Published:Updated:

புதுச்சேரி: `மருந்துகள் இல்லை’ - கைவிரித்த ஜிப்மர் மருத்துவமனை; கலக்கத்தில் நோயாளிகள்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடரும் மருந்து தட்டுப்பாட்டால், மருந்தகத்தில் இருக்கும் மருந்துகளை மட்டும் பரிந்துரையுங்கள் என்று மருத்துவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் சுற்றறிக்கை நோயாளிகளை கலங்க வைத்திருக்கிறது.

புதுச்சேரி: `மருந்துகள் இல்லை’ - கைவிரித்த ஜிப்மர் மருத்துவமனை; கலக்கத்தில் நோயாளிகள்

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடரும் மருந்து தட்டுப்பாட்டால், மருந்தகத்தில் இருக்கும் மருந்துகளை மட்டும் பரிந்துரையுங்கள் என்று மருத்துவர்களுக்கு அனுப்பப்பட்டிருக்கும் சுற்றறிக்கை நோயாளிகளை கலங்க வைத்திருக்கிறது.

Published:Updated:
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை

புதுச்சேரி கோரிமேட்டில் இயங்கி வருகிறது மத்திய அரசின் ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம். சுமார் 200 ஏக்கர் பரப்பளவில் இயங்கிவரும் இந்த மருத்துவமனை, அதிநவீன மருத்துவ உபகரணங்களாலும், சிகிச்சைகளாலும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிகராக பேசப்பட்டது. புதுச்சேரியில் இந்த மருத்துவமனை அமைந்திருந்தாலும், இங்கு அளிக்கப்பட்டு வந்த தரமான சிகிச்சைக்காக தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் நாள்தோறும் வருவார்கள். புற்றுநோய், இதயநோய் உள்ள நோயாளிகள் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டு செல்வார்கள். ஆனால் இதெல்லாம் சில வருடங்களுக்கு முன்பு. தற்போது நிர்வாக சீர்கேட்டாலும், மருந்து தட்டுப்பாட்டாலும் தடுமாறி வருகிறது ஜிப்மர்.

ஜிப்மர் மருத்துவமனையின் சுற்றறிக்கை
ஜிப்மர் மருத்துவமனையின் சுற்றறிக்கை

கொரோனா பெருந்தொற்று காலத்தில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை என்ற பெயரில் வெளிப்புற சிகிச்சையை நிறுத்தியது ஜிப்மர். தொலைபேசியில் முன்பதிவு செய்துவிட்டு வந்தால் மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் என்று அறிவித்தது ஜிப்மர். அந்த அறிவிப்பால் தவித்துப் போனார்கள் நோயாளிகள். மேலும் கொரோனாவை காரணம் காட்டி வெளிப்புற சிகிச்சையை நிறுத்திய ஜிப்மர், புற்றுநோய், நீரிழிவு நோய், மனநோய், இதய நோய், நரம்பியல், இதய அறுவை சிகிச்சை நோயியல், நரம்பு அறுவை சிகிச்சை நோயியல், சிறுநீரகவியல், சிறுநீரக மாற்று போன்ற சிகிச்சை எடுத்தவர்களுக்கு மாதந்தோறும் இலவசமாக வழங்க வேண்டிய மருந்து மாத்திரைகளை நிறுத்தியதால் நோயாளிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளானார்கள். கொரோனாவால் நிறுத்தப்பட்ட சிகிச்சைகள் தற்போது தொடங்கப்பட்டாலும், கடந்த ஒரு வருடமாக நிலவும் மருந்துத் தட்டுப்பாட்டால் நோயாளிகளை அலைக்கழித்து வருகிறது மருத்துவமனை நிர்வாகம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

புதுச்சேரி கிராமப்புறங்களிலிருந்தும், தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம், அத்தியாவசிய மாத்திரைகள் கையிருப்பில் இல்லை என்று கூறும் மருத்துவர்கள் அதனை வெளியில் வாங்கிக்கொள்ளும்படி கூறிவருகிறார்கள். அந்த பிரச்னை சர்ச்சையாக மாறியதால் புதுச்சேரி அரசு மற்றும் மத்திய சுகாதாரத்துறை சார்பில்  நேரில் ஆய்வு செய்து மருந்து தட்டுப்பாடு சரிசெய்யப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு அப்படியான எந்த ஆய்வும் நடைபெறாததால் மருந்துத் தட்டுப்பாடு நீடித்தது. பலமணி நேரங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மருத்துவமனை மருந்தகங்களில் மருத்துவர் அளித்த சீட்டை காட்டினால், அந்த மருந்துகள் இல்லையென்றும் அதனை வெளியில் வாங்கிக்கொள்ளும்படியும் கூறிவிடுகின்றனர் மருந்தாளுநர்கள். நோயாளிகளும் வேறு வழியின்றி தனியார் மருந்தகங்களில் அந்த மருந்துகளை வாங்கி வருகின்றனர்.

இந்நிலையில்தான் ஜிப்மர் மருத்துவமனையின் கண்காணிப்பாளர் அனைத்து துறைத் தலைவர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “நோயாளிகளுக்கு கொடுக்கப்படும் மருந்து சீட்டில், ஜிப்மர் மருந்தகத்தில் கிடைக்கும் மருந்துகளை மட்டும் பரிந்துரையுங்கள். இங்கு இல்லாத அத்தியாவசிய மருந்துகளை வெளியில் பணம் செலுத்தி வாங்கிக்கொள்ளுமாறு தனியாக சீட்டில் எழுதி அவர்களிடம் தாருங்கள். மருந்தகத்தில் உள்ள மருந்து பட்டியல் அனைத்து துறைகளுக்கும் தரப்படும். மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கும் மருந்துகளைப் பெற, நீண்டநேரம் வரிசைகளில் காத்திருந்தும் மருந்துகள் கிடைப்பதில்லை என்று புகார்கள் வருவதால் இந்த சுற்றறிக்கை தரப்படுகிறது" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த சுற்றறிக்கை நோயாளிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இன்று மாலை முதல்வர் ரங்கசாமியுடன் தான் ஆய்வுக்கு செல்லவிருப்பதாக கூறியிருக்கிறார் துணைநிலை ஆளுநர் தமிழிசை.