Published:Updated:

உலகின் நீளமான கூந்தல் கொண்ட இளம்பெண்... 12 ஆண்டுகளுக்குப் பின் ஹேர் கட்... வைரலாகும் வீடியோ!

நிலான்ஷி படேல்
நிலான்ஷி படேல் ( Instagram Image )

கின்னஸ் அமைப்பின் விதிமுறைகளின்படி தன் நீளமான கூந்தல் மூலம் உலக சாதனை புரிந்த நிலான்ஷி, வெட்டும் தன் கூந்தலை ஏலத்தில் விடலாம் அல்லது புற்றுநோயாளிகளுக்கு உதவும் பொருட்டு தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கலாம் அல்லது அருங்காட்சியகத்துக்கு வழங்கலாம்.

குஜராத்தைச் சேர்ந்த 18 வயதான நிலான்ஷி படேல் என்கிற இளம்பெண், பதின் பருவப் பிரிவில் `உலகின் நீளமான கூந்தலுக்குச் சொந்தக்காரர்' என்கிற பெருமையைப் பெற்றவர். 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் இவரது கூந்தல் 200 செ.மீ நீளத்தை அடைந்தது. இதன் காரணமாக `உலகின் நீளமான கூந்தலைக் கொண்ட டீன் ஏஜ் பெண்' என்கிற அடைமொழியுடன் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இவரது பெயர் இடம்பெற்றது.

தனக்கு ஆறு வயதாக இருக்கும்போது கடைசியாக சலூனில் முடிவெட்டிக் கொண்டதாகவும், ஆனால் அப்போது ஏற்பட்ட மோசமான அனுபவம் காரணமாக அதன் பின்னர் முடி வெட்டுவதையே முற்றிலும் நிறுத்திவிட்டு முடியை வளர்க்க ஆரம்பித்ததாகவும் நிலான்ஷி கூறுகிறார்.

நிலான்ஷி படேல்
நிலான்ஷி படேல்
Instagram Image

மாற்றம் ஒன்றுதானே மாறாதது? எனவே நீ.........ளமான கூந்தலோடு வலம் வந்துகொண்டிருந்த நிலான்ஷிக்கு, இப்போது 12 வருடங்களுக்குப் பிறகு முடிவெட்டிக்கொள்ள வேண்டும் என்கிற ஆசை வந்தது.

கின்னஸ் அமைப்பின் விதிமுறைகளின்படி தன் நீளமான கூந்தல் மூலம் உலக சாதனை புரிந்த நிலான்ஷி, வெட்டும் தன் கூந்தலை ஏலத்தில் விடலாம் அல்லது புற்று நோயாளிகளுக்கு உதவும் பொருட்டு தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கலாம் அல்லது அருங்காட்சியகத்துக்கு வழங்கலாம்.

இந்த மூன்றில் எதைத் தேர்ந்தெடுக்கலாம் என்று யோசித்து, கடைசியாக தன் தாய் காமினிபென்னின் ஆலோசனையின்படி தனது கூந்தலை அருங்காட்சியகத்துக்கு வழங்க நிலான்ஷி முடிவெடுத்தார்.

உலக சாதனை புரியக் காரணமாக இருந்த தன் மகளின் நீளமான கூந்தலை அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தும்போது, இது பல இளம்பெண்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும் என்றும், இதன் காரணமாகத் தன் மகளின் இந்த உலக சாதனையை முறியடிக்க மற்ற இளம்பெண்கள் முன் வருவர் என்று நிலான்ஷியின் தாய் கூறியிருக்கிறார். மேலும், இனிவரும் நாள்களில் புற்று நோயாளிகளுக்கு உதவும் பொருட்டு தன் மகள் தனது கூந்தலை தானம் செய்வார் என்றும் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் தனது கூந்தலை வெட்டிக் கொள்வதற்கு முன்பு அதை ஆசையுடன் முத்தமிட்ட நிலான்ஷி தனது புதிய சிகை அலங்காரத்தை ஆவலுடன் எதிர்பார்த்து இருப்பதாகக் கூறினார். அதுமட்டுமல்லாமல் தான் முடி வெட்டிக்கொண்ட வீடியோவை சமூக ஊடகங்களிலும் பகிர்ந்திருக்கிறார். பேரருவி போலப் விழும் தன் கூந்தலை வெட்டிக்கொள்ளும் இவரது இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் அதிரி புதிரி ஹிட்டடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு