Published:Updated:

சீனா: `டிக்டாக், ஹலோவின் ஜெராக்ஸ்; 47 செயலிகளுக்குத் தடை!’ - மத்திய அரசு அதிரடி

இந்தியா-சீனா
இந்தியா-சீனா ( AP )

``தடை விதிக்கும் பட்டியலில் இன்னும் 275 செயலிகள் இருப்பதாகவும் இவற்றின் தகவல் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து ஆலோசனைகளை மேற்கொண்ட பின்னர் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.”

சீனப் பின்னனியைக் கொண்ட டிக்டாக், ஹலோ உள்ளிட்ட 59 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு கடந்த மாதம் தடை விதித்தது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், ``இந்திய இறையாண்மை மற்றும் ஒருமைப்பாடு, நாடு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு ஆகியவற்றைக் கருதி 59 செயலிகளுக்குத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் செல்போன் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனாளர்களின் நலன்கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய சைபர்கிரைம் ஒருங்கிணைப்பு மையத்தின் பரிந்துரையின்படி எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை, இந்திய செல்போன் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல் பாதுகாப்பை உறுதி செய்யும்” என்று தெரிவித்தனர்.

டிக் டாக்
டிக் டாக்

செயலிகள் தடை தொடர்பாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் பேசுகையில், ``இந்திய, சீன வீரர்களுக்கு இடையேயான மோதல்களுக்குப் பிறகு 59 சீன செயலிகளை இந்தியா தடை செய்துள்ளது. இது சீனாவுக்கு எதிரான இந்தியாவின் `டிஜிட்டல் ஸ்டிரைக்’. நாட்டு மக்களின் தரவுகளைப் பாதுகாக்க நாங்கள் சீன செயலிகளைத் தடை செய்தோம்” என்று தெரிவித்தார். இதைத் தொடர்ந்து சீனப் பொருள்களைத் தடை செய்வது தொடர்பாகவும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்தன. தடை செய்யப்பட்ட சீன செயலிகளுக்கு மாற்று செயலிகள் குறித்தும் நெட்டிசன்கள் தேடி வந்தனர். சீன நிறுவனங்களும் மத்திய அரசிடம் செயலிகள் தடையை நீக்குவது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தகவல்கள் வெளியானது. இந்த நிலையில், சீன செயலிகளைப் போன்றே காப்பி, பேஸ்ட் ஸ்டைலில் இருந்த 47 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது.

 சீன செயலிகள்
சீன செயலிகள்

டிக் டாக், ஹலோ, ஷேர் இட் போன்ற சீன செயலிகளைப் போலவே இருந்த டிக் டாக் லைட், ஹலோ லைட், ஷேர் இட் லைட் உள்ளிட்ட சுமார் 47 செயலிகளை மத்திய அரசு தடை செய்துள்ளது. இதனால், மத்திய அரசு தடை செய்துள்ள செயலிகளின் எண்ணிக்கை 106 ஆக அதிகரித்துள்ளது. இதுதொடர்பான தடை உத்தரவு கடந்த வெள்ளிக்கிழமை அதாவது, ஜூலை 24-ம் தேதி அன்று வெளியிடப்பட்டுள்ளது. தடை விதிக்கும் பட்டியலில் இன்னும் 275 செயலிகள் இருப்பதாகவும் இவற்றின் தகவல் பாதுகாப்பு விஷயங்கள் குறித்து ஆலோசனைகளை மேற்கொண்ட பின்னர் மத்திய அரசு இறுதி முடிவை எடுக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், பலரும் சீனாவின் மீதான இரண்டாவது டிஜிட்டல் ஸ்டிரைக் என இதைக் குறிப்பிட்டு வருகின்றனர்.

சீன செயலிகள்: `தடை குறித்து ஆலோசிக்கிறோம்’ -இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவும் முடிவு?
அடுத்த கட்டுரைக்கு