Published:Updated:

ராணுவ வீரர்களைக் குவிக்கும் இந்தியா; நிலைமை சீராக உள்ளதாகக் கூறும் சீனா!-என்ன நடக்கிறது எல்லையில்?

சீன எல்லை
சீன எல்லை ( கோப்பு படம் )

சீன எல்லையில் கடந்த ஆண்டு குவிக்கப்பட்டிருந்த வீரர்களைவிட இந்த ஆண்டு 40 சதவிகிதம் அதிகமாகக் குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்தியாவுடன் தனது எல்லைகளைப் பகிர்ந்துகொள்ளும் நாடுகளில், பாகிஸ்தானுக்கு அடுத்தபடியாக மிக முக்கியமான நாடாகச் சீனா பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் எல்லை விவகாரம், காஷ்மீர் விவகாரம் எனப் பல விவகாரங்களில் பகை என்றாலும், நில ஆக்கிரமிப்பு விவகாரத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும்கூட பல வருட காலமாக மனக்கசப்பு நிலவிக்கொண்டுதான் இருக்கிறது. கிட்டத்தட்ட 45 ஆண்டுகள் இந்தியா - சீனா இடையே எல்லைப் பிரச்னைகள் இருந்தாலும், எல்லையில் நிலவிவந்த அமைச்தி சூழல் கடந்த ஆண்டு லடாக் எல்லை மோதலில் சுக்குநூறாக உடைந்து, அதி தீவிர பிரச்னையாக உருவெடுத்தது. பாகிஸ்தானுக்கும் சீனாவுக்கும் இடையே நிலவிவந்த ஆரோக்கியமான நட்பு இந்த எல்லை மோதல் விவகாரத்தில் எரியும் தீயில் எண்ணெய் ஊற்றியதாகவே பார்க்கப்பட்டது.

2020-ல் லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக இந்திய - சீன ராணுவத்தினர் இடையே எல்லையில் வெடித்த மோதலில் சுமார் 20 இந்திய ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மோதலில் சீன வீரர்களும் உயிரிழந்ததாகக் கூறப்பட்டாலும், சீனா முதலில் தங்கள் வீரர்கள் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை. அதன் பின்னர், சில மாதங்கள் கழித்து இந்திய வீரர்களின் தாக்குதலில் தங்கள் வீரர்கள் நான்கு பேர் உயிரிழந்ததாக அறிவிப்பு வெளியிட்டது. இருப்பினும், சீனா வெளியிட்ட உயிரிழப்பு எண்ணிக்கை தவறானது என்றும், 10-க்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என்றும் அனைவராலும் சந்தேகிக்கப்பட்டது.

கல்வான் பள்ளத்தாக்கில், கடந்த ஆண்டு சீன ராணுவத்தினருக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே நடந்த இந்த மோதலுக்குப் பிறகு இந்திய - சீன எல்லையில் தற்போது வரையிலும் பதற்றநிலையே நிலவிவருகிறது. எப்போது வேண்டுமானாலும் மோதல் ஏற்படலாம் என்ற நிலையில் இரு நாடுகளும் எல்லைகளில் வீரர்களைக் குவிக்கத் தொடங்கின. இருந்தாலும், இந்தியா - சீனா இடையே நிலவும் பதற்றத்தைத் தணித்து, அமைதியை நிலைநாட்டும் நோக்கில் இரு தரப்பிலும் பலகட்ட பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்றன. அந்த முயற்சிகள் ஓரளவுக்குக் கைகொடுத்தன.

இரு நாடுகளும் தங்கள் படைகளை எல்லையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் திரும்பப் பெற்றன. இருப்பினும், அடிக்கடி சீன ராணுவத்தினர் எல்லைக்குள் அத்துமீறிக்கொண்டிருப்பதால் இந்தியா முழுமையாகப் படைகளை விலக்கிக்கொள்ளாமல் பதிலடி கொடுக்கத் தயாராக இருந்து வருகிறது நம் ராணுவம். இந்திய ராணுவ வட்டார தகவல்களை வைத்துப் பார்க்கையில், தற்போது எல்லையில் சுமார் இரண்டு லட்சத்துக்கும் அதிகமான இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

லடாக்
லடாக்

இந்தநிலையில், இந்திய - சீன எல்லையில் கூடுதலாக 50,000 வீரர்களை நிலை நிறுத்த முடிவு செய்துள்ளதாக வட்டாரத் தகவலின் அடிப்படையில் செய்தி நிறுவனங்கள் செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கின்றன. இதை உறுதிப்படுத்தும்விதமாக இந்திய ராணுவத்தின் தரப்பிலும் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. அதில், இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில், கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக ராணுவ உயரதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மேலும், இந்திய - சீன எல்லையின் மிக முக்கிய மூன்று பகுதிகளில் போர் விமானங்களும் பீரங்கிகளும் தயார்நிலையில் நிறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேசமயம், சீன ராணுவமும் எல்லையில் படைகளைக் குவித்துவருவதாகக் கூறப்பட்டுவருகிறது. குறிப்பாக, சீனா திபெத்திலிருந்து ஜிங்ஜியாங் ராணுவ தளத்துக்குத் தனது படைகளை மாற்றி அனுப்பியுள்ளதாகவும், நெடுந்தூர இலக்கை துல்லியமாகத் தாக்கும் பீரங்கிகள், போர் விமானங்களை எல்லைப் பகுதியில் நிலை நிறுத்தியிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

எல்லையில் இந்தியா கூடுதலாக 50,000 ராணுவ வீரர்களைக் குவிக்கும் பட்சத்தில், இது வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையாகக் கருதப்படும் என்று அரசியல் பார்வையாளர்கள் பலரும் கூறுகின்றனர். ராணுவத்தின் தகவல்களின் அடிப்படையில் பார்க்கும்போது சீன எல்லையில் கடந்த ஆண்டு குவிக்கப்பட்டிருந்த வீரர்களின் எண்ணிக்கையை விட, இந்த ஆண்டு 40 சதவிகிதம் அதிகமாகக் குவிக்கப்பட்டுள்ளனர்.

இரு தரப்பு ராணுவத்தினர் எல்லையில் குவிக்கப்பட்டுவருவதால், பதற்றநிலை அதிகரித்திருக்கிறது. இந்தநிலையில், சீன வெளியுறவுத்துறை செய்திட் தொடர்பாளர் வாங்-வென்பின், எல்லைப் பகுதியில் நிலைமை ஸ்திரமாக உள்ளதாகவும், எல்லைப் பிரச்னை குறித்து இருதரப்பிலும் பேச்சுவார்த்தை மூலம் சுமுக தீர்வு எட்டப்பட்டுவருவதாகவும் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாகச் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ``எல்லையில் நிலைமை சீராக உள்ளது. பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு கண்டுவருகிறோம். இரு நாட்டு ராணுவக் குவிப்பால் ஏற்பட்டுள்ள பதற்றம் தணிந்து, பரஸ்பர நம்பிக்கை அதிகரித்து, அமைதி நிலை திரும்பும்" என்றார்.

சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்  வாங்-வென்பின்
சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங்-வென்பின்

முன்னதாக, கிழக்கு லடாக் எல்லையின் சில பகுதிகளில் இரு நாட்டுப் படைகளையும் முழுமையாக விலக்கிக்கொள்வது தொடர்பாக விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று இணையவழியில் நடைபெற்ற இரு நாட்டு எல்லை விவகாரம் குறித்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. கடந்த ஆண்டு மோதலைத் தொடர்ந்து, பல கட்டங்களாக இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் மூலமாக வடக்கு மற்றும் தென் கரையோர பாங்காங் ஏரிப் பகுதிகளிலிருந்து இரு நாடுகளும் தங்கள் படைகளை முழுமையாக திரும்பப் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

எல்லையில் இரு நாட்டு ராணுவக் குவிப்பால் ஏற்பட்ட பதற்றம் தற்போது சீனாவின் இந்த அறிவிப்பால் சற்றே தணிந்திருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு