Published:Updated:

`துப்பாக்கி முனையில் எங்களை ஒருவர் மிரட்டினார்!’ -நோபல் பரிசு பெற்றவருக்கு கேரளாவில் நேர்ந்த துயரம்

நோபல் பரிசு பெற்ற மைக்கேல் லெவிட்
நோபல் பரிசு பெற்ற மைக்கேல் லெவிட் ( nobelprize.org )

நோபல் பரிசு பெற்ற அறிவியலாளர், கேரளாவில் தனக்கு நேர்ந்த கசப்பான அனுபவம் பற்றியும் இந்தியாவின் நிலை பற்றியும் வருத்தம் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கை மற்றும் பழைய ஓய்வூதிய திட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று மத்திய தொழிற்சங்கங்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. தமிழகம், கேரளா, மேற்குவங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த வேலைநிறுத்தம் நடத்தப்பட்டது.

கேரளா பந்த்
கேரளா பந்த்
Twitter

கேரளாவில் நடந்த வேலைநிறுத்தம் முழு அடைப்பு போராட்டமாக மாறியது. இதையொட்டி தனியார் மற்றும் அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. வெளி மாநிலங்களிலிருந்து கேரளாவுக்குச் செல்லும் பஸ்கள் இரு மாநில எல்லைகளில் நிறுத்தப்பட்டன. கேரளாவின் பல்வேறு இடங்களில் மத்திய அரசைக் கண்டித்து போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த நிலையில், நோபல் பரிசு பெற்ற பேராசிரியரை கேரள போராட்டக்காரர் ஒருவர் மிரட்டிய சம்பவம் நடைபெற்றுள்ளது.

மைக்கேல் லெவிட் (Michael Levitt) என்பவர் அமெரிக்க-பிரிட்டிஷ்-இஸ்ரேலிய உயிர் இயற்பியலாளராகவும் அமெரிக்காவின் ஸ்டான்ஃபோர்ட் (Stanford) பல்கலைக்கழகத்தின் கட்டமைப்பு உயிரியல் பேராசிரியராகவும் உள்ளார். தன் வேதியியல் பணிகளுக்காகக் கடந்த 2013-ம் ஆண்டு இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதற்கிடையில் மைக்கேல், கேரளாவில் நடந்த ஒரு பல்கலைக்கழக நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக அம்மாநில அரசின் விருந்தினராகக் கொச்சி வந்துள்ளார்.

படகு இல்லம்
படகு இல்லம்

நேற்று மைக்கேல் தன் குடும்பத்தினருடன் ஆழப்புலாவில் சுற்றுலா படகு சவாரி செய்துள்ளார். அப்போது அங்கு வந்த ஒருவர், மைக்கேலின் படகை நடுவழியிலேயே நிறுத்தியுள்ளார். `மாநிலம் முழுவதும் வேலைநிறுத்தம் நடப்பதால் படகு இயக்கக் கூடாது' என மிரட்டியுள்ளார். சுமார் ஐந்து மணிநேரத்துக்குப் பிறகு அந்த மிரட்டல்காரரிடமிருந்து மைக்கேல் விடுவிக்கப்பட்டுள்ளார்.

``10 நிமிடங்கள் வாகனத்தை நிறுத்திவைத்து ஆதரவு தாருங்கள்!'' - தொழிற்சங்கங்கள் வேண்டுகோள்

கேரளாவில் தனக்கு நடந்த கசப்பான சம்பவம் தொடர்பாக மைக்கேல், கோட்டயம் சுற்றுலா ஏஜென்ட்டுக்கு ஒரு மெயில் அனுப்பியுள்ளார். அதில் , `நாங்கள் படகு சவாரி செய்துகொண்டிருக்கும்போது பாதிவழியிலேயே நிறுத்தப்பட்டோம். துப்பாக்கி முனையில் ஒருவர் எங்களைத் தடுத்தார். பின்னர் சில மணி நேரங்கள் கழித்தே எங்கள் படகை விடுவித்தார். வேலை நிறுத்தப் போராட்டத்தில் சுற்றுலாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அனைத்து கருத்துகளையும் நான் புறக்கணிக்கிறேன்.

மைக்கேல் லெவிட்
மைக்கேல் லெவிட்
Asianet

எங்களை மிரட்டிய நபர், சுற்றுலாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டதையும் நான் கேரள அரசின் விருந்தினர் என்ற அனைத்து வாதங்களையும் புறக்கணித்துவிட்டார். அவர் மீது வழக்கு பதிவு செய்யப்படாது என்பதை அறிந்திருந்தே மிகவும் வெளிப்படையாகவே செயல்பட்டார். வருத்தமான விஷயம் என்னவென்றால், இந்தியா கொஞ்சம் கொஞ்சமாகச் சட்டவிரோதத்தில் மூழ்கி வருகிறதோ என்ற பயம் எனக்கு வந்துவிட்டது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வருத்தமான விஷயம் என்னவென்றால், இந்தியா கொஞ்சம் கொஞ்சமாகச் சட்டவிரோதத்தில் மூழ்கி வருகிறதோ என்ற பயம் எனக்கு வந்துவிட்டது.
நோபல் பரிசு பெற்ற மைக்கேல் லெவிட்

இவரின் மெயில் தொடர்பான தகவல் வெளியான பிறகு, படகு உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் மைக்கேலை மிரட்டியவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் நடந்த சம்பவம் குறித்துப் பேசியுள்ள அம்மாநில சுற்றுலாத் துறை அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன், ``படகை நிறுத்திய சமூக விரோதி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மைக்கேல், கேரள அரசின் விருந்தினராக வந்திருந்தார். வேலை நிறுத்தப் போராட்டத்திலிருந்து சுற்றுலாத் துறைக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்ததை அரசு முன்னரே தெளிவுபடுத்தியிருந்தது” என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு