Published:Updated:

அண்டை நாடு முதல் அமெரிக்க வரை.. 55 நாடுகளுக்கு HCQ மாத்திரைகள் சப்ளை செய்யும் ஆபத்பாந்தவன் இந்தியா!

கொரோனாவை குணப்படுத்த, ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரை
கொரோனாவை குணப்படுத்த, ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரை

பல நாடுகளுக்கும் எந்த வஞ்சமும் பார்க்காமல் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரைகளை இந்தியா வழங்கியுள்ளது. பாகிஸ்தான் இதுவரை இந்தியாவிடம் இந்த மாத்திரைகளை அனுப்பி வைக்க வேண்டுகோள் விடுக்கவில்லை.

மலேரியா காய்ச்சல் மருந்தான ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரை கொரோனா நோயைக் குணப்படுத்துவதாக, அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தொடர்ந்து கூறி வந்தார். அமெரிக்க உணவு மற்றும் மருந்துக்கழகமும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரை கொரோனாவை குணப்படுத்துவதாகத் தெரிவித்திருந்தது. தொடர்ந்து, இந்தியாவை மிரட்டும் தொனியில் பேசிய, ட்ரம்ப், ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரைகளை வேண்டும் எனக் கேட்டார். இக்கட்டான சூழலில் எந்த அலட்டலும் இல்லாமல் அரசியலும் செய்யாமல் இந்தியாவும் மாத்திரைகளை அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது. அதன் பின்னர் ட்ரம்ப், மோடி சிறந்த நண்பர் எனப் புகழாரம் சூட்டினார். நியூயார்க் நகரில் கொரோனா நோயாளிகளிடத்தில் இந்தியா அனுப்பிய மாத்திரைகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

கொரோனா
கொரோனா

அமெரிக்காவைத் தொடர்ந்து பிரேசில் நாடும் தங்களுக்கு உதவுமாறு பிரதமர் மோடியிடம் வேண்டுகோள் வைத்தது. அந்த நாட்டுக்கும் மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நம் அண்டை நாடுகளான ஆப்கானிஸ்தான், நேபாளம், இலங்கை, மொரிஷியஸ், பூடான், வங்கதேசம், மாலத்தீவு, மியான்மர் போன்ற நாடுகளும் இந்த மாத்திரைக்கு நம்மையே நம்பியுள்ளன. இந்த நாடுகளுக்கும் இந்தியா எந்த வஞ்சமும் இல்லாமல் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரைகளை வழங்கியுள்ளது. பாகிஸ்தான் இதுவரை இந்தியாவிடம் இந்த மாத்திரைகளை அனுப்பி வைக்க வேண்டுகோள் விடுக்கவில்லை. இதனால், அந்த நாட்டுக்கு மாத்திரைகள் அனுப்பி வைக்கப்படவில்லை.

இது தவிர ஜாம்பியா, மடாகஸ்கர் உகாண்டா, பர்கினோ ஃபாஸா, நைஜர், மாலி, காங்கோ, எகிப்து , அர்மேனியா, கஜகஸ்தான், ஈகுவடார், ஜமைக்கா, சிரியா, உக்ரேன், சாத், ஜிம்பாப்வே, பிரான்ஸ், ஜோர்டான், கென்யா, நெதர்லாந்து , நைஜீரியா, ஓமன், பெரு போன்ற நாடுகளுக்கும் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த நாடுகள் தவிர, பிலிப்பைன்ஸ், ரஷ்யா, சால்வேனியா, தென்னாப்ரிக்கா, தான்சேனியா, அமீரகம், உஸ்பெஸ்கிஸ்தான், உருகுவே, கொலம்பியா, அல்ஜீரியா, பஹமாஸ், பிரிட்டன் போன்ற நாடுகளும் இந்தியாவிடம் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரைகளை அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஹைட்ராக்சிக்ளோரோகுயின்  மாத்திரை
ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரை

தற்போது, உலகம் முழுக்க 55 நாடுகள் ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரைகளை கொரோனா நோயாளிகளுக்குப் பயன்படுத்தி வருகின்றன. முன்னதாக, ஹைட்ராக்சிக்ளோரோகுயின் உள்ளிட்ட 24 மாத்திரை மருந்துகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்திருந்தது. தற்போது, இந்த மாத்திரைகளுக்கு உள்ள தேவையைக் கருதி இந்தியா தடை நீக்கம் செய்துள்ளது.

மருத்துவமனை கட்டி, சேவை புரிந்த டாக்டர் - 6 அடி நிலம் கிடைக்காமல் 36 மணி நேரம் தவித்த அவலம்!

மாதம் ஒன்றுக்கு 10 கோடி ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரைகளை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. சில நாடுகளுக்கு இலவசமாகவே இந்தியா ஹைட்ராக்சிக்ளோரோகுயின் மாத்திரைகளை வழங்கியுள்ளது. சில நாடுகளுக்கு விற்பனை செய்கிறது.

அடுத்த கட்டுரைக்கு