Published:Updated:

60 ஆண்டுக்கால சட்டத்துக்கு முற்றுப்புள்ளி- இந்தியர்கள் ஜம்மு - காஷ்மீர், லடாக்கில் நிலம் வாங்கலாம்!

ஜம்மு - காஷ்மீர், லடாக்
ஜம்மு - காஷ்மீர், லடாக் ( Maps of India )

`லடாக், ஜம்மு - காஷ்மீர் பகுதிகளில் இந்தியர்கள் யார் வேண்டுமானாலும் நிலம் வாங்கலாம்’ என்ற புதிய நிலச்சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்திருக்கிறது.

மத்திய அரசு கடந்த ஆண்டு 370-வது பிரிவை ரத்து செய்தது. இந்தப் பிரிவுதான் ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கியது. 370-வது பிரிவை ரத்து செய்ததுடன், லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீரை யூனியன் பிரதேசங்களாகப் பிரித்து. அதோடு, இந்தியாவின் பிற பகுதிகளோடு ஜம்மு காஷ்மீரை இணைப்பதற்கு பல்வேறு சட்டத் திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவந்திருக்கிறது.

இந்தநிலையில், மத்திய அரசு நேற்று ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது. இந்தச் சட்டத்தின் மூலம், இந்தியக் குடியுரிமை உடையவர்கள் லடாக், ஜம்மு காஷ்மீரில் நிலம் வாங்க முடியும். அதேநேரம், விவசாய நிலங்களை மட்டும் வாங்க இயலாது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் இந்த உத்தரவு, `ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு மூன்றாம் ஆணை, 2020’ என்று அழைக்கப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் வளர்ச்சி சட்டத்தின் 17-வது பிரிவில், `ஜம்மு காஷ்மீரின் நிரந்தரக் குடிமக்கள்’ என்ற வார்த்தை நீக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சுமார் 60 ஆண்டுகளாக இருந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

கடந்த செப்டம்பர் 2020-ல், ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் 2020 குடிமக்கள் சான்றிதழ் (நடைமுறை) விதிகளைத் திருத்தியது. இந்த நிலச் சட்டத் திருத்தம் உடனடியாக அமலுக்குவருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

 `ஜம்மு காஷ்மீர் கொடி ஏற்றப்பட்டால்தான், தேசியக்கொடியை மேலெழுப்புவோம்’ - மெஹபூபா முப்தி உறுதி

மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்துப் பேசிய ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, `இந்தச் சட்டத்தின் மூலம் விவசாய நிலங்களை மற்ற பயன்பாடுகளுக்கு மாற்ற முடியாது. அதேநேரம், கல்வி நிலையங்கள், சுகாதார அமைப்புகளை விவசாய நிலங்களில் ஏற்படுத்தத் தடை இல்லை. அதற்காக விதிகள் திருத்தப்பட்டிருக்கின்றன’ என்று கூறினார்.

அதேநேரம், மத்திய அரசின் இந்தச் சட்டத்தின் மூலம் `ஜம்மு காஷ்மீர் விற்பனைக்கு...’ என்று அறிவிக்கப்பட்டிருப்பதாக அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விமர்சித்திருக்கிறார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டிருக்கும் அவர், ``ஜம்மு-காஷ்மீர் நில உரிமைச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் சட்டத் திருத்தங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதன் மூலம், விவசாய நிலங்கள் அல்லாதவற்றை வாங்குவதும், விவசாய நிலங்களை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதும் எளிதாகியிருக்கிறது. ஜம்மு -காஷ்மீர் விற்பனைக்குத் திறந்துவிடப்பட்டிருக்கிறது. குறைந்த அளவு நிலங்களை வைத்திருக்கும் நில உரிமையாளர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள்’’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு