Published:Updated:

India-China FaceOff: `நம் நிலைப்பாட்டை சீனாவுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம்!’ -பிரதமர் மோடி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

``நம்முடைய ஆயுதப்படைகளுக்கு அதிக சுதந்திரத்தை வழங்கியிருந்தாலும், நம்முடைய நிலைப்பாட்டை சீனாவுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். இந்தியா அமைதியையும் நட்பையும் விரும்புகிறது. ஆனால், இறையாண்மைக்கு அதிக முக்கியத்துவத்தை இந்தியா வழங்கும்.”

இந்தியா மற்றும் சீனா இடையேயான லடாக் எல்லைப் பகுதியில் கடந்த மே மாதம் முதல் அதிக பதற்றம் நிலவி வருகிறது. பதற்றத்தைத் தணிக்க இருநாட்டு ராணுவ மற்றும் வெளியுறவுத்துறை உயர் அதிகாரிகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதையடுத்து, சீனப் படைகள் எல்லையிலிருந்து திரும்பிச் செல்லத் தொடங்கின. திரும்பிச் செல்லும்போது இருநாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இருதரப்பிலும் உயிர்ச்சேதங்கள் ஏற்பட்டன.

1975-ம் ஆண்டுக்குப் பிறகு உயிர்சேதம் ஏற்படும் அளவுக்கு இப்போதுதான் தாக்குதல் நடந்ததாக குறிப்பிடுகின்றனர். நிலைமையைக் கட்டுப்படுத்த இருநாட்டு அதிகாரிகள் இடையே ஒருபுறம் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தாலும் மறுபக்கம் பதற்றமும் அதிகமாகி வருகிறது; இருநாடுகளும் எச்சரிக்கை விடுக்கும் விதமாகவும் பேசி வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி அனைத்துக் கட்சித் தலைவர்களுடன் எல்லைப் பிரச்னை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தை நேற்று நடத்தினார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமர் மோடி இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகையில், ``இந்திய எல்லைக்குள் சீனப் படைகள் ஊடுருவவில்லை. இங்குள்ள நிலைகளையும் அவர்கள் கைப்பற்றவில்லை. எல்லைப் பகுதியில் சீனா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மக்கள் பலரும் கவலையுடனும் கோபத்துடனும் உள்ளனர். லடாக் பகுதியில் இருபது ராணுவ வீரர்கள் தங்களது உயிரைத் தியாகம் செய்துள்ளனர். ஆனால், அதற்கு முன்பு நமது நாட்டின் நிலத்தின் மீது கண் வைத்தவர்களுக்கு தக்க பாடத்தை கற்பித்துள்ளனர். நமது நாட்டின் ஒரு அங்குல நிலத்தைக் கூட யாராலும் எடுத்துச் செல்ல முடியாத அளவுக்கு படை திறன் நம்மிடம் உள்ளது. தேசத்தைப் பாதுகாக்க ராணுவப் படைகள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்பதை உங்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். ஒரேநேரத்தில் பல முனைகளுக்கும் செல்லக்கூடிய திறன் நமது ஆயுதப்படை வீரர்களுக்கு உள்ளது” என்று கூறியுள்ளார்.

#IndiaChinaFaceOff பிரதமர் மோடி தலைமையில் தொடங்கியது அனைத்துக்கட்சிக் கூட்டம்!  #Liveupdates

தொடர்ந்து பேசிய அவர், ``நம்முடைய ஆயுதப்படைகளுக்கு அதிக சுதந்திரத்தை வழங்கியிருந்தாலும், நம்முடைய நிலைப்பாட்டை சீனாவுக்கு தெளிவுபடுத்தியுள்ளோம். இந்தியா அமைதியையும் நட்பையும் விரும்புகிறது. ஆனால், இறையாண்மைக்கு அதிக முக்கியத்துவத்தை இந்தியா வழங்கும். புதிய உள்கட்டமைப்புகள் காரணமாக எல்லைப் பகுதியில் ரோந்துப் பணிகள் அதிகரித்து வருகிறது. அதிக விழிப்புணர்வுடன் வீரர்கள் செயல்பட்டு வருகின்றனர். எல்லைகளில் நடக்கும் நிகழ்வுகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன” என்றும் கூறியுள்ளார். முன்னதாக வீரர்கள் உயிரிழந்த பின்னர் பேசிய பிரதமர் மோடி, ``இந்திய வீரர்களின் தியாகம் வீணாகப்போவதில்லை என்பதை உறுதியளிக்கிறேன். இந்தியா அமைதியை விடும்பும் நாடாகவே உள்ளது. ஆனால், சீண்டினால் அதற்கு ஏற்ப தக்க பதிலடியைக் கொடுக்கும்” என்று எச்சரிக்கை விடுக்கும் விதமாக பேசியதும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

பிரதமர் தலைமையில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் ஷரத் பவார், தெலங்கானாவைச் சேர்ந்த ராஷ்ட்ர சமிதி கட்சி தலைவர் சந்திரசேகர் ராவ், அ.தி.மு.க சார்பில் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க தலைவர் ஸ்டாலின், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே ஆகியோர் கலந்துகொண்டனர். எல்லைகளைப் பாதுகாக்க அரசு தேவையான அனைத்தையும் செய்யும் என உறுதியளிக்கும் வகையில் பிரதமர் மோடி பேசினார். ஆம் ஆத்மி கட்சி மற்றும் ஜனதா தளம் ஆகிய கட்சிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

`உலக அமைதி, பாதுகாப்பு, சமத்துவத்தை மேம்படுத்த இந்தியா இணைந்து பணியாற்றும்!’ -பிரதமர் மோடி
அடுத்த கட்டுரைக்கு