்யாவில் ராஜ்நாத் சிங்!

ராஜ்நாத்சிங்
ராஜ்நாத்சிங்

ஒருபுறம் இந்தியா, ரஷ்யா, சீனா வெளியுறவுத்துறை அமைச்சர்கள் காணொலி காட்சி மூலம் பேச்சுவார்த்தை நடத்தும் நிலையில் மறுபுறம் இந்தியா பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சீன பாதுகாப்புத்துறை அமைச்சருடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறார். இந்தச் சந்திப்பு நாளை ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுகிறது. இரண்டாம் உலகப் போர் வெற்றியின், 75-வது ஆண்டு விழா நாளை ரஷ்ய தலைநகர், மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கத்தில் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாளை பிரமாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப் போரில், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளுடன், இந்திய வீரர்களும் பங்கேற்றனர். வெற்றி விழாவில், இந்தியா, சீனா உள்ளிட்ட 11 நாடுகளின் ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடைபெற உள்ளது. இதற்காக இந்தியாவில் இருந்து ராணுவக் குழு ஒன்றும் ரஷ்யா சென்றிருக்கிறது.

ரஷ்யாவின் வரவு தீர்வைத் தருமா?

இந்தியா - சீனா விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுவதை விரும்பாதா சீனா, ரஷ்யா நாடுகள் இந்த விவகாரத்தில் இந்தியாவை சமரசம் செய்ய முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. ரஷ்யா சீனாவுக்கு இடையே நீண்ட காலமாக நல்ல உறவு இருந்து வருகிறது. ரஷ்யாவில் அதிக முதலீடுகளை செய்திருக்கும் ஆசிய நாடு சீனாதான். சீனா ரஷ்யாவின் மிகப்பெரிய வர்த்தக பார்ட்னர். மறுபுறம் இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவு என்பது ஆரோக்கிய நிலையில்தான் இருக்கிறது.

இரு நாட்டு உறவுகுறித்து தொலைபேசிமூலம் உரையாடிய மோடி - புதின்!
இரு நாட்டு உறவுகுறித்து தொலைபேசிமூலம் உரையாடிய மோடி - புதின்!

இந்தியா பல்வேறு நாடுகளில் இருந்து ராணுவ உபகரணங்களை வாங்கினாலும் பெரும்பாலான ராணுவ பொருள்களை இந்தியா ரஷ்யாவிடம் இருந்துதான் வாங்குகிறது. அந்த அளவுக்கு இந்தியா ரஷ்யா இடையே நம்பகத்தன்மையான உறவு இருக்கிறது. மேலும், மோடி பிரதமராக பதவியேற்ற பின்னர் ரஷ்யாவுடனான நெருக்கம் மேலும் அதிகரித்தது. இதனால் ரஷ்யா இந்த விவகாரத்தில் தலையிடுவது நல்ல தீர்வை கொடுக்கலாம், அல்லது தீர்வை நோக்கி நகர்த்தும் என்கிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு