Published:Updated:

பிறந்த பச்சிளம் குழந்தைக்குத் தொற்று... தாய்க்குத் தொற்று இல்லை... மருத்துவர்கள் விசாரணை!

குழந்தை
குழந்தை ( Pixabay )

மும்பையில் பிறந்த பச்சிளம் குழந்தைக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால், அதன் தாய்க்குத் தொற்று இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா மூன்றாவது அலை வந்தால் குழந்தைகளே அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர். இதையடுத்து அதை எதிர்கொள்ள மகாராஷ்டிரா சுகாதாரத்துறை அதிகாரிகள் தேவையான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

மும்பை அருகில் உள்ள பால்கர் - தர்ஷெத் என்ற இடத்தில் வசிப்பவர் அஸ்வின் கதாலே. இப்பெண் 8 மாத கர்ப்பமாக இருந்தார்.

பச்சிளம் குழந்தை
பச்சிளம் குழந்தை

உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர் பிரசவத்துக்காக பால்கரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்குக் குறைப் பிரவத்தில் குழந்தை பிறந்தது. பிறந்த குழந்தையின் எடை 1.5 கிலோ இருந்தது. பிரசவத்துக்குப் பிறகு தாய் மற்றும் குழந்தைக்குக் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. இதில் தாய்க்கு கொரோனா தொற்று இல்லை. ஆனால், குழந்தைக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

உடனே மேல் சிகிச்சைக்காக குழந்தையை ஜவஹர் என்ற இடத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது. குழந்தை பலவீனமாகவும், அதேசமயம் மிகவும் அபாய கட்டத்தில் இருப்பதாகவும் டாக்டர் ராம்தாஸ் தெரிவித்தார்.

மேலும் குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், குழந்தையின் தாய்க்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. மஞ்சள்காமாலை நோய் குழந்தையின் தாய்க்கு ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து குணமடைந்த பிறகு குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்க அனுமதிக்கப்படும் என்று அவருக்கு சிகிச்சையளித்து வரும் டாக்டர் ராஜேந்திரா தெரிவித்தார்.

மும்பை மெட்ரோபாலிடன் பகுதியில், இதுபோன்று பிறந்த குழந்தைக்குக் கொரோனா தொற்று கண்டறியப்பட்டு இருப்பது இதுவே முதல் முறை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். எப்படி குழந்தைக்கு தொற்று ஏற்பட்டது என்பது குறித்து டாக்டர்கள் விசாரித்து வருகின்றனர்.

 தாய் - குழந்தை Representational Image
தாய் - குழந்தை Representational Image

மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 107 குழந்தைகள் தங்கள் இரண்டு பெற்றோரையும் இழந்துவிட்டனர். மேலும் 2,290 குழந்தைகள் கொரோனாவுக்கு தாய் அல்லது தந்தையை மட்டும் இழந்திருப்பதாக மாநில பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 10 குழந்தைகள் அரவணைக்க யாரும் இல்லாத ஆதரவற்றவர்களாக மாறியுள்ளனர். அவர்களை மாநில அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துப் பராமரித்து வருகிறது. மாநில அரசு கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளை அடையாளம் காண ஒவ்வொரு மாவட்டத்துக்கும் 10 பேர் கொண்ட கமிட்டி ஒன்றை அமைத்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு