Published:Updated:

`நவீனப்படுத்த ரூ.80,000 கோடி நிதி!' - மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கும் ராணுவம்

இந்தியத் தரைப்படைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கியது போக 20,500 கோடி ரூபாயும் கூடுதலாகத் தேவைப்படுகிறது. அதேபோல, இந்திய விமானப்படைக்கு 40,000 கோடி ரூபாயும், கப்பல்படைக்கு 20,000 கோடி ரூபாயும் தேவைப்படுகின்றன. அதற்காக மொத்தம் 80,500 கோடி ரூபாயை மத்திய அரசிடம் இந்திய ராணுவம் கோரியுள்ளது.

இந்திய ராணுவம்
இந்திய ராணுவம் ( vikatan )

இந்திய ராணுவத்தை நவீனப்படுத்துவதற்காக, 80,000 கோடி ரூபாய் வேண்டுமென்று மத்திய அரசுக்கு ராணுவத்தின் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்புக்கு வந்தபிறகு, சர்ஜிகல் அட்டாக், புல்வாமா தாக்குதல், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் ராணுவம் குவிப்பு என இந்திய ராணுவம் தொடர்பான பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. ராணுவத்துக்கான பொறுப்பு முன்பைவிட தற்போது அதிகரித்துள்ளது.

இந்திய ராணுவம்
இந்திய ராணுவம்
vikatan

இந்திய ராணுவத்துக்கு வலிமைசேர்க்கும் ஃபைட்டர் விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள், வெடிகுண்டுகள் போன்றவற்றில் பற்றாக்குறை இருப்பதாகத் தெரிகிறது. எல்லையில் பதற்றமாக உள்ள இன்றைய சூழலில், அந்தப் பற்றாக்குறையைச் சரிசெய்வது மிகவும் அவசியமாகும்.

இந்திய ராணுவத்துக்காக 2019-20 பட்ஜெட்டில் 3.18 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. இதில், 2.1 லட்சம் கோடி ரூபாய், ராணுவ வீரர்களின் சம்பளம் மற்றும் தினசரி செயல்பாடுகளுக்காகச் செலவிடப்படுகிறது. எஞ்சிய 1.08 லட்சம் கோடி ரூபாய், ராணுவத்துக்குத் தேவையான ஆயுதங்கள், தளவாடங்கள் வாங்குவதற்குப் பயன்படுத்தப்படுகிறது.

இந்திய ராணுவம்
இந்திய ராணுவம்
vikatan

சுமார் 13 லட்சம் வீரர்களைக் கொண்டுள்ள இந்தியத் தரைப்படைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கியதுபோக 20,500 கோடி ரூபாய் கூடுதலாகத் தேவைப்படுகிறது. அதேபோல, இந்திய விமானப்படைக்கு 40,000 கோடி ரூபாயும், கப்பல்படைக்கு 20,000 கோடி ரூபாயும் தேவைப்படுகிறது. அதற்காக மொத்தம் 80,500 கோடி ரூபாயை மத்திய அரசிடம் இந்திய ராணுவம் கோரியுள்ளது. மேலும், முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் உள்ளிட்ட தேவைகளுக்காக 15,500 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது.