Published:Updated:

`காதல் கதை.. கையில் டேட்டூ.. தலையில்லாத உடல்!’ - உ.பியில் ஓராண்டு கழித்து விடை கிடைத்த கொலை வழக்கு

கொலை
கொலை

`` காவலர்கள் ஷாகிப்பை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது காவலர்களின் துப்பாக்கியைப் பறித்து துப்பாக்கிச் சூடு நடத்தி ஷாகிப் தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.”

உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் அருகே உள்ள லோஹியா எனும் கிராமத்தில் இருந்த வயல் வெளியில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ம் தேதி தலையில்லாத நிலையில் பெண்ணின் உடல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அந்தப் பெண் யாரென்று தெரியாமலும் கொலை செய்தவர்களைக் கண்டுபிடிக்க முடியாமலும் அம்மாநிலக் காவல் அதிகாரிகள் கடந்த பல மாதங்களாக திணறி வந்துள்ளனர். இந்தச் சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்குப் பிறகு இந்த கொலை வழக்குக்கான விடைகளை காவலர்கள் கண்டறிந்து குற்றவாளிகளைக் கைது செய்துள்ளனர்.

கொலை
கொலை
மாதிரிப் படம்

ஆரம்பகட்டத்தில் இந்த வழக்கு தொடர்பாக சந்தேகம் உள்ள நபர்கள் மீது கொலை வழக்கைப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். ஒரு வருடக் கால விசாரணை மற்றும் காத்திருப்புக்குப் பிறகு முக்கியக் குற்றவாளியான ஷாகிப் உட்பட ஆறு பேரைக் காவலர்கள் கைது செய்துள்ளனர். பரபரப்பாகப் பேசப்பட்ட இந்தக் கொலை வழக்குக்கான அனைத்து விடைகளும் கிடைத்ததாக உத்தரப்பிரதேச காவலர்கள் தெரிவித்துள்ளனர். காதல் மற்றும் ஏமாற்றம்தான் இந்தக் கொலைக்கு முக்கியக் காரணமாக இருந்ததாகவும் காவலர்கள் கூறியுள்ளனர்.

`அணலி, கருமூர்க்கன்; நள்ளிரவு 2.30 மணி; பாட்டிலில் கொண்டுவரப்பட்ட பாம்பு’-கேரளாவை உலுக்கிய கொலை

தலையில்லாமல் உடல் கண்டுபிடிக்கப்பட்டதால் இறந்தவரின் அடையாளத்தைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்ததாக மீரட் பகுதியின் காவல்துறைக் கண்காணிப்பாளர் அஜய் சாஹ்னி கூறியிருந்தார். மாவட்ட மற்றும் மாநில குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளை வைத்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அதிலும் வெற்றிகிடைக்கவில்லை என்கின்றனர் காவலர்கள். குறிப்பிட்ட கிராமத்தில் உள்ளவர்களின் மொபைல் எண்களை முதலில் ஆராய்ந்து அதன் வழியாகக் காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். அதில், சந்தேகத்திற்கு உரிய வகையில் பதிவு செய்யப்படாத ஒரு எண் கிடைத்துள்ளது. இந்த எண் லூதியானா பகுதியில் காவலர்கள் விசாரணையைத் தொடர வழி வகுத்துள்ளது. இதையடுத்து, கிராமத்திற்கு வெளியில் பணிபுரிபவர்களை கண்காணிக்கக் குழு ஒன்றை அமைத்துள்ளனர். இதில், ஒரு திருப்புமுனை ஏற்பட்டதாக காவலர்கள் தெரிவித்தனர்.

காதல்
காதல்
மாதிரிப் படம்

அந்த இளம்பெண் லூதியானாவில் உள்ள மோடிநகர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது அடையாளம் காணப்பட்டது. மே மாதத்தில் அவர் காணாமல் போனதாகவும் அவர் தனது நகைகளை எடுத்துக்கொண்டு வீட்டைவிட்டுப் போனதாகவும் இளம்பெண்ணின் பெற்றோர்கள் காவலர்களிடம் கூறியுள்ளனர். மேலும், அவளது காதலன் `அமன்’ என்பவருடன் சென்றதாக சந்தேகிப்பதாகக் கூறியுள்ளனர். லூதியானா பகுதியில் தாயத்துகளை விற்கும் கடை ஒன்றில் அந்த நபர் பணிபுரிந்து வந்ததாகவும் அவர் லோஹியா கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஷாகிப் என்ற தன்னுடைய பெயரை மறைத்து `அமன்’ என்ற போலிப் பெயருடன் கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணைக் காதலித்து வந்துள்ளார்.

தவுராலா எனும் பகுதியில் வாடகை வீடு ஒன்றைத் தயார் செய்துவிட்டு, ஷாகிப் அந்தப் பெண்ணை நகைகளுடன் அழைத்துச் சென்றதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் ஒரு மாதத்துக்குப் பின்னர் அமன் என்ற பெயரில் ஷாகிப் தன்னை ஏமாற்றி வந்ததை இளம்பெண் உணர்ந்துள்ளார். இது அவர்களுக்கு இடையே சண்டை உருவாக காரணமாக இருந்துள்ளது. இதனையடுத்து ஷாகிப் ரம்ஜான் பண்டிகை அன்று குளிர்பானத்தில் மயக்க மருந்தை கலந்து அப்பெண்ணுக்குக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. மயங்கிய நிலையில் இருந்த அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். அவரது அடையாளத்தை மறைக்க தலையை வெட்டியுள்ளார். பெண்ணின் கைகளில் அவருடைய பெயரையும் காதலனின் பெயரையும் பச்சைக் குத்தி இருந்ததால் கைகளையும் வெட்டியதாகக் கூறப்படுகிறது.

உ.பி காவல்துறை
உ.பி காவல்துறை

இந்தக் கொலைச் சம்பவத்தில் ஷாகிப்பின் பெற்றோருக்கும் தொடர்பு இருப்பதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், இந்த வழக்கு தொடர்பாக இதுவரை 6 பேரை கைது செய்துள்ளனர். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று காவலர்கள் ஷாகிப்பை மருத்துவப் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றபோது காவலர்களின் துப்பாக்கியைப் பறித்து துப்பாக்கிச் சூடு நடத்தி ஷாகிப் தப்பிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதனால், ஷாகிப் கால்களில் சுடப்பட்டதாகவும் ஒரு காவலர் இதில் காயமடைந்ததாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்குவாதம்.. துப்பாக்கி.. வீடியோவில் பதிவான கொலை! - உ.பி அரசியல் பிரமுகர், மகனுக்கு நேர்ந்த கொடூரம்
அடுத்த கட்டுரைக்கு