Published:Updated:

கொரோனா: `சரியான நேரத்தில் சரியான முடிவெடுத்ததால் பாதிப்பு குறைவு!’ - பிரதமர் மோடி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

``11 லட்சத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன. 1,300 பரிசோதனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தினமும் 5 லட்சத்துக்கும் மேல் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன.”

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகமாகி வருகிறது. இதுவரை இங்கு பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 14 லட்சத்தைக் கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 32,000-த்தைக் கடந்துள்ளது. பாதிப்புகள் அதிகமாகி வருவதால் பரிசோதனைகளும் அதிகமாகச் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கூடுதலாகப் பரிசோதனைகளை மேற்கொள்ளும் வகையில் மும்பை, கொல்கத்தா மற்றும் நொய்டா ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தொடர்பான நவீன பரிசோதனை மையங்களை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து உரையாற்றினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமர் மோடி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாகப் பேசும்போது, ``சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுப்பதில் இந்தியா மற்ற நாடுகளைவிட சிறந்து விளங்குகிறது. மற்ற நாடுகளை விடவும் இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் மிகவும் குறைவாக இருந்து வருகிறது. குணமடைபவர்களின் எண்ணிக்கையும் மற்ற நாடுகளைவிட இந்தியாவில் அதிகமாக உள்ளது. 11 லட்சத்துக்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள் உள்ளன. 1,300 பரிசோதனை நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. தினமும் 5 லட்சத்துக்கும் மேல் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரையும் காப்பாற்றுவதே நடவடிக்கைகள் எடுப்பதன் நோக்கமாக இருந்து வருகிறது” என்று தெரிவித்தார்.

மும்பை, கொல்கத்தா மற்றும் நொய்டா ஆகிய பகுதிகள் பொருளாதார அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இங்கு வேலை தேடி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் பேசும்போது, ``தற்போது தொடங்கப்பட்டுள்ள உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் தினமும் 10,000 பரிசோதனைகள் அதிகமாக மேற்கொள்ள முடியும். இந்த ஆய்வகங்கள் மூலம் பிற நோய்களுக்கான பரிசோதனைகளையும் எதிர்காலத்தில் மேற்கொள்ள முடியும். டெங்கு, ஹெச்.ஐ.வி உள்ளிட்ட பல நோய்களுக்கும் பரிசோதனைகளை இங்கு மேற்கொள்ளலாம்” என்றும் கூறியுள்ளார்.

மன்கி பாத்: `கார்கில் தினம் டு சுதந்திர தினம்!’ - பிரதமர் மோடி உரை
அடுத்த கட்டுரைக்கு