இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஐந்து பெண் அதிகாரிகளைக் கொண்ட குழு, அரபிக்கடலில் மேற்கொண்ட ரோந்து பணியானது வரலாற்றுச் சாதனையாகப் பதிவாகியிருக்கிறது.

கடற்படையில் பெண்களுக்குத் தனி அதிகாரம் வழங்கும் வகையிலான முன்னெடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக, ஐந்து பெண்கள் மட்டுமே கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டது. அதில் இடம் பெற்றவர்கள், குஜராத் மாநிலம் போர்பந்தரில் உள்ள இந்தியக் கடற்படையின் ஐ.என்.ஏ.எஸ்-314 பிரிவைச் சேர்ந்த உயர் அதிகாரிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மிஷன் கமாண்டர் ஆன்சல் ஷர்மா, விமானிகளான ஷிவாங்கி மற்றும் அபுர்வா கைத், சென்சார் அதிகாரிகள் பூஜா பாண்டே மற்றும் பூஜா ஷெகாவத் ஆகியோர் அந்தக் குழுவில் இடம்பெற்றனர். இவர்கள், போர்பந்தரில் உள்ள கடற்படை தளத்திலிருந்து, வடக்கு அரபிக்கடல் வரையிலான பகுதியை, கடந்த புதன்கிழமை அன்று தங்கள் வசம் எடுத்துக் கொண்டனர்.

டோர்னியர் - 228 ரக விமானம் மூலம், அந்தப் பகுதியில் உளவு மற்றும் கண்காணிக்கும் பணியை மேற்கொண்டுள்ளனர். தரைவழிப் பயிற்சி மற்றும் விரிவான பணி அனுபவம் குறித்த பயிற்சிகளைப் பல மாதங்களாகப் பெற்ற பிறகே, ஐந்து பெண்களும் இந்தச் சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
பாதுகாப்பு சேவையில் பெண்களுக்கான புதிய கதவுகளைத் திறக்க வழிவகுக்கும் இந்த முன்னெடுப்பு குறித்து கடற்படை செய்தித்தொடர்பாளர் விவேக் மத்வால் கூறுகையில், "ஆயுதப்படையில் மாற்றத்தை ஏற்படுத்துவதில் இந்தியக் கடற்படை முன்னணியில் இருக்கிறது.

அதில் ஓர் அங்கமாகப் பெண்களுக்கு அதிகாரமளிக்கும் முயற்சியாக நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்த சாகசப் பயணத்தினால், கடற்படையிலுள்ள பெண்கள் கூடுதலான பொறுப்பை ஏற்கவும், சவாலான பணிகளைப் பெண்கள் விரும்பி செய்யவும் தன்னம்பிக்கை கிடைக்கும். பெண்கள் தங்களின் முழு சக்தியை வெளிப்படுத்திய செயலாக இந்த சாகசம் அமைந்துள்ளது" என்று பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.