Published:Updated:

கொரோனா ஆபத்து... இரானில் சிக்கியுள்ள 721 கன்னியாகுமரி மீனவர்களின் நிலை என்ன?

கொரோனா அச்சத்தால் ஈரானில் படகில் வசிக்கும் மீனவர்கள்
கொரோனா அச்சத்தால் ஈரானில் படகில் வசிக்கும் மீனவர்கள்

`குடும்பக் கஷ்டத்துக்காகத்தான் இங்கு மீன்பிடித் தொழிலுக்கு வந்தோம். அதற்காக உயிரைப் பணயம்வைக்க முடியுமா?’

ஈரான் நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுத் தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால் அங்கு பொதுமக்கள் கூட்டம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிலையங்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில் இந்தியாவைச் சேர்ந்த மீனவர்கள் சுமார் 800 பேர் அங்கு சிக்கியுள்ளனர். அதில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 721 மீனவர்களும் அடக்கம். அதிலும் பாதிக்கும் மேற்பட்ட மீனவர்கள் 20 நாள்களுக்கு மேலாகப் படகுகளில் வசித்து வருகின்றனர். உணவுத் தட்டுப்பாடு போன்ற இன்னல்களை அனுபவித்து வரும் மீனவர்கள் சொந்த ஊர் திரும்ப வழியில்லாமல் தவிக்கிறார்கள். அவர்களை மீட்டுவர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்களின் உறவினர்கள் மற்றும் மீனவ அமைப்புகள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளன. மீனவர்களின் உறவினர்கள் நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு உண்ணாவிரதப் போராட்டமும் நடத்தினர்.

மீனவர் செல்வராஜ்
மீனவர் செல்வராஜ்

இந்த நிலையில் ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களைத் தொடர்புகொண்டு பேசினோம். கன்னியாகுமரி மாவட்டம் மணக்குடியைச் சேர்ந்த செல்வராஜ் கூறுகையில், ``ஈரான் அசலூர் (Azalur) பகுதியில் மீன்பிடித் தொழிலுக்காக கடந்த ஏழு மாதங்களுக்கு முன்பு வந்தேன். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீன்பிடித் தொழிலுக்குப் போகாமல் 20 நாள்களுக்கும் மேலாகக் கரைப்பகுதியில் அறையில் வசித்துவருகிறோம். எங்கள் பகுதியில் சுமார் 240 இந்திய மீனவர்கள் இருக்கிறோம். சிலரின் முதலாளிகள் உணவுத் தேவைக்கு உதவுகிறார்கள். நாங்கள் ஊருக்குச் செல்ல உதவுங்கள் என்று கேட்டால், பல முதலாளிகள் கண்டுகொள்ளவே இல்லை. எங்களிடம் இருந்த கொஞ்சம் பணமும் செலவாகிவிட்டது.

இப்போது, 'நீங்க மீன்பிடிக்கப் போங்க, இல்லைன்ன ரூமை விட்டு வெளியே போய் உங்க செலவுல ரூம் எடுத்துத் தங்குங்க' என்கிறார் முதலாளி. ரூமை காலிசெய்யக் கெடுவும் கொடுத்திருக்கிறார்கள். எங்களை இங்கிருந்து வெளியேற்றினால், போலீஸ் ஸ்டேஷன் முன் போய் உக்கார முடிவு செய்திருக்கிறோம். அதன்பிறகு இங்குள்ள போலீஸ் என்ன செய்தாலும் எங்களுக்குக் கவலை இல்லை. எங்களை சொந்த ஊருக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் ஏற்கெனவே வீடியோ வெளியிட்டேன். அதற்காக இங்கிருக்கிற 240 மீனவர்களும் ஒரே இடத்தில் கூடினோம். உடனே போலீஸ் வந்து என்னை அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். எங்கள் முதலாளிக்குத் தகவல் கொடுத்தார்கள். நாங்கள் எங்கள் நிலைமையைச் சொன்னோம். 'கொரோனா வைரஸ் காரணமாகக் கூட்டம் போடக்கூடாது என்று உத்தரவு இருக்கிறது, இனி கூட்டம் கூடக்கூடாது' என்று எச்சரித்து அனுப்பினார்கள்.

ஈரானில் தவிக்கும் குமரி மீனவர்கள்
ஈரானில் தவிக்கும் குமரி மீனவர்கள்

நாங்கள் காலையில் சாப்பிடமாட்டோம். இருக்கிற பொருளை வைத்து மதியம் சமைத்துச் சாப்பிடுவோம். அதில மிச்சம் இருந்தால் இரவு சிலர் சாப்பிடுவார்கள்; பலர் சாப்பிடாமலேயே தூங்கிவிடுவோம். சில முதலாளிகள் கொடுக்கும் உணவுப் பொருள்களை வைத்து எல்லோரும் பகிர்ந்து சாப்பிடுகிறோம். இங்கு உள்ள கீஸ், சீரோ தீவுகள், லாமான், கங்கூன் பகுதிகளில் நம் நாட்டு மீனவர்கள் உள்ளனர். முதலாளிகள், 'மீன்பிடிக்கச் செல்லுங்கள்' என்று தொடர்ந்து வற்புறுத்துகிறார்கள். 'நாங்கள் மீன் பிடிக்கப் போகிறோம். எங்களுக்கு ஏதாவது நடந்தால் பொறுப்பு ஏற்பதாக நீங்கள் எழுதித் தந்தால் போகிறோம்' என்றோம். அதற்கு அவர்கள் பதில் சொல்லவில்லை.

இந்த நாட்டின் சட்டப்படி நாங்கள் மீன் பிடிக்கப்போகும்போது ஈரான் நாட்டு பிரஜைகள் இருவரும் வரவேண்டும். கடலோரக் காவல்படை போன்றவை படகை ஆய்வு செய்தால் அவர்கள்தான் இந்நாட்டு மொழியில் பேசி நிலைமையை விளக்குவார்கள். அப்படி ஈரானைச் சேர்ந்தவர்கள் எங்களுடன் வந்தால் அவர்களிடமிருந்து எங்களுக்குக் கொரோனா வைரஸ் தொற்று வந்துவிடுமோ என்ற அச்சம் உள்ளது.

ஈரான் கீஸ் தீவில் படகில் தவிக்கும் மீனவர்கள்
ஈரான் கீஸ் தீவில் படகில் தவிக்கும் மீனவர்கள்

எங்களுக்கு உதவுங்கள் என்று இந்தியத் தூதரகத்தை தொடர்புகொண்டோம். 'உங்களைப் பார்க்க அனுமதி கிடைக்கவில்லை, அதனால் பார்க்க முடியவில்லை' என்கிறார்கள். 'நீங்கள் இங்கு வந்துபோனால்தான் இங்குள்ள முதலாளிகள் எங்களைத் தொந்தரவு செய்யமாட்டார்கள்' என்றோம். ஆனாலும் அவர்கள் பார்க்க வரவில்லை. குடும்பக் கஷ்டத்துக்காகத்தான் இங்கு மீன்பிடித் தொழிலுக்கு வந்தோம். அதற்காக உயிரைப் பணயம்வைக்க முடியுமா?’’ என்றார்.

ஈரானின் கீஸ் தீவில் மீன்பிடிப் படகில் 20 நாள்களுக்கு மேலாக வசித்துவரும் குமரி மாவட்டம் கடியப்பட்டணத்தைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவரைத் தொடர்புகொண்டு பேசினோம்.

’’ஈரான் நாட்டின் கீஸ் தீவில் படகில் இருக்கிறோம். தமிழகம், கேரளா, குஜராத் பகுதிகளைச் சேர்ந்த 340 பேர் 60 படகுகளில் வசித்து வருகிறோம். தங்குவதற்கு அறைகள் இல்லாததால் இந்த நிலை. கொரோனா காரணமாக நெருக்கமாகப் படகுகளை நிறுத்தக்கூடாது எனக் கூறியதால் கீஸ் மீன்பிடித் துறைமுகத்துக்குள்ளும், துறைமுகத்துக்கு வெளியிலும் படகுகளை நிறுத்தி வைத்துள்ளோம். நாங்கள் மீன்பிடித் தொழிலுக்குப் போனபோது சாப்பாட்டுக்குக் குறையில்லை. இப்போது நல்ல உள்ளம் கொண்ட சில முதலாளிகள் வாங்கிக்கொடுக்கும் உணவுப் பொருள்களை படகிலேயே வைத்து சமைத்துப் பகிர்ந்து சாப்பிடுகிறோம். ஒரு படகில் ஏழு, எட்டுப் பேர் தங்கியுள்ளோம். ஒரு படகில் உணவு சமைத்தால், சிறு வள்ளங்களில் வந்து மற்ற படகில் உள்ளவர்கள் சாப்பிட்டுவிட்டுப் போகிறார்கள். ஒரு சில கடைகள் திறந்துள்ளதால் எங்களால் தாக்குப்பிடிக்க முடிகிறது.

மீனவர் ஜெகதீஸ்
மீனவர் ஜெகதீஸ்

வழக்கமாக மார்ச் 15-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை இந்த நாட்டில் புத்தாண்டைக் கொண்டாடுவார்கள். அப்போது தீவு முழுவதும் மக்கள் நிறைந்திருப்பார்கள். வெளியூரைச் சேர்ந்தவர்கள் கப்பலில் வந்து இறங்குவார்கள். கொரோனா பாதிப்பால் மக்கள் இல்லாமல் இப்போது தீவே வெறிச்சோடிக் கிடக்கிறது. தினமும் தூதரக அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பேசுகிறோம். அவர்கள் நேரில் வரவில்லை. அங்கு எங்கள் குடும்பங்கள் எல்லாம் அச்சத்தில் உள்ளன. இன்னும் எத்தனை நாள் எங்களுக்கு உணவு கிடைக்கும் என்று தெரியாது. இந்திய அரசு விரைந்து எங்களை மீட்டு உயிர்காத்து உதவ வேண்டும்." என்று கூறினார்.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்திய சீனா... கற்றுக்கொள்ள 5 பாடங்கள்!
அடுத்த கட்டுரைக்கு