Published:Updated:

`பணத்தை எண்ணி முடிக்கவே 13 மணி நேரம்...’ - வருமான வரித்துறையிடம் சிக்கிய மகாராஷ்டிரா தொழிலதிபர்கள்

பணம் எண்ணப்படுகிறது.

மகாராஷ்டிராவில் தொழிலதிபர்களின் வீடு மற்றும் அலுவலகத்தில் நடத்திய ரெய்டில் 58 கோடி ரூபாய் ரொக்கப் பணம், 32 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

`பணத்தை எண்ணி முடிக்கவே 13 மணி நேரம்...’ - வருமான வரித்துறையிடம் சிக்கிய மகாராஷ்டிரா தொழிலதிபர்கள்

மகாராஷ்டிராவில் தொழிலதிபர்களின் வீடு மற்றும் அலுவலகத்தில் நடத்திய ரெய்டில் 58 கோடி ரூபாய் ரொக்கப் பணம், 32 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன.

Published:Updated:
பணம் எண்ணப்படுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள ஜல்னா மற்றும் அவுரங்காபாத்தில் இரும்பு, துணி, ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் பிரபலமான இரு தொழிலதிபர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித்துறையின் நாசிக் பிரிவுக்குத் தகவல் கிடைத்தது. உடனே வருமான வரித்துறை அதிகாரிகள் 260 பேர் ஐந்து குழுக்களாகப் பிரிந்து அவுரங்காபாத், ஜல்னா உட்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் மகாராஷ்டிரா முழுவதும் இருக்கும் அந்தத் தொழிலதிபர்களுக்குச் சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தினர். இந்த மாதம் ஒன்றாம் தேதி தொடங்கிய ரெய்டு 8-ம் தேதி வரை நீடித்தது. ரெய்டில் ரூ.390 கோடிக்குக் கணக்கில் வராத சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

வருமான வரித்துறை ரெய்டு
வருமான வரித்துறை ரெய்டு

ரெய்டில் ரொக்கப் பணம் மட்டும் 58 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தவிர 32 கிலோ தங்கமும் சிக்கியது. பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை எண்ணி முடிக்கவே 13 மணி நேரம் பிடித்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ரூ.14 கோடி மதிப்புள்ள வைரம் மற்றும் பவளமும் இந்த ரெய்டில் சிக்கியதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரு தொழில் நிறுவனங்களில் ரெய்டு நடத்த 120 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 100 கோடி ரூபாய் மதிப்பு பினாமி சொத்து ஆவணங்களும் ரெய்டில் பிடிபட்டுள்ளன. ரெய்டு நடத்தப்பட்ட இரு தொழிலதிபர்களும் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட தலா ரூ.1.5 கோடி நன்கொடை வழங்கியிருக்கின்றனர். அதோடு ரெய்டில் சிக்கிய தொழிலதிபர்களில் ஒருவர் பாஜக-வுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று தகவல் கிடைத்திருக்கிறது. அதனால்தான் அந்தத் தொழிலதிபர்களின் பெயர்களை வருமான வரித்துறையினர் வெளியிடவில்லை என்றும் கூறப்படுகிறது.