Published:Updated:

`ஒரே வாரத்தில் 50,000 பாசிடிவ்; உலகளவில் 7-வது இடம்!’ - ஜெர்மனி, பிரான்ஸை முந்தியது இந்தியா #Corona

இந்தியா கொரோனா
இந்தியா கொரோனா

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் இந்தியா உலகளவில் 7-வது இடத்துக்குச் சென்றுள்ளது.

இந்தியாவில் 4-ம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில் இன்று முதல் UNLOCK 1.0 தொடங்குகிறது. இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஷாப்பிங் மால்கள், பேருந்துகள், நிறுவனங்கள் போன்றவை அரசின் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டுள்ளன. இங்கு நான்கு கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் தற்போது இந்தியாவில் வைரஸ் பரவலின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்தியா கொரோனா
இந்தியா கொரோனா
AP

நாடு முழுவதும் எப்போதும் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 8,380 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,88,883 -ஆக அதிகரித்துள்ளது. மேலும், உலகில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் கொண்ட நாடுகளின் பட்டியலில் 9-வது இடத்திலிருந்த இந்தியா நேற்றைய பாதிப்பினால் 7-வது இடத்துக்குச் சென்றுள்ளது. இதனால் ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய நாடுகளையும் முந்தியுள்ளது இந்தியா.

கடந்த ஞாயிற்றுக்கிழமை 1,38,000 பாசிடிவ் வழக்குகளுடன் இரானை முந்தி 10-வது இடத்திலிருந்தது இந்தியா. சரியாக ஒரே வாரத்தில் அதாவது இந்த ஞாயிற்றுக்கிழமைக்குள் நாடு முழுவதும் சுமார் 50,000 பாசிடிவ் கேஸ்கள் அதிகரித்து 7-வது இடத்துக்கு வந்துள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்திலும், பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகள் 2 மற்றும் 3-வது இடத்திலும் உள்ளன. ஸ்பெயின், இங்கிலாந்து, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அடுத்து இந்தியா உள்ளது. இது இந்திய மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா கொரோனா
இந்தியா கொரோனா
AP

மேலும், மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் உயிரிழப்பு விகிதமும் குறைவாக இருப்பதாகவே கூறப்படுகிறது. நேற்று மட்டும் இந்தியாவில் 193 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 99 பேரும், குஜராத்தில் 27 பேரும், டெல்லியில் 18 பேரும் உயிரிழந்துள்ளனர். மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்குவங்கம், தமிழ்நாடு, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் ஒற்றை இலக்கங்களில் இறப்புகள் பதிவாகியுள்ளன. இதனால் கொரோனாவால் இந்தியாவில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5,408 ஆக அதிகரித்துள்ளது.

`தொழிலாளர்களை அனுப்பிவிட்டு ஊரடங்கு அறிவித்திருக்கலாம்!’ - பிரதமருக்கு மருத்துவ வல்லுநர்கள் கடிதம்

அதே நேரத்தில் இங்கு வைரஸால் பாதிக்கப்பட்டுக் குணமடைந்து வருபவர்களின் நிலை 42 சதவிகிதத்திலிருந்து 47 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையில் 91,852 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

`மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் மக்கள் தொகை பல மடங்கு அதிகம். இருந்தும் இங்கு பாதிப்பு குறைவாகவே உள்ளது. இந்தியா மற்ற நாடுகளைப் போல மோசமாகப் பாதிக்கப்படவில்லை’ என நேற்றைய மன்கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு