Published:Updated:

`கச்சா எண்ணெய் சேமிப்பு ஒத்துழைப்பு!’ - அமெரிக்காவுடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இந்தியா

தர்மேந்திர பிரதான்
தர்மேந்திர பிரதான்

அமெரிக்காவுடனான கச்சா எண்ணெய்க்கான இருப்பு நிலை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.

இந்திய அமெரிக்க உத்திசார் எரிசக்தி கூட்டணியின் இரண்டாவது அமைச்சர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமெரிக்காவும் இந்தியாவும் கச்சா எண்ணெய் இருப்பு நிலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. வீடியோ கான்ஃபரஸிங் மூலம் நடந்த கூட்டத்துக்கு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தலைமை தாங்கினார்.

கச்சா எண்ணெய்
கச்சா எண்ணெய்

அப்போது பேசிய அமைச்சர் பிரதான், ``இரு தரப்பு எரிசக்தி வர்த்தகம் மற்றும் முதலீடுகளை வளர்ப்பதைத் தவிர, எரிசக்தி பாதுகாப்பு, எரிசக்தி ஒத்துழைப்பைச் சீரமைப்பது, எரிசக்தித் துறைகளில் ஆற்றல் மற்றும் புதுமை இணைப்புகளை விரிவுபடுத்தவும் நாங்கள் முயற்சி செய்கிறோம். இந்தியாவின் எண்ணெய் கையிருப்பை அதிகரிக்க அமெரிக்காவில் பெட்ரோலிய ரிசர்வ் கச்சா எண்ணெயை சேமிப்பதற்கான ஒரு மேம்பட்ட கட்டதில் நாம் இருக்கிறோம்.

இந்த மூன்றாண்டு குறுகிய காலத்தில் இரு தரப்பு எரிசக்தி வர்த்தகத்தில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு குறித்து நாங்கள் திருப்தியடைகிறோம். 2019-20-ம் ஆண்டில் இரு தரப்பு ஹைட்ரோகார்பன் வர்த்தகம் மட்டும் 9.2 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியுள்ளது. இது ஒட்டுமொத்த இருதரப்பு வர்த்தகத்தில் 10% ஆகும். அமெரிக்காவுக்கான கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் நான்காவது இடத்தில் தற்போது இந்தியா இருக்கும்” எனத் தெரிவித்தார்.

மற்ற ஒப்பந்தங்கள் முன் முயற்சிகள் தொடர்பாகப் பேசிய அமைச்சர், ``தெற்காசிய எரிசக்தி குழு மற்றும் ஹைட்ரஜன் பணிக்குழு உள்ளிட்ட துறையில் பல முக்கிய முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ளன. இரு நாடுகளும் உயிர் ஆற்றல், வேளாண்மை மற்றும் உயர் திறன் கொண்ட நிலக்கரி தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட புதிய பகுதிகளில் ஒத்துழைக்க ஒப்புக்கொண்டுள்ளன. இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட `ஆத்மனிர்பார் பாரத்’ மிஷனில் சேர அமெரிக்க அரசாங்கத்துக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எங்கள் இரு நாட்டு ஒத்துழைப்பு அனைவருக்கும் வெற்றியாக அமையும்” என்று கூறியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு