Published:Updated:

காஷ்மீர் விவகாரம்: ஐ.நா-வில் காரசார விவாதம்... பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கொந்தளித்தது ஏன்?!

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஜெய்சங்கர்

`பின்லேடனுக்கு புகலிடமாக இருந்த பாகிஸ்தானுக்கு, காஷ்மீர் பற்றியும் ஜனநாயகம் பற்றியும் ஐ.நா-வில் பேசத் தகுதியில்லை’ என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சாடியிருக்கிறார்.

காஷ்மீர் விவகாரம்: ஐ.நா-வில் காரசார விவாதம்... பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா கொந்தளித்தது ஏன்?!

`பின்லேடனுக்கு புகலிடமாக இருந்த பாகிஸ்தானுக்கு, காஷ்மீர் பற்றியும் ஜனநாயகம் பற்றியும் ஐ.நா-வில் பேசத் தகுதியில்லை’ என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சாடியிருக்கிறார்.

Published:Updated:
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஜெய்சங்கர்

உலக அரங்கில் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் காஷ்மீர் பிரச்னையை எழுப்புவதையும், இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை முன்வைப்பதையும் பாகிஸ்தான் வழக்கமாகக்கொண்டிருக்கிறது. கடந்த நவம்பர் மாதம், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சீர்திருத்தங்கள் குறித்து விவாதிப்பதற்காக பொதுச்சபைக் கூட்டம் நடைபெற்றது.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்

அந்தக் கூட்டத்தில், காஷ்மீர் பிரச்னையை ‘பாகிஸ்தான் எழுப்பியது. அப்போது, ‘ஐ.நா பொதுச்சபையை பாகிஸ்தான் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்திவருகிறது’ என்று இந்தியா குற்றம்சாட்டியது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்னையை பாகிஸ்தான் எழுப்பும்போதெல்லாம், ‘ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி’ என்று இந்தியத் தரப்பு உறுதியாக பதிலளித்துவந்திருக்கிறது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதிலிருந்து, இந்த விவகாரத்தை பாகிஸ்தான் மேலும் தீவிரமாகப் பார்த்துவருகிறது. இந்த நிலையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்த விவகாரத்தை மீண்டும் பாகிஸ்தான் எழுப்பியிருக்கிறது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஜெய்சங்கர்
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஜெய்சங்கர்
ட்விட்டர்

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் 15 உறுப்பு நாடுகள் இடம்பெற்றிருக்கின்றன. அவற்றில், ஐந்து நிரந்தர உறுப்பு நாடுகளும், பத்து தற்காலிக உறுப்பு நாடுகளும் இருக்கின்றன. தற்காலிக உறுப்பு நாடுகள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்ந்தெடுக்கப்படுகின்றன. இந்த அமைப்புக்கு மாதம் ஒரு உறுப்பு நாடு தலைமை வகிக்கும். அந்த வகையில், டிசம்பர் மாதம் இந்தியா தலைமை வகித்தது. அதில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துகொண்டார்.

அந்தக் கூட்டத்தில், கொரோனா பெருந்தொற்று பாதிப்பிலிருந்து தேசங்கள் மீள்வது, காலநிலை மாற்றம், பயங்கரவாதம், மோதல்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டன. அப்போது பேசிய பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ, காஷ்மீர் பிரச்னையை எழுப்பினார். அதற்கு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலடி கொடுத்தார்.

ஜெய்சங்கர்
ஜெய்சங்கர்
ட்விட்டர்

"நாங்கள் பலதரப்பு ஒத்துழைப்பின் அவசியம் பற்றித் தொடர்ந்து கவனம் செலுத்திவருகிறோம். இதில் உலக நாடுகள் ஒருமித்த கொள்கையை ஏற்படுத்துவதை தாமதிக்கக் கூடாது.
காலநிலை மாற்றம், பயங்கரவாத ஒழிப்பு எனப் பல விஷயங்களில் சிறந்த தீர்வை எட்டுவதற்கு நாங்கள் முயல்கிறோம். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை இந்த அவை கண்டிக்க வேண்டும். சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனுக்கு அடைக்கலம் கொடுத்த நாட்டுக்கு... அண்டை நாட்டின் நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதலை ஏவிவிட்ட நாட்டுக்கு, ஐ.நா அவையில் பிரசங்கம் செய்யத் தகுதி இல்லை" என்று காட்டமாக பதிலடி கொடுத்தார் ஜெய்சங்கர்.

2020-ம் ஆண்டு, ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்னையை எழுப்ப பாகிஸ்தான் முயன்றது. ஆனால், இந்தியாவுக்கு எதிரான பாகிஸ்தானின் குற்றச்சாட்டுக்கு உரிய ஆதாரங்களை முன்வைக்க முடியவில்லை. அதனால், பாகிஸ்தானின் முயற்சி தோல்வியடைந்தது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஜெய்சங்கர்
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஜெய்சங்கர்
ட்விட்டர்

அப்போது, ‘இந்தியாவுடனான உறவுகளில் பாகிஸ்தானுக்கு ஏற்படக்கூடிய பிரச்னைகளை எழுப்பவும் தீர்க்கவும் இரு தரப்பு வழிமுறைகள் உள்ளன என்பது பல நட்பு நாடுகளால் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. எனவே, இனிமேலாவது இந்தியாவுடன் இயல்பான நட்புறவைப் பேணுவதற்கு பாகிஸ்தான் முயற்சி செய்ய வேண்டும்’ என்று இந்தியா கூறியது. ஆனாலும், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்னையை எழுப்புவதை பாகிஸ்தான் தொடர்கிறது.