Published:Updated:

`காஷ்மீர் விவகாரத்தில் பேச வேண்டியது இது மட்டும்தான்!'- ஐ.நா கோரிக்கையை நிராகரித்த இந்தியா

ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸ்
ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸ்

ட்ரம்ப் - மோடி இடையே நல்ல நட்பு இருந்தும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மூன்றாவது நபரின் அல்லது அமைப்பின் அல்லது நாட்டின் தலையீட்டை விரும்பவில்லை என்னும் நிலைப்பாட்டைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது.

ஐ.நா சபையின் பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸ், நான்குநாள் சுற்றுப்பயணமாக பாகிஸ்தான் சென்றுள்ளார். நேற்று அவர் இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா முகமது குரோஷியைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பில் இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்னைகள் குறித்தும், எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது, மேலும், இந்தச் சந்திப்பில் பாகிஸ்தான் தரப்பிலிருந்து, காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு பிரச்னைகளுக்குத் தீர்வு காண கோரிக்கை வைத்ததாகக் கூறப்படுகிறது.

`காஷ்மீர் விவகாரத்தில் பேச வேண்டியது இது மட்டும்தான்!'- ஐ.நா கோரிக்கையை நிராகரித்த இந்தியா

இந்தச் சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஆன்டானியோ கட்டர்ஸ், ``அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் ஏற்படுத்த இருக்கும் ஒரே வழி பேச்சுவார்த்தைதான். இதைதான் ஐ.நா-வின் பாதுகாப்பு கவுன்சிலும் சொல்கிறது. ஆரம்பம் முதலே இந்த விவகாரத்தில் எனது எண்ணத்தைத் தெரிவித்து வந்திருக்கிறேன். இருநாடுகளும் ஒப்புக்கொண்டால் காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருக்கிறேன்" என்றார். மேலும், எல்லைப் பகுதிகளில் அமைதி நிலவ வேண்டும் எனவும் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஐ.நா பொதுச் செயலாளர் ஆன்டானியோ கட்டர்ஸின் கருத்துக்கு பதிலளித்துள்ள வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ராவேஷ் குமார், ``காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்பது மாறாத ஒன்று. காஷ்மீர் என்பது இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கிறது, இனியும் அப்படித்தான் இருக்கும். காஷ்மீர் விவகாரத்தில் பேசவேண்டியதெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அது அங்கு ஆக்கிரமிப்பு செய்துள்ள பாகிஸ்தான் மற்றும் சட்ட விரோதமாகக் குடியேறியுள்ள தீவிரவாதிகள் ஆகியோரின் வெளியேற்றம் குறித்துதான் விவாதிக்க வேண்டும். இது தவிர, வேறு எதாவது சிக்கல் இருந்தால், அதை இருநாட்டுப் பேச்சுவார்த்தை மூலம்தான் தீர்க்க வேண்டுமே தவிர, இதில் மூன்றாவது நபரின் தலையீடு அவசியமில்லை என்ற இந்தியாவின் கருத்தில் மாற்றமில்லை" என்றார்.

`பாகிஸ்தானை நம்புகிறேன்; காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம்!’ - சொன்னதையே சொல்லும் ட்ரம்ப்
`காஷ்மீர் விவகாரத்தில் பேச வேண்டியது இது மட்டும்தான்!'- ஐ.நா கோரிக்கையை நிராகரித்த இந்தியா

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பல முறை, காஷ்மீர் விவகாரத்தில் தான் மத்தியஸ்தம் செய்ய விரும்புவதாகத் தெரிவித்தும் இந்தியா தொடர்ச்சியாக அதை மறுத்து வந்துள்ளது. ட்ரம்ப் - மோடி இடையே நல்ல நட்பு இருந்தும் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா மூன்றாவது நபரின் அல்லது அமைப்பின் அல்லது நாட்டின் தலையீட்டை விரும்பவில்லை என்பதைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. எனினும் பாகிஸ்தான் தொடர்ச்சியாக இந்த விவகாரத்தில் மத்தியஸ்தம் அவசியம் எனச் சொல்லி வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு