Published:Updated:

`மத்திய அரசுதான் முடிவு செய்யணும்!’- `பாரத்’ பெயர்மாற்ற மனுவைத் தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

``ஆதார் அட்டையில் பாரத் சர்க்கார், ஓட்டுநர் உரிமத்தில் யூனியன் ஆஃப் இந்தியா, பாஸ்போர்ட்டுகளில் இந்தியக் குடியரசு என ஒவ்வோர் ஆவணத்திலும் ஒவ்வொரு பெயர் இடம்பெற்றுள்ளது.”

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் நமஹா என்பவர் இந்தியாவின் பெயரை `பாரத்’ என்று மாற்ற வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்தார். நீதிபதிகளின் முன்பு இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் தலையிட மறுத்த நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு
மத்திய அரசு
wikipedia

இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவில், ``இண்டிகா’ என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து பெறப்பட்ட பெயர்தான் இந்தியா. இது காலனி ஆதிக்கத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது. நாட்டிலுள்ள மக்கள் காலனி ஆதிக்கச் சிந்தனையிலிருந்து வெளியே வர நாட்டின் பெயரை `பாரத்’ என்று மாற்ற வேண்டும். `பாரத் மாதா கி ஜெய்’ என்ற வாசகம் நாட்டின் வரலாறு முழுவதும் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. ஆங்கிலப் பெயரை நீக்குவது ஒரு குறியீடாகத் தோன்றினாலும் வருங்காலத் தலைமுறையினருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக இருக்கும். பாரத் என்று பெயரை மாற்றுவது சுதந்திரத்துக்காகக் கடுமையாகப் போராடிய நம் முன்னோர்களின் போராட்டத்தை நியாயப்படுத்தும்” என்று மனுதாரர் குறிப்பிட்டிருந்தார்.

`பாகிஸ்தானை வெளியேற்ற  வேண்டுமென்றே தோற்றதா இந்தியா?’ -பென் ஸ்டோக்ஸ் சுயசரிதையால் எழுந்த சர்ச்சை

ஆதார் அட்டையில் பாரத் சர்க்கார், ஓட்டுநர் உரிமத்தில் யூனியன் ஆஃப் இந்தியா, பாஸ்போர்ட்டுகளில் இந்தியக் குடியரசு என ஒவ்வோர் ஆவணத்திலும் ஒவ்வொரு பெயர் இடம்பெற்றுள்ளது. இது குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் ஒரேமாதிரியாக அறியப்படும் வகையில் பெயரை மாற்ற சட்டத்தில் திருத்தத்தை ஏற்படுத்த மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் வழக்கு தொடர்ந்தவர் வாதத்தை முன்வைத்தார்.

இதனை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வு, நாங்கள் அந்த உத்தரவைப் பிறப்பிக்க முடியாது. அரசியலமைப்பில் ஏற்கெனவே, இந்தியா `பாரத்’ என்றும் அழைக்கப்படுகிறது. எனவே, இந்த மனுவை கோரிக்கை மனுவாகக் கருதி மத்திய அரசின் உரிய துறைக்கு அனுப்ப வேண்டும். இந்த மனு தொடர்பாக மத்திய அரசு முடிவுகளை எடுக்கும் என்று கூறி மனுவைத் தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

இதேபோல ஒரு மனுவை உச்சநீதிமன்றம் 2016-ம் ஆண்டு தள்ளுபடி செய்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தியா சுதந்திரமடைந்த பிறகு அரசியலமைப்பு இந்தியா மற்றும் பாரத் ஆகிய இரண்டு பெயர்களையும் ஏற்றுக்கொண்டது. ஆரம்பத்தில் பிரிட்டிஷ் இந்தியா `இந்துஸ்தான்’ என்று அழைக்கப்பட்டதாகவும் இதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பை உருவாக்கிய பி.ஆர்.அம்பேத்கர், `உலகளவில் நாடானது `இந்தியா’ என்று அறியப்படுகிறது. எனவே, அந்தப் பெயரையும் தக்கவைத்துக்கொள்ள வேண்டும்’ என்று கூறியிருந்தார். அரசியலமைப்புப் பிரிவு 1(1)-ன் படி பாரத் என்ற இந்தியா மாநிலங்களின் ஒன்றியமாக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு