Published:Updated:

லாக்டெளன் 3.0.. சிமென்ட் கலவை இயந்திரத்தில் பயணித்த 18 தொழிலாளர்கள்! #Shocking #Video

லாரியில் மறைந்து பயணித்த தொழிலாளர்கள்
லாரியில் மறைந்து பயணித்த தொழிலாளர்கள்

மத்தியப் பிரதேசத்தில் சிமென்ட் கலவை லாரியில் மறைந்து பயணித்த 18 புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

இந்தியா முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு மேலும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவுகள் தளர்த்தப்படும் சொந்த ஊர்களுக்குத் திரும்பி விடலாம் என எண்ணிய புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இந்தச் செய்தி மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்புள்ள பகுதிகளை சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலமாகப் பிரித்து மத்திய அரசு பட்டியல் வெளியிட்டுள்ளது. இதனடிப்படையில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

லாரியில் மறைந்து பயணித்த தொழிலாளர்கள்
லாரியில் மறைந்து பயணித்த தொழிலாளர்கள்

இந்த நிலையில், மத்தியப் பிரதேசத்தில் சிமென்ட் கலவை லாரியில் மறைந்து பயணித்த 18 புலம்பெயர்ந்த தொழிலாளர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் லாரியை காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றுவிட்டனர். ஊரடங்கு உத்தரவு காரணமாக பொதுபோக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது.

பால், காய்கறிகள் ஏற்றிச்செல்லும் வாகனங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள் பயணித்து வருகின்றனர். இதுசட்டப்படி குற்றமாக இருந்தாலும் மனிதாபிமான அடிப்படையில் சில வாகன ஓட்டுநர்கள் அவர்களுக்கு உதவி செய்து வருகின்றனர்.

மத்தியப்பிரதேச போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது சிமென்ட் கலவை லாரியில் உள்ள அந்தப் பெரிய கலவை இயந்திரத்துக்குள் ஓட்டுநரின் உதவியுடன் 18 பேரும் மறைந்து பயணித்தது தெரியவந்துள்ளது. அந்த இயந்திரத்தில் சிமென்ட் உள்ளிட்ட பொருள்களைக் கொட்டுவதற்காக ஒரு பெரிய ஓட்டை ஒன்று இருக்கும் அதன்வழியாக உள்ளே சென்றே 18 பேரும் மறைவாகப் பயணித்துள்ளனர். மத்தியப்பிரதேச போலீஸாரின் சோதனையின்போது ஆபத்தான முறையில் 18 பேரும் பயணித்தது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

இதுகுறித்து பேசிய காவல்துறையினர், ``வாகன சோதனையின் போது சிமென்ட் கலவை இயந்திரத்துக்குள் 18 பேர் மறைந்து பயணித்தது தெரியவந்தது. மகாராஷ்டிராவில் கூலித்தொழில் செய்து வந்துள்ளனர். இவர்கள் அனைவரும் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவிலிருந்து லக்னோவுக்குப் பயணமாகியுள்ளனர். அவர்கள் பயணித்த வாகனத்தை சிறைப்பிடித்துள்ளோம். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு