Published:Updated:

`டிரைவ் தி டிரைவர் ஃபண்ட்!’ - லாக்டவுனில் இந்தியா; ஓட்டுநர்களுக்காக நிதிதிரட்டும் ஓலா #corona

ஓலா
ஓலா

இந்திய அரசு அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு உத்தரவின் காரணமாக ஓட்டுநர்கள் பலர் வேலையிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு தினக்கூலி தொழிலாளிகளுக்கு மிகுந்த வேதனையை அளித்துள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வாகனங்கள் இயங்கவில்லை. இந்தியாவின் பல மாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அரசின் இந்தத் திடீர் உத்தரவின் காரணமாக கால்நடையாக தங்களது சொந்த மாநிலத்துக்கும் ஊர்களுக்கும் பயணமாகின்றனர். அண்டை மாநிலங்களுக்குச் சென்ற வாகன ஓட்டுநர்களும் கடும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

சென்னை, மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களில் மொபைல் செயலி மூலம் இயங்கும் டாக்ஸிகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இதையடுத்து பலரும் இந்த நிறுவனங்களில் தங்களை இணைத்துக்கொண்டு வருமானம் ஈட்டி வந்தனர். தனியார் துறையில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு இதுபெரும் உதவியாக இருந்தது. பொதுப்போக்குவரத்து குறைவாக இருக்கும் நேரங்களில் இந்தச் சேவையைப் பயன்படுத்தி வந்தனர். டாக்ஸி நிறுவனத்தைச் சார்ந்து இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான ஓட்டுநர்கள் உள்ளனர். இந்திய அரசு அறிவித்துள்ள இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக அவர்கள் அனைவரும் வேலையிழந்து காணப்படுகின்றனர்.

இந்நிலையில் வேலையின்றி பட்டினியில் வாடும் கார், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நிதியுதவி அளிக்கும் முயற்சியில் ஓலா நிறுவனம் களமிறங்கியுள்ளது. Drive the Driver Fund என்ற ஆப் மூலம் நிதி திரட்டுவதற்கு ஓலா முயன்றுள்ளது. இதன்மூலம் கிடைக்கும் நிதியை கொரோனா ஊரடங்கு உத்தரவால் பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கும் ஓட்டுநர்களின் குடும்பங்களுக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஓலா
ஓலா

ஓலா நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்கள் இதற்காக ரூ.20 கோடி வழங்க முடிவு செய்துள்ளனர். அந்த நிறுவனத்தின் தலைவர் பவிஷ் அகர்வால் தன்னுடைய பங்காக ஒரு வருட சம்பளத்தை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பவிஷ், ``லட்சக்கணக்கான ஓட்டுநர்களும் அவர்களது குடும்பத்தினரும் வருமானமின்றித் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில்தான். Drive the Driver Fund என்ற ஆப் அறிமுகம் செய்துள்ளோம். நான் என்னுடைய ஒருவருடச் சம்பளத்தை இதற்காக அளிக்கிறேன். ஓலா அறக்கட்டளையானது ஓட்டுநர்களின் குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய மற்றும் அவசரகால உதவியைக் கருத்தில் கொண்டு செயல்படும். அவர்களின் அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்யப்படும். குழந்தைகளின் கல்விக்கும் இந்த நிதியைப் பயன்படுத்துவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு