இந்தியப் பகுதியில் சீன ராணுவம் அமைத்த டென்ட்டுகளை அகற்றச் சென்ற இந்திய ராணுவ வீரர்கள் மீது சீன ராணுவ வீரர்கள் திடீரெனத் தாக்குதல் நடத்தினர். இந்திய வீரர்கள் பதிலடி கொடுத்தனர். அந்த மோதலில் வீர மரணமடைந்த 20 ராணுவ வீரர்களின் பெயர்களும், அந்த நிகழ்வு பற்றிய தகவல்களும் கிழக்கு லடாக்கில் ராணுவம் சார்பாக அமைக்கப்பட்டிருக்கும் நினைவகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இந்த நினைவகம் எல்லை அருகேயுள்ள தௌலத் பெக் ஒல்டி ராணுவத் தளத்தில் அமைந்திருக்கிறது. ``ஜூன் 15, 2020 அன்று கல்வான் பள்ளத்தாக்கில் கர்னல் பி.சந்தோஷ் பாபு வழிநடத்த Quick Reaction Force of 16 Bihar மற்றும் அதன் இணைப் படைப் பிரிவுகள் இணைந்து Y Nala பகுதியிலுள்ள PLA (People’s Liberation Army) எனும் சீனப் படையினரை விரட்டினர்.

பிறகு அங்கிருந்து அவர்கள் PP14 பகுதிக்குச் சென்றனர். கல்வான் ஆறு ஷைலக் ஆற்றைச் சந்திக்கும் இடமே Y Nala. அங்கிருந்து அவர்களைத் துரத்திவிட்டு PP14 சென்றவுடன் அங்கே இந்திய ராணுவ வீரர்களுக்கும், சீன PLA படையினருக்கும் மோதல் ஏற்பட்டது. அப்போது கர்னல் சந்தோஷ் பாபு முன்னிற்க, இரு படையினருக்கும் இடைய கடுமையான மோதல் நடந்தது" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த மோதலில் வீர மரணமடைந்த வீரர்களை அங்கு `Gallants of Galwan' எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
அந்த மோதலில் இந்தியா தரப்பில் 20 வீரர்கள் வீர மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், சீனா இன்னும் அதிகாரபூர்வமாக அந்தப் போரில் மாண்ட சீன வீரர்களின் எண்ணிக்கையை வெளியிடவில்லை. ஆனால், சீனா தரப்பில் கமாண்டிங் ஆபீஸர் உட்பட ஐந்து வீரர்கள் உயிரிழந்த தகவலை உறுதிசெய்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது. அதேநேரம், இந்த எண்ணிக்கை பொய்யானது என்றும் சுமார் 40 முதல் 45 பேர் சீனா தரப்பில் உயிரிழந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கல்வான் பள்ளத்தாக்கு மோதலை அடுத்து, எல்லையில் படைகளைக் குறைப்பது தொடர்பாக இரு நாட்டுத் தரப்பிலும் பல்வேறு சுற்றுகளாகப் பேச்சுவார்த்தை நடந்திருந்தாலும், பிரச்னை இன்னும் முடிவுக்கு வரவில்லை.

இருதரப்பிலும் ஏழாவதுகட்ட பேச்சுவார்த்தை அடுத்த வாரம் நடக்கப்போவதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை நடந்த கூட்டங்களில் இந்தியா, எல்லையில் முந்தைய நிலை திரும்ப வேண்டும் என்று வலியுறுத்தியது. தற்போது கிழக்கு லடாக் பகுதியில் 50,000 ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். பாங்கோங் சோ ஏரியைச் சுற்றியிருக்கும் புவியியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் இந்திய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன.