Published:Updated:

`உலக அமைதி, பாதுகாப்பு, சமத்துவத்தை மேம்படுத்த இந்தியா இணைந்து பணியாற்றும்!’ -பிரதமர் மோடி

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

``ஆசியா - பசிபிக் பகுதியிலிருந்து 2021 மற்றும் 2022 ஆண்டுக்கான நிரந்தரமற்ற உறுப்பினர் இடத்துக்கு இந்தியா போட்டியிட்டது. 193 உறுப்பினர்களைக் கொண்ட இந்த சபையில் இந்தியா 184 வாக்குகளையும் பெற்றது.”

ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தரமற்ற 5 உறுப்பினர்களில் ஒருவராக இந்தியாவும் தேர்தெடுக்கப்பட்டுள்ளது. ஐ.நா சபையில் பல்வேறு வகையான துணை அமைப்புகள் உள்ளன. எனினும், பாதுகாப்பு கவுன்சில்தான் அதிக பலம் வாய்ந்த அமைப்பாக கருதப்படுகிறது. இந்தப் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. இதைத் தவிர நிரந்தரமற்ற உறுப்பினர்களாகவும் நாடுகள் இருந்து வருகின்றன. நிரந்தரமற்ற உறுப்பினர் பொறுப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் நிரப்பப்பட்டு வருகிறது. அவ்வகையில், இந்த உறுப்பினர் பதவி காலியிடங்களை நிரப்ப நேற்று தேர்தல் நடைபெற்றது.

ஐ.நா சபை
ஐ.நா சபை

ஆசியா - பசிபிக் பகுதியிலிருந்து 2021 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளுக்கான நிரந்தரமற்ற உறுப்பினர் இடத்துக்கு இந்தியா போட்டியிட்டது. வேறு எந்த நாடுகளும் இந்தப் பகுதியிலிருந்து இந்தியாவுக்கு எதிராகப் போட்டியிடவில்லை. எதிர்த்துப் போட்டியிட மற்ற நாடுகள் இல்லை என்றாலும் சபையின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும் எனக் கூறப்படுகிறது.

193 உறுப்பினர்களைக் கொண்ட இந்தச் சபையில் இந்தியா 184 வாக்குகளைப் பெற்றது. இந்தியாவுடன் அயர்லாந்து, மெக்ஸிகோ, நார்வே ஆகிய நாடுகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன. சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட 55 உறுப்பினர்களைக் கொண்ட ஆசிய பசிபிக் குழுவால் இந்தியாவின் வேட்புமனு கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்போது இந்த போட்டியில் வெற்றியும் பெற்றுள்ளது.

இதற்கு முன்னதாக 1950-1951, 1967-1968, 1972-1973, 1977-1978, 1984-1985, 1991-1992 மற்றும் 2011-2012 ஆகிய ஆண்டுகளில் இந்தியா நிரந்தரமற்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றிக்கு ஆதரவாக இருந்த நாடுகள் அனைத்துக்கும் பிரதமர் மோடி தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், ``ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினராக இந்தியா சேருவதற்கு ஆதரவளித்த உலக நாடுகள் அனைத்துக்கும் நன்றி. உலக அமைதி, பாதுகாப்பு, சமத்துவம் ஆகியவற்றை மேம்படுத்த அனைத்து உறுப்பு நாடுகளுடனும் இணைந்து இந்தியா பணியாற்றும்” என்று தெரிவித்துள்ளார்.

`அமைதியைத்தான் விரும்புகிறோம்; சீண்டினால்...! - சீனாவை நேரடியாக எச்சரித்த பிரதமர் மோடி
அடுத்த கட்டுரைக்கு