Published:Updated:

உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்த இந்தியா; 75 ஆண்டுகளில் சாதித்தது என்ன?

இந்தியா | பொருளாதார வளர்ச்சி

உலகின் முக்கிய நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. இந்தியா சுதந்திர மடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பொருளாதார வளர்ச்சியில் நாம் கடந்து வந்த பாதையை சற்றே பின்னோக்கிப் பார்ப்போம்.

உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்த இந்தியா; 75 ஆண்டுகளில் சாதித்தது என்ன?

உலகின் முக்கிய நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து திகழ்ந்து வருகிறது. இந்தியா சுதந்திர மடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பொருளாதார வளர்ச்சியில் நாம் கடந்து வந்த பாதையை சற்றே பின்னோக்கிப் பார்ப்போம்.

Published:Updated:
இந்தியா | பொருளாதார வளர்ச்சி

நோய்த் தொற்று, பொது முடக்கம், உக்ரைன்-ரஷியா போர் என பல காரணங்களால் உலக அளவில் பல நாடுகளும் பொருளாதார பாதிப்புக்குள்ளானது. முக்கியமாகப் பொருளாதரத்தில் வளர்ந்த நாடான பிரிட்டனில் பிரச்னை அதிகரித்துள்ளது. பணவீக்கம் பிரிட்டனில் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. அதைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் வட்டி விகிதங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பெரும் பொருளாதார மதிப்பைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 5-வது இடத்தைப் பிடித்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்தித்துள்ள போதிலும், பவுண்ட் ஸ்டெர்லிங் மதிப்புடன் ஒப்பிடுகையில் இந்தியா வலுவடைந்தே உள்ளது. 2021-ம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வளர்ந்ததே இதற்கு முக்கியக் காரணம் என சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) தெரிவித்துள்ளது. இந்தத் தகவலை சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) தரவுகளின் அடிப்படையில் `புளூம்பெர்க்' ஊடக நிறுவனம் இதைக் கூறியுள்ளது.

இந்திய ரூபாயின் மதிப்பு
இந்திய ரூபாயின் மதிப்பு

1947-ம் ஆண்டு நாடு சுதந்திரமடைந்தபோது ஏற்பட்ட மதக்கலவரம், வறுமை, கடுமையான உணவுத் தட்டுப்பாடு ஆகியவற்றோடு வேறுபல சமூகப் பொருளாதாரப் பிரச்னைகளும் நாட்டை ஆட்கொண்டிருந்தன. ஆனால், அதிலிருந்தெல்லாம் கொஞ்சம், கொஞ்சமாக விடுபட்டு இன்றைக்கு பொருளாதார அளவில் உலகில் ஐந்தாவது நாடாக இந்தியா கம்பீரமாக வளர்ந்திருக்கிறது. இந்தியா சுதந்திரமடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், பொருளாதார வளர்ச்சியில் நாம் கடந்து வந்த பாதையை சற்றே பின்னோக்கிப் பார்ப்போம்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தியாவின் பொருளாதாரக் கொள்கை...

இந்தியா சுதந்திரமடைந்த காலகட்டத்தில் பல நாடுகள் பின்பற்றி வந்தது போல இந்தியாவும் கலப்புப் பொருளாதாரத்தைப் பின்பற்றியது. அதாவது, பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் சார்ந்த நிலைப்பாட்டை பின்பற்ற ஆரம்பித்தது. நாட்டுக்கு மிகவும் அவசியமான, முதலீடு அதிகம் தேவைப்படும் துறைகளான கனரக தொழில்கள், சுரங்கம், விமானப் போக்குவரத்து, போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு போன்ற துறைகளில் அரசின் பங்களிப்பு அதிகமாக இருந்தது.

1951-ம் ஆண்டு முதலாவது ஐந்தாண்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் அப்போதைய தேவைக்கேற்ப விவசாயம், நீர்ப்பாசனம் ஆகிய துறைகளில் முக்கிய கவனம் செலுத்தப் பட்டது.

இந்தியா 75: தேசியக் கொடி
இந்தியா 75: தேசியக் கொடி

1956-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில், தொழிற்துறை கொள்கை தீர்மானம் கலப்புப் பொருளாதாரத்துக்கான அடித்தளமாக அமைந்ததோடு பொதுத் துறை நிறுவனங்களைக் கட்டியெழுப்புவதற்கும் வழிவகுத்தது. ஆனால், அதற்குப் பிறகு அந்தத் தொழிற்கொள்கையானது `லைசென்ஸ் ராஜ்’ என அழைக்கப்படும் அளவுக்கு பல கட்டுப் பாடுகளைக் கொண்டிருந்ததால் தொழில் வளர்ச்சியில் சுணக்கம் ஏற்பட்டது.

இந்த இரண்டாவது ஐந்தாண்டு திட்டத்தில்தான் ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இண்டியா என்கிற பொதுத்துறை நிறுவனத்தின் மூலம் ரூர்கேலா, பிலாய், துர்காப்பூர் ஆகிய இடங்களில் ஜெர்மனி, ரஷ்யா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் ஒத்துழைப்புடன் உருக்கு இரும்பு தயாரிக்கும் தொழிற்சாலைகள் நிறுவப்பட்டன. அது போல பல்நோக்கு அணைகளான பாக்ரா, நங்கல் ஆகியவை கட்டப்பட்டன. இது நீர்பாசனத்துக்கும், மின்சாரம் உற்பத்தி செய்யவும் பயன்பட்டன. இந்தக் கட்டுமானங்களையெல்லாம் குறிக்கும் வகையில் நேரு இதை, `நவீன இந்தியாவின் கோயில்கள்” என அழைத்தார்.

சந்தித்த சவால்கள்!

ஆங்கிலேயர்கள் இந்தியாவில் காலூன்றிய போது உலகப் பொருளாதாரத்தில் 27 சதவிகிதமாக இருந்த இந்தியா, அவர்கள் வெளியேறியபோது 3.5 சதவிகிதம் என்கிற அளவுக்குக் குறைந்திருந்தது. அந்த அளவுக்கு ஆங்கிலேயர் இந்தியாவின் வளத்தைச் சுரண்டியிருந்ததோடு பொருளாதாரத்தை ஒரு மோசமான நிலைக்கு இட்டுச் சென்றிருந்தனர். அதிலிருந்து மீண்டு வந்துகொண்டிருந்த இந்தியா அதன் எல்லைப் பகுதிகளில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இந்தியா
இந்தியா

1947-48 பிரிவினையின்போது ஏற்பட்டக் கலவரம், 1962-ம் ஆண்டு சீனாவுடன் ஏற்பட்ட யுத்தம், 1965, 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடன் ஏற்பட்ட யுத்தங்கள் இந்தியாவில் நிலவி வந்த உணவுப் பற்றாக்குறையை மேலும் மோசமான நிலைக்குத் தள்ளியது. அந்தக் காலகட்டத்தில் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோதுமையை நம்பியே இந்தியா இருந்தது.

நேரு இறந்த பின் பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி கவனத்தை விவசாயத்தின் பக்கம் திருப்பினார். 1960-களில் மத்திய அரசானது எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் பல வேளாண் விஞ்ஞானிகளுடன் இணைந்து வேலை செய்து அதிக விளைச்சலைத் தரும் கோதுமை விதைகளைக் கண்டுபிடித்து அதை உபயோகிக்க ஆரம்பித்தது.

இதுவே `பசுமைப் புரட்சி’க்கான அடிநாதமாக அமைந்து வேளாண்மைத் துறையில் இந்தியாவை ஒரு தற்சார்ப்பு நாடாக உயர்த்தியது. அதன் பின், வர்கீஸ் குரியன் தலைமையில் `வெண்மைப் புரட்சி’ ஏற்பட்டு பால் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவைப் பெற்றது.

1960-களின் பிற்பகுதியில் இந்திராகாந்தி பிரதமராக இருந்த நேரத்தில் வங்கிகளும் காப்பீட்டு நிறுவனங்களும் அரசுடமை ஆக்கப்பட்டன. ஆரம்பத்தில் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகள் விவசாயத்துக்கும், சிறு தொழில்களுக்கும் கடனாக நிதி வழங்குவதில் சிறப்பாகச் செயல்பட்டன. ஆனால் நாளடைவில், அரசியல் காரணங்களின் அடிப்படையில் கடன் கொடுக்கப் பட்டதால் நாட்டுடமை ஆக்கப்பட்டதின் முக்கியத்துவத்தை இவை இழக்க ஆரம்பித்ததோடு `crony capitalism’ வளர வழி வகுத்தது.

இந்தியா - சீனா போர்
இந்தியா - சீனா போர்

கலப்புப் பொருளாதாரக் கொள்கையால் இந்தியா எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி அடையவில்லை எனப் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இது ஒரு புறம் இருந்தாலும், அந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா தவிர்த்து பல நாடுகள் கலப்புப் பொருளாதாரக் கொள்கையைத்தான் பின்பற்றி வந்தன. ஆனால், இந்தியா இந்தக் கொள்கையை மறுசீராக்கம் செய்யாமல் தொடர்ந்து பல தசாப்தங்கள் பின்பற்றி வந்ததால் வளர்ச்சிப் பாதிக்கப்பட்டது என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும்.

இந்திராகாந்தி மறைவுக்குப் பின் 1984-ம் ஆண்டு இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற ராஜீவ்காந்தி, தொழில்நுட்ப ஆலோசகர் சாம் பிட்ரோடாவின் ஆலோசனைப்படி தகவல்தொடர்புத் துறையில் மிகப் பெரிய மாறுதல்களைக் கொண்டு வந்தார்.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி
vikatan

அதற்குப் பிறகு, 1991-ம் ஆண்டு நரசிம்மராவ் தலைமையிலான அரசு தாராளமயமாக்கல் கொள்கையை அறிவித்து பொருளாதாரத்தில் ஒரு மிகப் பெரிய மாற்றத்துக்கு வித்திட்டது. இது இந்தியாவை பொதுவுடமைப் பாதையிலிருந்து விலகி பொருளாதார வளர்ச்சிப் பாதையில் பயணிக்கச் செய்தது. இந்தத் தாராளமயமாக்கல், தனியார்மயமாக்கல், உலகமயமாக்கல் கொள்கைக்கு ஏறக்குறைய அனைத்துக் கட்சிகளும் ஆதரவளித்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இப்போதிருக்கும் மத்திய பாரதீய ஜனதா அரசும் இந்தக் கொள்கையை இன்னும் தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதோடு `Insolvency and Bankruptcy Code, 2016’ போன்ற சட்டங்களின் மூலம் கட்டமைப்பு ரீதியில் மாற்றங்களைச் செய்து வருவதோடு விமர்சனங்களுக்கு உட்பட்டாலும் பல நிலைகளில் இருந்த வரிகளை மாற்றி சரக்கு மற்றும் சேவை வரி என்கிற ஜிஎஸ்டி-யை கொண்டு வந்தது எனப் பல அடிப்படை மாற்றங்கள் தொடர்ந்து நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

உலகில் பல்வேறு நாடுகளைப் போல இந்தியாவும் கோவிட்-19 என்கிற பெருந்தொற்று பாதிப்பிலிருந்து மீண்டு வந்து கொண்டிருந்தாலும் ஒழுங்கமைக்கப்பட்ட துறையின் (organized sector) வளர்ச்சியோடு ஒப்பிடும்போது நாட்டின் பொருளா தாரத்தில் ஏறக்குறைய 50 சதவிகிதம் பங்களிக்கும் ஒழுங்கமைக்கப்படாத துறையின் (unorganized sector) வளர்ச்சி கவலையளிக்கும்படி இருக்கிறது. மேலும், அதிகரித்துவரும் பணவீக்கம், சமத்துவமின்மை, வேலைவாய்ப்பின்மை போன்றவை பொருளாதாரத்தை சிரம திசைக்கு இட்டுச் செல்லக்கூடும் எனவும் சில பொருளாதார நிபுணர்கள் கூறி வருகிறார்கள்.

1947-ம் ஆண்டுக்கும் 2022-ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட 75 ஆண்டுக்காலத்தில் இந்திய பல்வேறு துறைகளில் அடைந்த வளர்ச்சி கீழே:

உலகின் 5-வது பெரிய பொருளாதார நாடாக வளர்ந்த இந்தியா; 75 ஆண்டுகளில் சாதித்தது என்ன?

உலகின் முக்கிய நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா தொடர்ந்து திகழ்ந்து வருகிறது.

உலக அளவில் மிகப்பெரும் பொருளாதார மதிப்பைக் கொண்ட நாடாக அமெரிக்கா விளங்கி வருகிறது. அதற்கு அடுத்த இடங்களில் சீனா, ஜப்பான், ஜெர்மனி ஆகியவை உள்ளன. 10 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தப் பட்டியலில் இந்தியா 11-வது இடத்தில் இருந்தது. தற்போது 5-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் 6-வது இடத்தில் உள்ள பிரிட்டனுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான பொருளாதார மதிப்பு இடைவெளி மிகப் பெரிய அளவில் அதிகரிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயம், ஒழுங்கமைக்கப்படாத வணிகத் துறை, சிறு தொழில்கள், சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினர் ஆகியவை சம்பந்தப்பட்ட சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தால் அது இந்தியாவை உலகின் முதல் மூன்று பெரிய பொருளாதாரமிக்க நாடுகள் என்கிற நிலையை நோக்கிச் செல்ல உதவும்.