Published:Updated:

`ஹைதராபாத் நிஜாம் பேரன்களுக்கே ரூ.350 கோடி!' - 60 ஆண்டுகளுக்குப் பிறகு லண்டன் கோர்ட் தீர்ப்பு

நிஜாமின் 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்த பாகிஸ்தான் தூதர் ஹபிப் இப்ராகிம் ரஹிம்துலாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

hyderabad nizam
hyderabad nizam ( getty image )

ஆங்கிலேயர்களிடம் விடுதலை பெற்றபிறகு சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபபாய் படேல் முயற்சியில் பல்வேறு சமஸ்தானங்கள் இந்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டது. அவற்றில் முக்கியமானது ஹைதராபாத் சமஸ்தானம். இதை அப்போது ஆண்டு கொண்டிருந்தவர் ஹைதராபாத் ஏழாம் அசாஃப் ஜா நிஜாம் என அழைக்கப்படும் நவாப் மிர் உஸ்மான் அலிகான் சித்திக். அப்போதைய காலகட்டத்தில் உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருந்தவர் இவர்தான் எனக் கூறப்படுகிறது. இவர் ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைத்தது ராணுவ நடவடிக்கைக்குப் பிறகுதான்.

hyderabad nizam
hyderabad nizam
getty image

பிரிட்டனிடம் இருந்து இந்தியா விடுதலையான பிறகு நேரு தலைமையில் இந்திய அரசு அமைந்தது. அப்போதும் இந்தியாவுடன் இணையாமல் 562 சமஸ்தானங்கள் இருந்தன. இதை இந்தியாவுடன் இணைக்கும் பணிகளைக் கவனித்துவந்தவர் வல்லபபாய் படேல். அவரது முயற்சியால் பல்வேறு சமஸ்தானங்கள் இணைந்தாலும் காஷ்மீர், ஜுனகத் மற்றும் ஹைதராபாத் ஆகிய மூன்று தன்னாட்சி பெற்ற சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணையவில்லை.

Vikatan

இந்த மூன்றில் மிகப்பெரிய மக்கள் தொகை, மொத்த தேசிய உற்பத்தி என அப்போதைய மிகப்பெரிய தன்னாட்சி அரசாக இருந்தது நவாப் மிர் உஸ்மான் அலி ஆண்டு வந்த ஹைதராபாத் நிஜாம்தான். சுதந்திரத்துக்கு முன்பே பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் ராணுவம், ரயில் சேவை, தபால் துறை வசதி என ஹைதராபாத் நிஜாம் தன்னாட்சி அரசு நடத்திவந்தார். இவர் ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்தியாவுடன் இணைப்பதற்கு மறுப்புத் தெரிவித்துவந்தார். கூடவே இந்தியாவுக்கு எதிராக போராட முடிவுசெய்தவர்; பாகிஸ்தான் தந்தை முகமது அலி ஜின்னாவிடம் உதவி கேட்டது எல்லாம் தனிக்கதை.

hyderabad nizam
hyderabad nizam
getty image

ஏழாம் நிஜாமின் பிடிவாதத்தால் ஹைதராபாத்தை இணைக்க வல்லபபாய் படேல் எடுத்த அஸ்திரம் `ஆபரேஷன் போலோ'. `ஆபரேஷன் போலோ' மூலம் ராணுவ நடவடிக்கை மூலம் இந்திய ராணுவத்துக்கும் ஹைதராபாத் ராணுவத்துக்கும் சண்டை ஏற்பட நிறைய ஹைதராபாத் வீரர்கள் உயிரிழக்க நேர்ந்தது. பின்னர் ஒருவழியாக ஹைதராபாத்தின் கடைசி நிஜாம் மீர் உஸ்மான் அலி கான் ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைத்தார்.

பார்க்க சொர்க்கம்... உள்ளே நரகம்... பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பற்றித் தெரியுமா? #PoK

இந்தக் காலகட்டத்தில் இந்திய ராணுவத்துடன் நடந்த சண்டைக்கு பாகிஸ்தானிடம் இருந்து நிஜாம் ஆயுதங்கள் வாங்கியதாகவும் அதற்குப் பிரதிபலனாக 1948-ம் ஆண்டு நிஜாமின் 8 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் பிரிட்டன் தலைநகர் லண்டனில் இருந்த பாகிஸ்தான் தூதர் ஹபிப் இப்ராகிம் ரஹிம்துலாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தப் பணம் லண்டனின் நெட் வெஸ்ட் வங்கியில் 'டெபாசிட்' செய்யப்பட்டது.

hyderabad nizam and sardar patel
hyderabad nizam and sardar patel
getty image

ஆனால், பின்னாளில் ஹைதராபாத் இந்தியாவுடன் இணைந்தபிறகு நிஜாமின் வாரிசுகள் இந்தப் பணத்துக்கு உரிமைக் கோர பாகிஸ்தானும் உரிமைக் கோர பிரச்னை ஏற்பட்டது. `பணம் யாருடையது எனத் தெரிந்தால் மட்டுமே பணத்தை விடுவிக்க முடியும்' என நெட் வெஸ்ட் வங்கியும் கைவிரிக்க விவகாரம் நீதிமன்றம் சென்றது. இந்திய அரசுடன் இணைந்து நிஜாமின் வாரிசுகள் வழக்கு தொடர, லண்டன் நீதிமன்றத்தில் கடந்த 60 வருடங்களாக வழக்கு நடைபெற்றுவந்தது. இந்தக் காலகட்டத்தில் இந்தப் பணத்தின் மதிப்பு பன்மடங்காக உயர்ந்தது. இன்றைய சூழ்நிலையில் அது 350 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

`கோல்டு மெடல்.. ஜூனியர் கேடர்!'- இம்ரானை கிளீன் போல்டாக்கிய இன்டர்நெட் சென்சேஷன் விதிஷா மைத்ரா யார்?

60 வருடங்களாக நடைபெற்றுவந்த வழக்கு கடந்த ஜூனில் இறுதிக்கட்ட விசாரணையை எட்டியது. அதன்படி நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. முடிவில், ``நெட் வெஸ்ட் வங்கியில் உள்ள நிஜாமின் பணத்துக்கு உரிமை கொண்டாட பாகிஸ்தானுக்கு எந்த முகாந்திரமும் இல்லை. இந்தப் பணம் ஹைதராபாத் நிஜாம் வாரிசுகளுக்கே சொந்தம்" எனக் கூற தற்போது இந்த 350 கோடி ரூபாய் பணமும் நிஜாமின் பேரன்களான இளவரசர் முகார்ரம் ஜா உள்ளிட்ட இரண்டு பேருக்கும் கிடைக்கவுள்ளது.

England Court
England Court

தீர்ப்பு குறித்து நிஜாமின் பேரன்கள் வரவேற்பு தெரிவித்துள்ள நிலையில், பாகிஸ்தான் அரசோ, ``எந்தச் சட்டத்துக்கும் கட்டுப்படாமல் ஹைதராபாத்தை இந்தியா தன்னுடன் இணைத்துக்கொண்டது. இதுவே நிஜாம் தனது மக்களுக்காகவும், இந்தியாவின் ஊடுருவலுக்கு எதிராகவும் முயற்சிகள் எடுக்க காரணமாக இருந்தது. பாகிஸ்தானின் உதவியை நிஜாம் நாடியதை அடுத்தே அவருக்கு உதவி கொடுக்கப்பட்டது. இந்தத் தீர்ப்பை ஆய்வு செய்து வருகிறோம். நிபுணர்களின் ஆலோசனைகளைக் கேட்டப் பிறகு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்" என்று தனது வெளியுறவுத் துறை மூலம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஜர்பல் ராணி... பாகிஸ்தான் ராணுவ ஜீப் இந்தியாவின் நினைவுச்சின்னமாக மாறிய கதை!