Published:Updated:

4 முதல் 7 முகாம்கள்... 35 பயங்கரவாதிகள் பலி?- பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவம்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள 4 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் 35 பயங்கரவாதிகள் இறந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ராணுவம்
இந்திய ராணுவம்

காஷ்மீரில் வன்முறையை நிகழ்த்த திட்டமிட்ட பாகிஸ்தான், அதற்காக பயங்கரவாதிகளை காஷ்மீருக்குள் ஊடுருவ திட்டம் வகுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, எல்லையில் போர் நிறுத்த விதிமுறைகளை மீறி பாகிஸ்தான் ராணுவம் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் தங்கார் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 2 இந்திய வீரர்களும், குடிமக்களில் ஒருவரும் உயிரிழந்தனர். மேலும் சிலர் படுகாயமடைந்தனர்.

ராணுவம்
ராணுவம்

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்குட்பட்ட பகுதியில் இன்று தாக்குதல் நடத்தியது. தாங்தார் செக்டார் அருகேயுள்ள 4 பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் 35 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இவர்கள் அனைவரும் லஷ்கர்- இ- தொய்பா அமைப்பைச்சேர்ந்தவர்கள் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இந்திய அரசு தரப்பிலிருந்து இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ தளபதி பிபின் ராவத்துடன் காஷ்மீரில் நிலவும் சூழல் குறித்து கேட்டறிந்துள்ளார். மேலும், தனிப்பட்ட முறையில் இந்தத் தாக்குதல் குறித்து ராஜ்நாத் சிங் கண்காணித்து வருகிறார்.

ராணுவம்
ராணுவம்

இதுதொடர்பாக அவ்வப்போது தகவல்களை அளிக்கவும் பிபிவின் ராவத்துக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். இந்திய - பாகிஸ்தான் ராணுவ வீரர்களிடையே நடந்த இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 9 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 1 பாகிஸ்தான் ராணுவ வீரர் மற்றும் 3 குடிமக்கள் இறந்துள்ளதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது. இதன்காரணமாக எல்லையில் பதற்றம் நிலவிவருகிறது.