Published:Updated:

கொரோனா: `8 மாநிலங்கள், 49 மாவட்டங்கள்; சமூக பரவல் இல்லை!’ - மத்திய சுகாதாரத்துறை

மத்திய சுகாதாரத்துறை அதிகாரி
மத்திய சுகாதாரத்துறை அதிகாரி

``ஒரு மில்லியன் மக்கள் தொகையில் 538 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இங்கு உள்ளது. ஆனால், மற்ற சில நாடுகளில் ஒரு மில்லியன் மக்கள் தொகையில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவைவிட 16 அல்லது 17 மடங்கு அதிகம்.”

கொரோனா வைரஸால் இந்தியா கடுமையாகப் பாதிப்படைந்துள்ளது. ஒவ்வொரு நாளும் பாதிப்பு என்ணிக்கை உச்சத்தை அடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 7,67,296 ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 21,129 ஆகவும் உள்ளது. இந்த நிலையில், மத்திய சுகாதார அமைச்சகமானது உலகிலேயே மிகவும் குறைவான அளவில் பாதிப்படைந்த நாடு இந்தியாதான் என்றும் அதிக மக்கள் தொகை இருந்தபோதிலும் இந்த நெருக்கடி நிலையை நன்றாக அரசு கையாண்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

கொரோனா - இந்தியா
கொரோனா - இந்தியா

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ராஜேஷ் பூஷன் இதுதொடர்பாகப் பேசும்போது, ``உலகிலேயே அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. 1.3 பில்லியன் மக்கள் தொகை இருந்த போதிலும் கொரோனா வைரஸ் நெருக்கடியை இந்தியா ஒப்பீட்டளவில் மிகச்சிறப்பாகக் கையாண்டு வருகிறது. உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, ஒரு மில்லியன் மக்கள் தொகையில் 538 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளது.

ஆனால், மற்ற சில நாடுகளில் ஒரு மில்லியன் மக்கள் தொகையில் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை இந்தியாவைவிட 16 அல்லது 17 மடங்கு அதிகம். அதேபோல, ஒரு மில்லியன் மக்கள் தொகைக்கு 15 இறப்புகள் பதிவாகின்றன. இறப்பு எண்ணிக்கை மற்ற நாடுகளில் இந்தியாவைவிட 40 மடங்கு அதிகமாக உள்ளது. நாட்டில் வைரஸால் பாதிப்படைந்தவர்களில் 2,69,000-க்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். இந்த தகவல் மத்திய அரசு சூழ்நிலையை எவ்வாறு கையாண்டுள்ளது என்பதைக் கூறுகிறது” என்று தெரிவித்தார்.

புதுக்கோட்டை:`கஜாவிலிருந்தே மீளல; இப்போ கொரோனா!’ - கலங்கும் மாற்றுத்திறனாளி குடும்பம்

இந்தியாவில் கொரோனா வைரஸ் இன்னும் சமூகப்பரவலாக மாறவில்லை எனக் குறிப்பிட்ட ராஜேஷ் பூஷன், ``உள்ளூர் அளவில் பரவல் மற்றும் சமூகப் பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு எந்தவித நிலையான விளக்கத்தையும் இதுவரை வழங்கவில்லை. பாரத் பயோடெக் மற்றும் கேடிலா ஹெல்த்கேர் ஆகிய நிறுவனங்கள் தடுப்பூசிகளை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அடுத்தகட்ட ஆய்வுக்கு அவர்கள் தயாரித்த தடுப்பூசிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இரண்டு தடுப்பூசிகளும் அரசின் ஒப்புதலுக்குப் பிறகு விலங்குகளின் மீது பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளன. அதற்கான சோதனைகள் இன்னும் தொடங்கவில்லை. விரைவில் இந்தச் சோதனைகள் தொடங்கும் என நம்புகிறேன்” என்று பேசினார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்
Pixabay

மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, கர்நாடகா மற்றும் தெலங்கானா உள்ளிட்ட எட்டு மாநிலங்களில்தான் 90 சதவிகிதம் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. அதிலும், சுமார் 49 மாவட்டங்களில் இருந்துதான் 80 சதவிகித பாதிப்புகள் பதிவாகியுள்ளன என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல ஒரு நாளைக்கு 2.6 லட்சத்துக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இறப்பவர்களில் பெரும்பான்மையானவர்கள் 60 வயதுக்கும் மேல் உள்ளவர்கள் என்றும் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Corona Live Updates: `ஒரே நாளில் 4 ஆயிரத்தை கடந்த பாதிப்பு’ - தமிழக கொரோனா நிலவரம்
அடுத்த கட்டுரைக்கு