Published:Updated:

ஐ.நா சபையின் பெண்கள் ஆணையத் தேர்தல்! - சீனாவை வீழ்த்திய இந்தியா

ஐ.நா
ஐ.நா

ஐ.நா பாதுகாப்புக்குழுவின் நிரந்தர உறுப்பினரான சீனாவுக்கு 27 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. மெஜாரிட்டிக்குத் தேவையான 28 வாக்குகளைப் பெறத் தவறிய சீனா தோல்வியைத் தழுவியது.

1995-ம் ஆண்டு பீஜிங்கில் நடைபெற்ற பெண்களுக்கான நான்காவது உலக மாநாட்டின் 25-வது ஆண்டுவிழா உலகம் முழுவதும் நினைவுகூரப்பட்டு வரும் நேரத்தில், ​​பாலின சமத்துவம் மற்றும் பெண்கள் அதிகாரம் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான ஐ.நா-வின் உலகளாவிய அரசுகளுக்கிடையேயான தேர்தலில் சீனாவை வீழ்த்தி, இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது.

ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை (ECOSOC) என்பது, ஐக்கிய நாடுகள் சபையின் ஆறு முதன்மை உறுப்புகளில் ஒன்று. 54 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கும் ஐ.நா சபையில், உலகப் பொருளாதாரம் மற்றும் சமூகப் பிரச்னைகளை விவாதித்து, உறுப்பு நாடுகளுக்கும், ஐ.நா அமைப்பிலுள்ள முகமைகளுக்கும் ஒரு செயலாக்கத் திட்டத்தை வகுப்பதுதான் ECOSOC ஆணையக்குழுவின் நோக்கம்.

ஐ.நா
ஐ.நா

இந்த அமைப்பின், 2021-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் நேற்று தொடங்கப்பட்ட நிலையில், ஆசிய-பசிபிக் மாநிலங்கள் பிரிவில் இரண்டு இடங்களுக்கான தேர்தல்கள் நடத்தப்பட்டன. இதில் ஆப்கானிஸ்தான், இந்தியா, சீனா ஆகிய நாடுகள் போட்டியிட்டன.

இதில், பெண்கள் நிலைமை ஆணையத்துக்கான (CSW) தேர்தலில் ஐ.நா தூதர் அடீலா ராஸ் (Adela Raz) தலைமையிலான ஆப்கானிஸ்தான் 39 வாக்குகளைப் பெற்றது. 38 வாக்குகள் பெற்றது இந்தியா.

ஐ.நா பாதுகாப்புக்குழுவின் நிரந்தர உறுப்பினரான சீனாவுக்கு 27 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. மெஜாரிட்டிக்குத் தேவையான 28 வாக்குகளைப் பெறத் தவறிய சீனா தோல்வியைத் தழுவியது.

Vikatan

முன்னதாக, ஜூன் 18-ந் தேதியன்று ஐ.நா சபை பாதுகாப்பு கவுன்சிலின் (UNSC) நிரந்தரமற்ற உறுப்பு நாடுகளுக்கான தேர்தலில் இந்தியா அமோக ஆதரவைப் பெற்றது. UNSC நிரந்தரமற்ற உறுப்பு நாடாவதற்கு 125 நாடுகளின் ஆதரவு தேவை. ஆனால் இந்தியா, 184 நாடுகளின் ஆதரவைப் பெற்று, எட்டாவது முறையாக UNSC-ன் நிரந்தரமற்ற உறுப்பினர் என்ற அந்தஸ்தைப் பெற்றது. 2021, ஜனவரி 1 முதல் இரண்டு ஆண்டு காலத்துக்கு நிரந்தரமற்ற உறுப்பினராக ஐ.நா பாதுகாப்புக்குழுவில் இந்தியா இடம் பெறும்.

இந்நிலையில், 2021-2025 முதல் நான்கு ஆண்டு காலத்துக்கு பெண்களின் நிலை குறித்த ஆணையத்தில் (CSW) இந்தியாவின் தேர்தல் வெற்றி மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டது.

இந்தியாவின் இந்தத் தேர்தல் வெற்றிக்காக ஐ.நா சபையின் முன்னாள் உதவி பொதுச்செயலாளரும், ஐ.நா மகளிர் துணை நிர்வாக இயக்குநருமான லட்சுமி பூரி, இந்திய தூதர் திருமூர்த்தியை வாழ்த்தினார்.

ஐ.நா சபை
ஐ.நா சபை

மேலும், ``ஐ.நா-வில் உலகளாவிய பெண்களின் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை இந்தியா வழங்கியிருக்கிறது. பாலின சமத்துவத்தை அடைதல், பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு அதிகாரம் அளித்தல் உள்ளிட்ட பெண்களின் உரிமைகளை மேம்படுத்த உலகெங்கிலுமுள்ள பெண்களின் வாழ்க்கையின் யதார்த்தத்தை இந்தியா ஆவணப்படுத்த வேண்டும்’’ என்று தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக, ஐ.நா-வுக்கான இந்தியாவின் நிரந்த உறுப்பினர் திருமூர்த்தி ட்விட்டரில், ``இந்த வெற்றி, பாலின சமத்துவத்தையும், பெண்களுக்கான அதிகாரமளிப்பையும் மேம்படுத்துவதற்காக இந்தியா கொண்டிருக்கும் உறுதிப்பாட்டுக்குக் கிடைத்திருக்கும் ஒப்புதல்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு