Published:Updated:

`அமைதியைத்தான் விரும்புகிறோம்; சீண்டினால்...! - சீனாவை நேரடியாக எச்சரித்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

எல்லைப் பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடி, ``இந்தியா அமைதியை விரும்புகிறது. ஆனால், சீண்டப்படும்போது அதற்கு தக்க பதிலடிகளைக் கொடுக்கும் திறன் இந்தியாவுக்கு உண்டு’ என்று எச்சரித்திருக்கிறார்.

இந்தியா மற்றும் சீனா எல்லைப்பகுதியான லடாக்கில் நடந்த தாக்குதல்கள் அதிக பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதலில் இந்தியாவைச் சேர்ந்த 20 ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டனர். அதேநேரம், சீனாவைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட வீரர்களும் இறந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விவகாரம் பெரும் விவாதமாகி இருக்கும் நிலையில், இந்தப் பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் வரும் 19 -ம் தேதி நடைபெற இருக்கிறது. 19 -ம் தேதி மாலை 5 மணிக்கு இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், எல்லைப் பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார்.

ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி
ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி

எல்லைப் பிரச்னை தொடர்பாக பிரதமர் மோடி, ``இந்தியா அமைதியை விரும்புகிறது. ஆனால், சீண்டப்படும்போது அதற்கு தக்க பதிலடிகளைக் கொடுக்கும் திறன் இந்தியாவுக்கு உண்டு. இதில், யாருக்கும் எந்தச் சந்தேகமும் இருக்கக் கூடாது. சீனாவுடன் போராடி இறந்த வீரர்களை நினைத்து நாடு பெருமை கொள்கிறது. இந்த ராணுவ வீரர்களின் தியாகம் வீணாகாது என்பதை நான் இந்த நாட்டு மக்களுக்கு உறுதியளிக்கிறேன். நாங்கள் ஒருபோதும் யாரையும் தூண்டிவிடுவது இல்லை. எங்கள் நாட்டின் இறையாண்மையும் ஒற்றுமையும் எங்களைப் பொறுத்தவரை மிகவும் முக்கியமானது. அதற்குக் களங்கம் வரும்போதெல்லாம் அதைப் பாதுகாப்பதில் எங்களுடைய திறன்களை நிரூபித்துள்ளோம். தியாகமும் அமைதியும் எங்கள் நாட்டினுடைய குணம். ஆனால், வீரமும் தைரியமும்கூட எங்கள் நாட்டினுடைய குணத்தில் உண்டு” என்று எச்சரிக்கைவிடுக்கும் விதமாகப் பேசினார்.

`முப்படைத் தளபதிகளுக்கு ராஜ்நாத் சிங் உத்தரவு’ -பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் சீனா

கொரோனா தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து 15 மாநில முதல்வர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்திய பின்னர் பிரதமர் மோடி பேசினார். மகாராஷ்டிரா, தமிழகம், டெல்லி, குஜராத் உள்ளிட்ட வைரஸால் அதிகம் பாதிப்படைந்த மாநிலங்களின் முதலமைச்சர்கள், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். எல்லையில் மரணமடைந்த வீரர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலியும் இந்தக் கூட்டத்தில் செலுத்தப்பட்டது.

முன்னதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வீரர்கள் உயிரிழப்பு பற்றிப் பேசும்போது, ``ராணுவ வீரர்களின் இழப்பு மிகவும் கவலைக்கு உரியது. நம்முடைய வீரர்கள் தைரியத்தையும் வீரத்தையும் கடமையின் வழியாக வெளிப்படுத்தியுள்ளனர். அவர்களின் துணிச்சலையும் தியாகத்தையும் இந்தியா ஒருபோதும் மறக்காது. அவர்களின் குடும்பங்களுக்காக நான் மிகவும் வருந்துகிறேன். கடினமான நேரத்தில் இந்த தேசம் அவர்களுக்கு ஆதரவாக நிற்கிறது. வீரர்களை நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்” என்று தெரிவித்திருந்தார்.

இந்தியா- சீனா
இந்தியா- சீனா

இந்திய வீரர்கள் எல்லைகளைத் தாண்டினர் என்ற சீனாவின் குற்றச்சாட்டை இந்திய அரசு மறுத்துள்ளது. மேலும், அமைதியாக இந்தப் பிரச்னைகளை தீர்த்துக்கொள்ள விரும்புவதாகவே இந்தியா கூறி வருகிறது. இந்த நிலையில் எல்லைப் பிரச்னை தொடர்பாக சீனா வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், ``இந்தியாவுடனான மோதல்களை சீனா தவிர்க்க விரும்புகிறது. இந்தியா, முன்வரிசையில் இருக்கும் படைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். சட்டவிரோதமாக எல்லைகளை வீரர்கள் கடக்கக்கூடாது. ஆத்திரமூட்டும் வகையில் செயல்களைச் செய்யக்கூடாது. எல்லையில் உள்ள பிரச்னைகளை தீவிரமாக்கும் வகையில் ஒருதலைபட்சமாக நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது. நிச்சயமாக நாங்கள் மேலும் மோதல்களைக் காண விரும்பவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.

`எவ்வளவு தைரியம் இருந்தால் இந்திய வீரர்களை சீனா கொல்லும்?’ கொதிக்கும் ராகுல் காந்தி

சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாகப் பேசிய பின்னர் கொரோனா வைரஸ் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பேசிய பிரதமர் மோடி, ``கொரோனா வைரஸால் பாதிப்படைந்து சிகிச்சைப் பெற்று வரும் நோயாளிகளின் எண்ணிக்கையைவிட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதேபோல மிகக்குறைந்த அளவிலான நோயாளிகளுக்கே வென்டிலேட்டர் மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவுகள் தேவைப்படுகின்றன. அரசால் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் இந்த வைரஸை எதிர்த்து போராடவும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தவும் முடிந்தது. மூன்று மாதங்களுக்கு முன்பு வரை உலகம் முழுவதும் பிபிஇ கருவிகள் மற்றும் சோதனைக் கருவிகளின் தட்டுப்பாடுகள் நிலவின. இந்தியாவிலும் குறைந்த அளவிலேயே இருந்தன. ஆனால், இன்று 1 கோடிக்கும் அதிகமான பிபிஇ கருவிகள் நம்மிடம் உள்ளன. என் 95 முகக்கவசங்களும் அதிக அளவில் உள்ளன” என்று குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மேலும், ``கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்புடன் சேர்த்து சுகாதார உள்கட்டமைப்புகளையும் விரிவாக்கம் செய்ய நாம் முன்னுரிமை அளிக்க வேண்டும். அப்போதுதான், ஒவ்வொரு நோயாளிக்கும் சரியான முறையில் சிகிச்சை அளிக்க முடியும். எனவே, நாம் பரிசோதனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பரிசோதனையின் மூலம்தான் பாதிப்படைந்த நபரைக் கண்டுபிடிக்க முடியும். அவரை தனிமைப்படுத்த முடியும்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் பாதிப்பு எண்ணிக்கைகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. லாக்டௌன் தளர்வுகளும் இந்த வைரஸ் பரவலை அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்

கொரோனாவால் ஒரே நாளில்  இந்தியாவில் பதிவான 2,003 மரணங்கள்! -என்ன காரணம்?
அடுத்த கட்டுரைக்கு