Published:Updated:

"மீனவர் பிரச்னைக்குத் தீர்வு கச்சத்தீவை இந்தியா எடுத்துக்கொள்வதுதான்"- இலங்கை முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம்

இலங்கை முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம்

"இந்திய - இலங்கை மீனவர் பிரச்னை தீரவேண்டுமென்றால் 1974-ல் இந்திரா - சிறீமாவோ ஒப்பந்தப்படி இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை இந்தியா மீண்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்."- இலங்கை முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம்

"மீனவர் பிரச்னைக்குத் தீர்வு கச்சத்தீவை இந்தியா எடுத்துக்கொள்வதுதான்"- இலங்கை முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம்

"இந்திய - இலங்கை மீனவர் பிரச்னை தீரவேண்டுமென்றால் 1974-ல் இந்திரா - சிறீமாவோ ஒப்பந்தப்படி இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை இந்தியா மீண்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்."- இலங்கை முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம்

Published:Updated:
இலங்கை முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம்

காரைக்கால் தொடங்கி ராமேஸ்வரம் வரையிலான மீனவர்கள் தங்கள் எதிர்காலம் தெரியாமல் தவித்து நிற்கிறார்கள். கடலில் இறங்கினால் மீண்டும் திரும்பமுடியுமா என்ற அளவுக்கு இலங்கை கடற்படையும், இலங்கைத்தமிழ் மீனவர்களும் கடும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இலங்கை மீனவளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வெளிப்படையாகவே "தமிழக மீனவர்களைக் கண்டால் உதையுங்கள்" என்று பேசுகிறார். கடல் எல்லை தாண்டும் மீனவர்களைக் கைது செய்து மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வது உலகத்திலிருக்கும் வழக்கமான நடைமுறை. ஆனால் இலங்கை அரசு, படகை பறிமுதல் செய்து ஏலம் விடுகிறது. தமிழக மீனவர்கள் கடுமையாக அச்சுறுத்தப்படுகிறார்கள்.

இந்தச் சூழலில், மூத்த இலங்கைத் தமிழ் அரசியல் தலைவரும், இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவருமான சிவாஜிலிங்கத்திடம் இதுகுறித்து சில கேள்விகளை முன்வைத்து உரையாடினேன்.
தமிழக மீனவர்கள்
தமிழக மீனவர்கள்
உ.பாண்டி

"நெடுங்காலமாக நீடித்துவரும் இந்திய - இலங்கை மீனவர் பிரச்னை இப்போது தீவிரமாகியிருக்கிறது. இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?"

"இந்திய - இலங்கை மீனவர் பிரச்னை தீரவேண்டுமென்றால் 1974-ல் இந்திரா - சிறீமாவோ ஒப்பந்தப்படி இலங்கைக்கு வழங்கப்பட்ட கச்சத்தீவை இந்தியா மீண்டும் எடுத்துக்கொள்ள வேண்டும். அதுதான் இந்தியாவுக்கும் தமிழக மீனவர்களின் நலனுக்கும் நல்லது. வரலாற்று ஆவணங்கள், கச்சத்தீவை ராமநாதபுரம் மன்னருக்குச் சொந்தமானதாகவே கூறுகின்றன. 1619-ல் போர்ச்சுகீசியர்கள் படையெடுத்து வந்தபோது யாழ்ப்பாண மன்னர் சங்கிலிகுமாரர் ராமநாதபுரம் மன்னரிடம் படையுதவி கோரியிருக்கிறார். பெரும் படையை ராமநாதபுரம் மன்னர் அனுப்பி, அந்தப்படை கச்சத்தீவில் இறங்கியபோதே யாழ்ப்பாணம் போர்ச்சுகீசியர்களிடம் விழுந்து விட்டது. அந்த அளவுக்கு வரலாற்றுத் தெளிவு இருக்கிறது. கச்சத்தீவை இந்தியா எடுத்துக்கொண்டால் மீனவர் பிரச்னை தீர்ந்துவிடும்."

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

"கச்சத்தீவை மீட்கவேண்டும் என்பதுதான் தமிழக அரசியல்வாதிகளின் குரலாகவும் இருக்கிறது. இனிமேல் அது சாத்தியமா?"

"நிச்சயம் சாத்தியம். நாங்கள் தொடர்ந்து கச்சத்தீவை இந்தியா மீண்டும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். 2006-ல் அப்போதைய அட்வகேட் ஜெனரல் சுப்பிரமணியம் அய்யாவிடம் ஆலோசனை பெற்று ராமநாதபுரம் மீனவர் சங்கத்தலைவர் போஸ் மூலம், கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தது செல்லாது என்று இந்திய உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரச் செய்தோம். ஆனால், அந்த வழக்கு தள்ளுபடியாகிவிட்டது. சட்டமோ, ஒப்பந்தமோ எதுவானாலும் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஒப்புதல் பெற்றே பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடியும். அப்படித்தான் இந்திய அரசியல் சாசனம் சொல்கிறது. ஆனால், கச்சத்தீவை இலங்கைக்கு வழங்குவதற்கான ஒப்புதலை அப்போதைய பிரதமர் இந்திராகாந்தி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பெறவில்லை. அது ஒன்றை ஆதாரத்தோடு நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினாலே போதும்."

கச்சத்தீவு அந்தோணியார் ஆலயம்
கச்சத்தீவு அந்தோணியார் ஆலயம்
உ.பாண்டி

"இலங்கையில் இருந்து கச்சத்தீவை இந்தியா எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற குரல் எழும்புவது வியப்பாக இருக்கிறது..."

"கச்சத்தீவு பாரிய முக்கியத்துவம் பெற்ற பகுதி. இந்தியாவுக்கு மட்டுமின்றி இலங்கையின் தேச நலனுக்கும் அது முக்கியம். விரைவிலேயே அது சீனாக்காரர்களின் கரங்களுக்கு சென்றுவிடும் ஆபத்து இருக்கிறது. அதற்கான செயல்பாடுகள் தொடங்கிவிட்டன. அப்படியொன்று நடந்துவிடக்கூடாது என்பதற்காகவே நாங்கள் இந்தியாவே கச்சத்தீவை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்."

"டக்ளஸ் தேவானந்தா மீன்வளத்துறை அமைச்சரான பிறகே தமிழ் மீனவர்களுக்கு எதிரான செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாகச் சொல்லப்படுகிறதே?"

"இதை நான் நம்பவில்லை. அவர் வெறும் வாய்ச்சவடால்காரர். ஆனால், சந்திரிகா தொடங்கி சரத் பொன்சேகா, ராஜபக்ஷே, மைத்ரிபால சிறிசேனா வரை எல்லோருமே தமிழர் விரோத மனநிலை கொண்டுதான் இருக்கிறார்கள். இதைச் சொல்வதில் எனக்கு எந்த மனத்தடையும் இல்லை. இங்குள்ள நிலவரம் என்னவென்றால் தமிழ் மீனவர்கள் போருக்குப் பிறகு இப்போதுதான் மீண்டும் கடலுக்குள் தொழில் செய்கிறார்கள். தமிழகத்திலிருந்து வருபவர்கள் பெரிய படகுகளில் வருகிறார்கள். பவளப்பாறைகள், மீன் குஞ்சுகள் உள்பட எல்லா வளத்தையும் அழிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டு இருக்கிறது. எல்லை தாண்டி வருவதும் மொத்தக் கடல் வளத்தையும் அழிப்பதும் தவறு. அதை ஏற்றுக்கொள்ள முடியாது. இலங்கைச் சட்டப்படி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேநேரம் தமிழகத்திலிருந்து எல்லா மீனவர்களும் இலங்கை எல்லைக்குள் வருவதில்லை. எல்லாவற்றுக்கும் பின்னால் சீனா இருக்கிறது என்பதே வெளிப்படையான சந்தேகம்."

டக்ளஸ் தேவானந்தா
டக்ளஸ் தேவானந்தா

"தமிழகத்திலிருந்து வரும் மீனவர்கள் இழுவை வலைப்படகுகளைப் பயன்படுத்துவதுதான் பிரச்னையின் அடிப்படை என்கிறார்களே?"

"எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதும் இழுவை வலைப் படகுகளைப் பயன்படுத்துவதும்தான் பிரச்னையின் மையமாகச் சொல்லப்படுகிறது. எனக்கு இதில் வேறு சில கருத்துகள் இருக்கின்றன. மீன்பிடித்தலில் ஏராளமான நுட்பங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒன்றுதான் இழுவை வலை மீன்பிடித்தல். 100 அடி ஆழம் என்றால் 80 அடிக்கு இழுவை வலை போட்டு மீன் பிடிப்பதால் சேதம் ஏதும் வந்துவிடாது. சிலர் இரட்டை மடி இழுவை வலையைப் பயன்படுத்தி 100 அடிக்குக் கீழே இருப்பதையும் அழிக்கிறார்கள். ஆனால் அதைப் பொதுவான குற்றச்சாட்டாகச் சொல்லக்கூடாது.

இலங்கையிலும் இழுவை வலைப்படகுகள் இருக்கின்றன. யாழ்ப்பாண குடாவில் 400, மன்னாரில் 300 என 800க்கும் மேற்பட்ட இழுவை வலைப் படகுகள் இருக்கின்றன. 2016-17ல் தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த சுமந்திரன், இழுவை வலை மீன்பிடி முறையைத் தடை செய்யும் சட்டத்தைக் கொண்டு வந்தார். அதை அப்போதே நான் கடுமையாக எதிர்த்தேன். உலகத்தில் இரண்டே இரண்டு நாடுகளைத் தவிர வேறெங்கும் இழுவை வலை தடை செய்யப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட மீன்பிடி முறைதான் அது. நார்வேயில் எல்லாம் முழுக்க முழுக்க அதைத்தான் பயன்படுத்துகிறார்கள். அங்கெல்லாம் மீன்வளம் அழியவில்லை, இழுவை வலை பற்றி சொல்லப்படுவதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட கதைகள். ஆனாலும் இலங்கையில் அது சட்டமாக்கப்பட்டுவிட்டது. இழுவை வலை படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடித்தால் படகைப் பறிமுதல் செய்வதோடு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அந்தச் சட்டப்படி வழங்கப்படும். அந்த சட்டத்தைத்தான் தமிழக மீனவர்களுக்கு எதிராகவும் பயன்படுத்துகிறார்கள். ஆனால், இலங்கையைச் சேர்ந்தவர்கள் இழுவை வலைப்படகுகள் மீன் பிடிக்க டக்ளஸ் தேவானந்தா சலுகைகளை வழங்கியிருக்கிறார். தமிழக மீனவர்களுக்குத்தான் சட்டமெல்லாம்."

இலங்கை முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம்
இலங்கை முன்னாள் எம்பி சிவாஜிலிங்கம்

"தமிழக மீனவர்களின் வாழ்வாதாரமான படகுகளை பறிமுதல் செய்து ஏலம் விடத் தொடங்கியிருக்கிறது இலங்கை. தமிழகத்தில் கொதிப்பான சூழல் இருக்கிறது. இலங்கைத் தமிழ்த் தலைவர்களில் ஒருவரான நீங்கள் என்ன தீர்வை முன் வைக்கிறீர்கள்?"

"தமிழக மீனவர்களின் வலைகள், படகுகளை பறிமுதல் செய்வதையும் ஏலம் விடுவதையும் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. இது தொடர்பாக நாங்கள் பேச்சுவார்த்தை நடத்துவோம். தமிழக முதல்வர் கௌரவ ஸ்டாலின் அவர்கள் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் மூலமாக எங்களைத் தொடர்புகொண்டு நான் உள்பட மாவை சேனாதிராஜா, விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்ட தமிழ் அரசியல் தலைவர்களை பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அழைப்பு விடுத்திருக்கிறார். அவரது முயற்சியில் நிச்சயம் இந்த நெடுங்காலப் பிரச்னை தீரும் என்று நம்புகிறோம்."