Published:Updated:

`போலி ஆதார் கார்டு... ஆவணங்களுக்கு பணம், ஐ-போன்' -டெல்லியில் உளவு பார்த்த பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள்

பாகிஸ்தான் - இந்தியா
பாகிஸ்தான் - இந்தியா

`இரு பாகிஸ்தான் அதிகாரிகளையும் பிடித்தபோது, `நாங்கள் இந்தியர்கள்’ எனச் சில ஆதார் கார்டுகளைக் காட்டினர். ஆனால், அவை எல்லாம் போலியானவை’ - அதிகாரிகள்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்று முதல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் தவிர்த்து மற்ற பகுதிகளில் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கட்டுப்பாடுகளுடன் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மறுபுறம், இந்தியா, சீன எல்லையில் பதற்றமான சூழலும் நீடிக்கிறது.

இந்தியா - சீனா
இந்தியா - சீனா

லடாக் பகுதியில் இந்தியா கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு சீனா கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்ததுடன் எல்லைப்பகுதியில் ராணுவ முகாம்களை அதிகரித்தது. பதிலுக்கு இந்தியாவும் ராணுவ வீரர்களைக் குவிக்க, பதற்றம் நிலவி வருகிறது. பதற்றத்தை தணிக்க இந்திய அரசு தொடர்ந்து முயன்று வருகிறது. இந்த நிலையில், பாகிஸ்தான் தூதர அதிகாரிகளில் இருவர் இந்தியாவில் உளவு பார்த்ததாக குற்றம்சாட்டப்பட்டு சொந்த நாட்டுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.

டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில் விசா பிரிவில் பணியாற்றி வந்தவர்கள் அபீத் ஹூசைன் மற்றும் தாஹிர் கான். கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் இவர்களது நடவடிக்கையில் டெல்லி சிறப்பு பிரிவு போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட, அவர்கள் இருவரையும் தொடர்ந்து மறைமுகமாக கண்காணித்து வந்தனர்.

`எல்லையில் பிடிபட்ட புறா.. கால்களில் எண்கள்.. பாகிஸ்தான் உளவு வேலையா?’- அதிகாரிகள் சொல்லும் விளக்கம்

நேற்று காலையில் இவர்கள் இருவரும், கரோல் பாக் என்னும் பகுதியில் இந்தியா பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை மற்றொருவரிடம் இருந்து பெறும் முயற்சியில் கண்காணிப்பில் இருந்த டெல்லி சிறப்பு பிரிவு போலீஸாரால் பிடித்து விசாரிக்கப்பட்டனர்.

போலீஸாரின் விசாரணையில் அவர்கள் பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ அமைப்புக்காக உளவு பார்த்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரும் இன்னும் 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

இந்த இரு அதிகாரிகளுடன் ஓட்டுநர் ஜாவெத் ஹூசைன் என்பவரும் தங்களின் கண்காணிப்பில் இருந்ததாக சொல்கிறார்கள் காவல்துறை அதிகாரிகள். ``இந்திய பாதுகாப்பு தொடர்பான ரகசிய ஆவணங்களை இந்தியாவைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து அவர்கள் பெற்றனர். அப்போது இவர்கள் அவருக்குப் பணம் மற்றும் ஐ-போனை வழங்கினர். அவர்களை பிடித்தபோது, `நாங்கள் இந்தியர்கள்’ எனச் சில ஆதார் கார்டுகளை காட்டினர், ஆனால், அவை எல்லாம் போலியானவை.

இந்தியா- பாகிஸ்தான்
இந்தியா- பாகிஸ்தான்
Re

அவர்கள் யார் என்பதை அறிந்துதான் பின்தொடர்ந்து பிடித்தோம். தொடர் விசாரணையில் தூதரகத்தில் பணியாற்றுவதையும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ -க்குப் பணியாற்றியதையும் ஒப்புக்கொண்டனர்” என்கிறார் அதிகாரி ஒருவர். மேலும், இந்த நடவடிக்கை டெல்லி போலீஸ் மற்றும் ராணுவ உளவு அமைப்பு மூலம் சாத்தியப்பட்டதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

அபீத் ஹூசைன் 2018 -ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதலும் தாஹிர் கான் 2015 அக்டோபர் மாதம் முதலும் பணியாற்றி வந்துள்ளனர். இந்த அதிர்ச்சி சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் தூதரகம் சார்பில் விளக்கம் எதுவும் தரப்படவில்லை. 2016-ம் ஆண்டிலும் இதேபோன்று பாகிஸ்தான் அதிகாரிகள் இருவர் இந்திய பாதுகாப்பு ஆவணங்களைப் பெற முயன்றபோது கைது செய்யப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அடுத்த கட்டுரைக்கு