Published:Updated:

`7 நாள்களுக்கான உணவுப் பொருள்கள் கிடைத்திருக்கிறது!’- இரானில் தவிக்கும் 721 இந்திய மீனவர்கள்

உணவுப் பொருள் விநியோகம்
உணவுப் பொருள் விநியோகம்

இரான் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துவரும் நிலையில், அங்கு மீன்பிடித் தொழிலுக்காகச் சென்ற தமிழக மீனவர்கள் உள்ளிட்ட ஏராளமானோர், தாயகம் திரும்ப வழியின்றி தவித்துவருகிறார்கள். 

சீனாவை நிலைகுலையச் செய்த கொரோனா வைரஸ், அடுத்தடுத்து பல்வேறு நாடுகளையும் அச்சத்தில் உறைய வைத்துள்ளது. இந்த வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர். ஆனாலும், வைரஸ் தாக்குதல் குறையவில்லை. 

`90 சதவிகித ஏற்றுமதி, இறக்குமதி  பாதிப்பு!’ -கொரோனா அச்சத்தால் திணறும் தூத்துக்குடி துறைமுகம்

தற்போது இத்தாலி, இரான் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு வேகமாக உள்ளது. இரான் நாட்டில் 20,610 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 1,556 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த நாட்டில் ஒவ்வொரு 10 நிமிடத்துக்கும் ஒருவர் வீதம் உயிரிழப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

`பினராயிடம் பாடம் படியுங்கள்!'- கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மோடியை விமர்சிக்கும் திருமாவளவன்

கொரோனா பதிப்பைக் கட்டுப்படுத்தும் வகையில் இரான் அரசு, விமான சேவையை முற்றிலுமாக ரத்துசெய்துள்ளது. இந்த நிலையில், இரானில் மீன்பிடித் தொழிலுக்காகச் சென்ற இந்திய மீனவர்கள் 721 பேர், சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல் தவித்துவருகிறார்கள். 

இரானில் சிக்கியுள்ள இந்திய மீனவர்கள்
இரானில் சிக்கியுள்ள இந்திய மீனவர்கள்

இரான் நாட்டின் கீஷ் தீவில் உள்ள மீனவர்கள், உணவு, குடிநீர் வசதி இல்லாமல் தவித்தனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இதுவரை இல்லாதபோதிலும், தங்களுக்கும் நோய் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறார்கள். தங்களை இந்திய அரசு போர்க்கால அடிப்படையில் மீட்க வேண்டும் என வீடியோ மூலம் வலியுறுத்திவருகிறார்கள்.

இரானில் சிக்கித்தவிக்கும் இந்திய மீனவர்களின் நிலை பற்றி அறிந்த சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளையின் தலைவர் ஜஸ்டின் ஆன்றணி, உடனடியாக இதுகுறித்து மத்திய அரசுக்குத் தகவல் அனுப்பினார். அவர்களின் நிலைபற்றி விளக்கமாகத் தெரிவித்திருந்ததால், இந்தியத் தூதரக அதிகாரிகள் நேரில் சென்று மீனவர்களைச் சந்தித்ததுடன் அவர்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களையும் வழங்கினர். 

ஜஸ்டின் ஆன்றணி
ஜஸ்டின் ஆன்றணி

இதுபற்றி ஜஸ்டின் ஆன்றணி கூறுகையில், ``இரானில் இந்தியாவைச் சேர்ந்த 721 மீனவர்கள் இருக்கிறார்கள். தமிழகம், கேரளா, குஜராத், ஆந்திரா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் அங்கு தவித்துவருகிறார்கள். தமிழகத்தைச் சேர்ந்த 300-க்கும் அதிகமானோர் அங்கு இருக்கிறார்கள்

இந்திய மீனவர்களுக்கு உணவு, தண்ணீர் கிடைக்காத நிலை குறித்து, பிரதமர் அலுவலகம், வெளியுறவுத்துறை அமைச்சர், இந்தியத் தூதரகம் ஆகியோருக்குத் தகவல் அனுப்பியிருந்தேன். அவர்களுக்கு தற்போது உணவுப்பொருள்கள் கிடைத்திருக்கின்றன. இது நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இருந்தபோதிலும், அங்குள்ள மீனவர்களைப் போர்க்கால அடிப்படையில் மீட்டு வரவேண்டும்.

உணவுப் பொருள்
உணவுப் பொருள்

இரானில் இருந்து விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், கப்பல் மூலம் அங்கிருக்கும்  இந்திய மீனவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா பதிப்பு ஏற்படுவதற்கு முன்பாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை மத்திய அரசுக்கும் தூதரக அதிகாரிகளுக்கும் தெரிவித்து மனு அனுப்பியுள்ளேன்” என்றார். உணவுப் பொருள்கள் கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மீனவர்கள், தங்களுக்கு 6 முதல் 7 நாள்களுக்கான உணவுப் பொருள்கள் கிடைத்திருப்பதாகவும், விரைவில் தங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அவர்களை விரைவில் மீட்டுவர வேண்டும் என உறவினர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு