Published:Updated:

மாரடைப்பால் உயிரிழந்த முதியவர்; சோதனை முடிவில் பாசிடிவ் - இந்தியாவில் அதிகரித்த கொரோனா பலி எண்ணிக்கை

கொரோனா
கொரோனா

இந்தியாவின் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை உயிரிழந்துள்ள அனைவரும் 60 வயதுக்கு அதிகமானவர்கள்.

சீனாவின் வுகான் நகரிலிருந்து தொடங்கியதாகக் கூறப்படும் கொரோனா வைரஸ் தற்போது மொத்த உலகத்தையும் ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது. இதனால் ஒரு நாட்டின் பொருளாதாரம் முதல் சாதாரண மக்களின் இயல்பு வாழ்க்கை வரை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல நகரங்கள் முற்றிலும் முடக்கப்பட்டு பொதுமக்கள் உணவு இல்லாமல் பெரும் துயரைச் சந்தித்து வருகின்றனர். இந்தியாவைப் பொறுத்தவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 167 ஆக உள்ளது. அவர்களில் 25 பேர் வெளிநாட்டினர்.

கொரோனா
கொரோனா

நாடு முழுவதும் இதுவரை 15 பேர் முற்றிலும் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது. கர்நாடகா, டெல்லி, மும்பை ஆகிய இடங்களில் தலா ஒருவர் உயிரிழந்த நிலையில் தற்போது பஞ்சாபைச் சேர்ந்த மற்றொருவரும் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் நான்கு பேரும் 60 வயதைத் கடந்தவர்கள்.

கொரோனா: கூட்ட நெரிசலைத் தவிர்க்கக் கூடுதல் மதுக்கடைகளைத் திறக்கும் கேரள அரசு?

இறுதியாக உயிரிழந்துள்ளவர் பஞ்சாபைச் சேர்ந்த 72 வயது முதியவர். இவர் கடந்த வாரங்களில் ஜெர்மனி மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளுக்குச் சென்றுவிட்டு இந்தியா திரும்பியுள்ளார். உடல்நிலை மோசமாகி பஞ்சாப், நவன்ஷஹர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவருக்கு வைரஸ் சோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் வெளியாகும் முன்னரே மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இறந்த அவருக்கு வைரஸ் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரொனா
கொரொனா

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பாதிப்பால் பல்வேறு நகரங்களில் பள்ளி, கல்லூரிகள், திரையரங்கங்கள், வணிக வளாகங்கள், சுற்றுலா தளங்கள் போன்ற அனைத்தும் மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. இதனால் நாட்டின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் ஒருவருக்குக் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் நிலை மற்றும் சில முக்கிய விஷயங்கள் குறித்து இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்களுடன் பிரதமர் மோடி பேசவுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு