Published:Updated:

கொரோனா: 'தனிமைப்படுத்திக்கொள்ள இடமில்லை; 11 நாள்களாக மரத்தில் வசிக்கும் தெலங்கானா இளைஞர்!

தெலங்கானா இளைஞர்
தெலங்கானா இளைஞர்

மே 4-ம் தேதி அன்று கொரோனா இருப்பதாகக் கண்டறியப்பட்டிருந்தது. இந்தச் செய்தியை அறிந்துகொண்ட அவரது குடும்பத்தினரும், கிராமத்தினரும் அவரைத் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.

தெலங்கானா மாநிலத்தில், பட்டபடிப்பு படிக்கும் மாணவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, தன்னுடைய வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள அறைகள் இல்லாத காரணத்தாலும், அவரின் கிராமத்துக்கு அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் படுக்கைகள் கிடைக்காத காரணத்தாலும் அவரது வீட்டின் முன்புறமுள்ள மரத்தில் படுக்கை அமைத்து அதில் அவர் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக அதிகமாகப் பரவி, மக்களிடம் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. இதனால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, படுக்கைகள் கிடைப்பதில் பற்றாக்குறை, மருந்துகள் கிடைப்பதில்லை எனப் பல்வேறு பிரச்னைகளும் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டேயிருக்கின்றன.

இந்தநிலையில்தான், தெலங்கானா மாநிலம், நலகந்தா மாவட்டத்தின் உட்புறங்களில் பழங்குடிகள் வசிக்கும் குக்கிராமமான கோத்தனந்திகொண்டவில் வசிக்கும் 18 வயதேயான பட்டதாரி மாணவர் சிவனுக்கு மே 4-ம் தேதி அன்று கொரோனா இருப்பதாகக் கண்டறியப்பட்டிருந்தது. இந்தச் செய்தியை அறிந்துகொண்ட அவரது குடும்பத்தினரும், கிராமத்தினரும் அவரைத் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் சிவனின் வீடோ ஒரே ஓர் அறை கொண்ட வீடு. பெற்றோர் மற்றும் நான்கு பேர் வசிப்பதால் அவரால் வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

சிவன்
சிவன்

மேலும், இவர்களின் கிராமத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில், கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களுக்கான படுக்கைகள் காலியாக இல்லை. இதனால் சிவன் தன் வீட்டின் முன்புறத்திலுள்ள மரத்தில் மூங்கில் கம்புகளைக்கொண்டு படுக்கை அமைத்து, அதில் இரவும் பகலும் தங்கியிருக்கிறார். அதில் கயிறு கொண்டு கட்டப்பட்டிருக்கும் வாளியின் வழியே அவருக்கு உணவுகள் அனுப்பப்பட்டுவருகின்றன. கழிவறையும் வீட்டின் உள்ளேயே இருப்பதால் சிவனுக்கு இயற்கை உபாதைகளை வெளியேற்றவும் பிரச்னையாக இருக்கிறது. இவ்வாறான நிலையில், கிட்டத்தட்ட 11 நாள்கள் தங்கியிருந்த நிலையில் ஊடகத்திடம் பேசிய சிவன், ``நான் ஹைதராபாத்திலுள்ள கல்லூரியில் படித்துவருகிறேன். ஒரு மாதத்துக்கு முன்பு கொரோனா பரவல் அதிகமாகத் தொடங்கியதும் வீட்டுக்குத் திரும்பினேன். திரும்பிய பிறகு எனக்கு அறிகுறிகள் தென்பட்டதால் கொரோனா பரிசோதனை செய்தேன். அதில் எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரிந்ததும், என்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள முயன்றேன். ஆனால், ஆரம்ப சுகாதார நிலையங்களில் படுக்கைகள் கிடைக்கவில்லை. வீட்டிலும் தனிமைபடுத்திக்கொள்ள முடியாததால் இவ்வாறு மரத்தில் தங்கியிருக்கிறேன். கொரோனா பாதிப்பின் அச்சம் காரணமாக கிராமத்தினர் யாரும் உதவி செய்ய முன்வரவில்லை" என்றார்.

அவரது தாய் அனசுயா கூறுகையில், ``நானும் என் கணவரும் தினசரி கூலித் தொழிலாளர்கள், சிவனுடன் இரண்டு சகோதரர்கள் உள்ளனர். நாங்களும் நோய்த்தொற்றுக்கு ஆளானால், குடும்பம் எந்த வருமானமும் இல்லாமல் வாழ்வது கடினம் என்பதை என் மகன் புரிந்துகொண்டான். அவனைத் தனிமைப்படுத்த ஆஷா தொழிலாளர்கள் எங்களிடம் சொன்னார்கள், ஆனால் அவனை வீட்டில் தனிமைப்படுத்த எங்களுக்கு ஏற்பாடு இருக்கிறதா என்றுகூட எங்களிடம் கேட்கவில்லை. அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அடைய நாங்கள் 5 கி.மீ தூரம் பயணித்தோம், ஆனால் அங்கே படுக்கைகள் இல்லை. எதுவுமே இல்லையென்றால் நாங்கள் அவனை எங்கே வைத்திருப்போம்? ” என்று கேள்வியெழுப்பினார்.

கொரோனா தடுப்பூசி
கொரோனா தடுப்பூசி

ஊடகங்களில் இந்தச் செய்தி வெளிவந்த பிறகு அங்கு விரைந்து சென்ற காவல்துறையினர் 5 கிலோமீட்டர் தொலைவில் தற்காலிக கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ள பழங்குடியினர் விடுதியில் அவரைச் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும் அடவீதேவலப்பள்ளி மண்டல காவல் அதிகாரி வீர சேகர் கூறுகையில், ``சிவன் இப்படி வாழ்கிறார் என்பது எங்களுக்குத் தெரியாது. இந்த மண்டலத்தின் கீழ் 13 குக்கிராமங்கள் உள்ளன, ஒவ்வொரு கிராமத்திலும் ஒரு தனிமைப்படுத்தும் மையம் இருக்க வேண்டும் என்பது அரசு உத்தரவு.

மேலும் சுகாதார அதிகாரிகள் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரையும் பார்வையிட்டுவருகின்றனர்’’ என்றார்.

அடுத்த கட்டுரைக்கு