Published:Updated:

C.A.A நெருப்பு: இந்தியா தன்னுடைய நட்பு நாடுகளை இழந்து வருகிறதா?

மோடி - அமித் ஷா
மோடி - அமித் ஷா

இந்தியாவின் நட்பு நாடுகளும் சி.ஏ.ஏ, டெல்லி வன்முறை தொடர்பாக இந்தியாவை கடுமையாக விமர்சிக்கத் தொடங்கிவிட்டன.

டிசம்பர் முதல் வாரத்தில் கொளுத்தப்பட்ட சி.ஏ.ஏ நெருப்பு தற்போது வரை அணையவில்லை. மூன்று மாதங்களைக் கடந்தும் நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எதிர்க்கட்சிகள் தொடர்ந்து சி.ஏ.ஏ-வை நிராகரித்து வருகின்றன. மாநிலங்கள் ஒவ்வொன்றாக என்.பி.ஆர் - என்.ஆர்.சி-யை அமல்படுத்த மாட்டோம் எனத் தெரிவித்து வருகின்றன.

சி.ஏ.ஏ
சி.ஏ.ஏ

சர்வதேச அளவிலும் சி.ஏ.ஏ-வுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் நிலவிவருகிறது. ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா நாடாளுமன்றங்களில் சி.ஏ.ஏ விவாதிக்கப்படுகிறது. சி.ஏ.ஏ வழக்கில் தலையிட விருப்பம் தெரிவித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையம், உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. தற்போது இந்தியாவின் நட்பு நாடுகளுமே இந்தியா மீது கடுமையான போக்கை கையாளத் தொடங்கியிருக்கின்றன.

இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவேத் சரீஃப் தன்னுடைய ட்விட்டரில், ``இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான ஒருங்கிணைக்கப்பட்ட வன்முறையை இரான் வன்மையாகக் கண்டிக்கிறது. பல நூற்றாண்டுகளாக இரான் இந்தியாவின் நட்பு நாடாக இருந்து வருகிறது. அனைத்து இந்தியர்களின் நலத்தையும் இந்தியா உறுதி செய்து குண்டர்களின் ஆதிக்கத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். அமைதியான விவாதம், சட்டத்தின் ஆட்சி மூலம் மட்டுமே முன் செல்ல முடியும்” என்று பதிவிட்டிருந்தார்.

ஜாவேத் சரீஃப்
ஜாவேத் சரீஃப்

இதற்கு இந்தியா கடும் ஆட்சேபனை தெரிவித்திருந்தது. இந்தியாவுக்கான இரான் தூதரை அழைத்து ஜாவேத் சரீஃபின் கருத்துக்குக் கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது. இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் இரான் தலையிட வேண்டாம் என்றும் இந்திய அரசு தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து இருநாடுகளுக்கும் இடையேயான கருத்து மோதல்கள் தணியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

சி.ஏ.ஏ வழக்கில் ஐ.நா தலையீடு... இந்தியாவுக்கு அதிகரிக்கும் நெருக்கடி... பின்னணி என்ன?

ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. அதைத் தொடர்ந்து இரானின் முதுபெரும் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி இந்தியாவில் நடைபெற்று வரும் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கலைக் கண்டித்தார். தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், ``இந்தியாவில் நடைபெற்று வரும் முஸ்லிம்களின் படுகொலைகளைக் கண்டு உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களின் இதயம் வருந்துகிறது. இந்தியா தீவிரவாத இந்துக்களையும் அவருடைய கட்சிகளையும் கட்டுப்படுத்தி முஸ்லிம்களின் படுகொலையைத் தடுக்க வேண்டும், இல்லையென்றால் இஸ்லாமிய நாடுகளிடமிருந்து இந்தியா தனித்துவிடப்படும்” என்று கடுமையான கருத்துகளைப் பதிவிட்டுள்ளார்.

அயத்துல்லா அலி கொமேனி
அயத்துல்லா அலி கொமேனி

இதைத் தொடர்ந்து பிரிட்டன் நாடாளுமன்றத்திலும் டெல்லியில் நடைபெற்ற வன்முறை பற்றி விவாதிக்கப்பட்டது. இந்திய அரசுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். `டெல்லியில் நடைபெற்றதை `மோதல்’ என்று சொல்லாதீர்கள் `அரங்கேற்றப்பட்ட படுகொலை’ என்று சொல்லுங்கள்’ என பிரிட்டன் எம்.பி நாடியா தெரிவித்தார். மனித உரிமைகளை சமரசம் செய்துகொள்ளும் விதத்தில் இந்திய அரசுடன் எந்தவிதமான தொடர்புகளும் வைத்துக்கொள்ள மாட்டோம் என பிரிட்டன் அரசு தெரிவித்திருக்கிறது.

இந்திய நாடாளுமன்ற கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. டெல்லி வன்முறை பற்றி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் விடுத்த கோரிக்கையை பா.ஜ.க நிராகரித்துவிட்டது. பிரிட்டன் நாடாளுமன்றத்திலே டெல்லி வன்முறையைப் பற்றி விவாதிக்க முடிகிறபோது இந்திய நாடாளுமன்றத்தில் விவாதிக்க முடியாமல் போனது துரதிர்ஷ்டவசமானது என எதிர்க்கட்சிகள் எம்.பி-க்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இந்தியாவின் நட்பு நாடுகளாக அறியப்படுகிற வங்கதேசமும் ஆப்கானிஸ்தானுமே சி.ஏ.ஏ விவகாரத்தில் இந்திய அரசு கவனமுடன் செயல்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றன.

வங்கதேச போராட்டம்
வங்கதேச போராட்டம்

டெல்லியில் நடைபெற்ற வன்முறைகளைக் கண்டித்து ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்திலும் போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. வங்கதேசத்தின் தந்தை முஜ்பூர் ரஹ்மான் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள பிரதமர் மோடி வங்கதேசம் செல்லவிருக்கிறார். மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டங்களின் தீவிரத்தை ஒப்புக்கொண்டு வங்கதேச அரசே அறிக்கை வெளியிடும் அளவுக்கு நிலைமை தீவிரமாக உள்ளது.

இந்தியாவின் வெளியுறவு கொள்கை பற்றி மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் நம்மிடம் பேசுகையில், ``தற்போதைய அரசுக்கு அனைத்துமே வாக்கு அரசியல்தான், தேர்தல் வெற்றியைத் தாண்டி வேறு எதையுமே முதன்மைப்படுத்துவதில்லை. அதனால் வங்கதேசம், இரான் போன்ற நட்பு நாடுகளுடனான வெளியுறவுகூட மோசமடைந்து வருகிறது. நேபாளம், வங்கதேசம், பூடான், இலங்கை, மாலத்தீவு என எந்த நாடுகளுடனும் இந்தியாவுக்கு தற்போது சுமுகமான உறவு இல்லை. ஏற்கெனவே இருந்த நிலைகூட மோசமடைந்துதான் வருகிறது. ஆனால், அரசு அதை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. மாறாக அந்த நாடுகளுடன் மோதலான போக்கை கையாள்கிறது.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

சிக்கலை ஒப்புக்கொண்டால் மட்டுமே அதைச் சீர் செய்வதற்கான எண்ணம் வரும். எந்தச் சிக்கலையும் இந்த அரசு ஒப்புக்கொள்ள மறுக்கிறது. இது இந்தியாவுக்கு மட்டுமல்லாது அந்த நாடுகளில் வாழ்கிற இந்தியர்களுக்கும் சிக்கலையே ஏற்படுத்தும். அண்டை நாடுகளில் பல்வேறு இந்தியர்கள் வியாபாரம் போன்ற காரணங்களுக்காக வசித்து வருகின்றனர். இத்தகைய அணுகுமுறை சீனாவுக்கே சாதகமாக அமையும். இந்தியா தன்னுடைய நட்பு நாடுகளை இழந்து வருவதே யதார்த்தம்” என்றார்.

இந்தியா தன்னுடைய நட்பு நாடுகளை இழந்து வருகிறதா என்று சமீபத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ``நம்முடைய உண்மையான நண்பர்கள் யார் என்பதைத் தெரிந்து வருகிறோம்” என்று பதிலளித்துள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு