உத்தரப்பிரதேசத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியொன்றில், மணமகன் விளையாட்டாகச் செய்த ஒரு செயலால் கடைசி நேரத்தில் மணமகள் கோபித்துக்கொண்டு, போலீஸை அழைத்து திருமணத்தையே நிறுத்திய சம்பவம் இரு குடும்பத்தாருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அதாவது, மணமகன் தன்னுடைய நண்பர்களின் பந்தயத்தில் ஜெயிப்பதற்காக, திருமணத்துக்கு வந்திருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட விருந்தினர்களின் முன்னிலையில், மணமகளை முத்தமிட்டிருக்கிறார். இதில் கோபமடைந்த மணமகள் உடனடியாக போலீஸை அழைத்திருக்கிறார்.
அப்போது மணமகள், ``அவர் என்னை முத்தமிட்டபோது, நான் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன். என் சுயமரியாதையைப் பற்றி அவர் கவலைப்படவில்லை. பல விருந்தினர்கள் முன்னிலையில் தவறாக நடந்துகொண்டார்" என்று கூறினார். இதில் மணமகள் கடைசிவரை சமாதானமாக மறுத்ததையடுத்து, இறுதியில் திருமணமே நிறுத்தப்பட்டுவிட்டது.

பின்னர் இது குறித்துப் பேசிய மணமகளின் தாயார், ``மணமகன் அவரின் நண்பர்களால் தூண்டிவிடப்பட்டார். என் மகளை நாங்கள் சமாதானப்படுத்த முயன்றோம். ஆனால் கடைசிவரை திருமணம் செய்ய மறுத்துவிட்டார். எனவே, இந்த விஷயத்தில் கொஞ்சநாள் காத்திருக்கலாம் என்று நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம்" எனக் கூறினார்.
இது தொடர்பாகப் பேசிய போலீஸ் அதிகாரி, ``இந்தச் சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் சடங்குகள் செய்யப்பட்டதன் அடிப்படையில், இருவரும் திருமணம் செய்துகொண்டனர். எனவே இரண்டொரு நாள்கள் கழித்து பிரச்னை தணிந்த பிறகு என்ன செய்யலாம் என்று முடிவு செய்வோம்" எனத் தெரிவித்தார்.