Published:Updated:

கொரோனா: `இந்தியா தைரியமாக நடவடிக்கைகளை எடுத்தது!’ - WHO பாராட்டு

உலக சுகாதார நிறுவனம்
உலக சுகாதார நிறுவனம்

``அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் மட்டுமே மிகப்பெரிய அளவில் பரவல் காணப்படுகிறது. மற்ற பகுதிகளில் சிறிய அளவிலேயே பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன."

கொரோனா வைரஸால் இந்தியா மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்து வருகிறது. இந்தியாவில் இதுவரை சுமார் 11.92 லட்சம் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். வைரஸ் பாதிப்பால் சுமார் 28,732 பேர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் அமெரிக்கா மற்றும் பிரேசிலுக்கு அடுத்தபடியாக அதிகளவில் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால், மக்கள் தொகையின் அடிப்படையில் மற்ற நாடுகளை ஒப்பிட்டுப் பார்க்கும்போது இந்தப் பாதிப்பு மிகவும் குறைவானது எனவும் உயிரிழப்புகள் குறைவாக இருப்பதாகவும் மத்திய மற்றும் மாநில அரசின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கூறி வருகின்றனர். இந்த நிலையில், இந்தியாவின் நடவடிக்கைகளை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது.

கோவிட்-19
கோவிட்-19

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியப் பகுதியின் இயக்குநர் பூனம் கேத்ரபல் சிங் (Poonam Khetrapal Singh) நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ``கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய நாள்கள் முதலே இந்தியா மிகவும் வேகமாக நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தொடர்ந்து நடவடிக்கைகளை வலுப்படுத்தியும் வருகிறது. சோதனைத் திறன்களை அதிகரிப்பது, மருத்துவமனை வசதிகளை அதிகப்படுத்துவது, மருந்துகளை அதிகப்படுத்துவது மற்றும் அத்தியாவசியப் பொருள்களை அதிகப்படுத்துவது எனப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தது. அதிகப் பரவல் ஏற்படுவதற்கு முன்பாகவே தைரியமாகவும் தீர்க்கமாகவும் வேகமாகவும் நடவடிக்கைகளை எடுத்தது. ஆரம்பகாலத்தில் இந்தியாவுக்கு நிகராக பாதிப்படைந்து வந்த நாடுகளில் அதிக பாதிப்புகள் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்தியாவில் அத்தகைய நிலை இல்லை” என்றார்.

கோவிட் - 19 கொரோனா வைரஸ்
கோவிட் - 19 கொரோனா வைரஸ்

மற்ற நாடுகளில் ஏற்பட்டுள்ள பரவலைப்போல இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் இல்லை என்று குறிப்பிட்ட சிங், ``அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பகுதிகளில் மட்டுமே மிகப்பெரிய அளவில் பரவல் காணப்படுகிறது. மற்ற பகுதிகளில் சிறிய அளவிலேயே பாதிப்புகளே ஏற்பட்டுள்ளன. இந்தியாவின் கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க தேவையான திறன்களை அளவிடுவது என்பது நிலையான தேவையாக உள்ளது” என்றும் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய சிங், ``ஹாட்ஸ்பாட் பகுதிகளைக் கண்டறிதல், பரிசோதனைகள் செய்தல், தனிமைபடுத்தப்பட்டவர்கள் மற்றும் பாதிப்படைந்தவர்களுக்கு உரிய கவனிப்பை வழங்குதல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகளில் அதிக கவனம் செலுத்துதல், சுகாதார ஊழியர்களை பாதுகாத்தல் மற்றும் சுகாதாரம் தொடர்பான அமைப்பு திறனை அதிகரித்தல் ஆகியவை கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுபடுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது” என்றும் தெரிவித்தார்.

`அறிகுறிகளற்ற தொற்றாளர்கள் மூலம் கொரோனா பரவுமா?' - உலக சுகாதார அமைப்பு சொல்வதென்ன?
அடுத்த கட்டுரைக்கு